
எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், கடந்த காலத்தில் ஏதாவது தவறு செய்து, அதனால் ஏற்பட்ட பாதிப்பை உணரும்போதும், அந்த தவறைத் திருத்த டைம் ட்ராவல் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசை நம் அனைவருக்குமே எட்டிப் பார்த்திருக்கும்.
1885-ம் ஆண்டு புகழ்பெற்ற எழுத்தாளர் எச்.ஜி.வெல்ஸ் என்பவரால் எழுதப்பட்ட `Time Machine' என்ற நாவல் வெளிவந்த பிறகுதான், பொது மக்களிடையே டைம் ட்ராவல் குறித்த ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன்பின், டைம் ட்ராவல் குறித்து ஏராளாமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
உலகம் முழுக்க டைம் ட்ராவல் கருத்தை முன்வைத்து பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டும் வருகின்றன. இந்த திரைப்படங்கள் டைம் ட்ராவல் குறித்த ஆர்வத்தை மக்களிடையே மேலும் அதிகரிக்க வழிவகுக்கிறது.
அவ்வாறு, டைம் ட்ராவல் செய்வது சாத்தியமா? என்று கேட்டால், அதற்கும் எதிர்காலம் சென்றுதான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், டைம் ட்ராவல் செய்த அனுபவத்தை நம்மால் பெற முடியும் என்று சொன்னால், நம்பித்தான் ஆக வேண்டும். ஆம், அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் இருக்கும் டியோமெட் தீவுகள் இதனை சாத்தியமாக்குகிறது.
டியோமெட் தீவுகள்:
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தையும், ரஷ்யாவின் சுகோட்கா (Chukotka) மாநிலத்தையும் பிரிக்கும் பெரிங் ஜலசந்தியில் டியோமெட் தீவுகள் என்று அழைக்கப்படும் இரு பாறைத் தீவுகள் அமைந்துள்ளன. ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் எல்லையாகவும் இவை உள்ளன.
அமெரிக்காவிற்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றபோது, இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ள இந்த எல்லை 'பனித்திரை' என்று அழைக்கப்பட்டது.
சர்வதேச தேதிக் கோடு (International Date Line) இவற்றின் குறுக்கே செல்வதால், டியோமெட் தீவுகள் 'நேற்று மற்றும் நாளை தீவுகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
இரண்டு தீவுகளும் 3.8 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், பிக் டியோமெட் தீவு லிட்டில் டியோமெட் தீவை விட, 21 மணிநேரம் பின்னதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிக் டியோமெட் தீவு :
டியோமெட் தீவுகளில் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட தீவு, பெரிய தீவு, பிக் டியோமெட் , ரட்மானோவ் தீவு என்று அழைக்கப்படுகிறது. இது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை 'நேற்று தீவு' என்றும் அழைப்பதுண்டு.
பிக் டியோமெட் தீவு கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 477 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நிரந்தரமாக மக்கள் யாரும் வசிப்பதில்லை. ஆனால், ரஷ்யாவின், வானிலை ஆய்வு மையம் மற்றும் எல்லை சேவை நிலையம் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீவில், சில கடல் பறவை இனங்கள், வில்ஹெட் மற்றும் சாம்பல் திமிங்கலங்கள், துருவக் கரடிகள் போன்ற உயிரினங்களை காண முடியும்.
லிட்டில் டியோமெட் தீவு:
laliq மற்றும் லிட்டில் டியோமெட் என்று அழைக்கப்படும் சிறிய தீவானது, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தீவு 'நாளை தீவு' என்று அழைக்கப்படுகிறது.
லிட்டில் டியோமெட் தீவு, கடலில் இருந்து 494 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள டியோமெட் அல்லது ஐலிக் என்றும் ஒரே ஒரு கிராமத்தில் மட்டும் 100-க்கும் குறைவான மக்கள் வசிக்கின்றனர். குளிர்காலத்தில் முழுவதும் பனிமூட்டமாகவும் கோடைக்காலத்தில் மேக மூட்டமாகவும் இத்தீவு காணப்படும்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், குளிர்காலத்தில், சில நேரங்களில் ஜலசந்தியின் மேற்பரப்பை பனிக்கட்டிகள் சூழ்ந்திருக்கும். இவை இந்த இரண்டு தீவுகளையும் இணைக்கும் வகையில் ஒரு பனிப்பாலத்தை உருவாக்குகின்றன. இந்தப் பாலத்தில் ஒருவர் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நடந்து செல்ல முடியும். ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. பெரிங் ஜலசந்தியை கடப்பதற்கு சட்டப்படி அனுமதி இல்லையாம்!