உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கோட்டை நகரம், ஃபதேபூர் சிக்ரி. அதாவது வெற்றியின் நகரம்.
பதினைந்தாம் நூற்றாண்டில் பாபர், ஹுமாயூனுக்குப் பிறகு அடுத்த வாரிசான அக்பர் ஆக்ராவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார். அச்சமயம் அவருடைய இரட்டைக் குழந்தைகள் திடீரென்று மரணமடைந்தன. மனமுடைந்த அக்பர், ஆக்ராவிலிருந்து 40 கி.மீ. தொலைவிலிருந்த சிக்ரியின் குகை ஒன்றில் வசித்து வந்த ஷேக் சலீம் சிஸ்தி என்ற சூஃபி ஞானியை அடைந்து தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார். அவர் ஆறுதல் அளித்ததோடு ஓர் ஆண் மகவு அவருக்குக் கிட்டும் என்று ஆசியும் அருளினார். அடுத்த இரண்டாவது ஆண்டில் அக்பருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ஞானியின் நினைவாக சலீம் என்று பெயர் சூட்டினார் மன்னர். அவனே ஜஹாங்கீர் என்ற பெயருடன் அக்பருக்குப் பிறகு அரியணை ஏறினான்.
1571ம் ஆண்டு ஆக்ராவிலிருந்து, ஃபதேபூர் சிக்ரிக்கு தலைநகரை மாற்றினார் அக்பர். அந்தப் பகுதியை சிவப்பு வண்ணமாக, எழில்மிகு தோற்றத்துடன் உருவாக்கினார். அரண்மனைகள், மசூதி, மண்டபங்கள், குடியிருப்புகள் என்று அங்கே கட்டடங்கள் பெருகின. இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமிய கட்டடக் கலைகளின் ஒருங்கிணைந்த நேர்த்தியுடன் கலை வண்ணம் மிக்கதாக இவை விளங்கின. இத்தகைய அமைப்பில் இந்த நகரம்தான் பாரதத்திலேயே முதலாவது என்று சொல்லப்படுகிறது. இந்த நகரம் ஆரம்பத்தில் ஃபதேஹாபாத் என்றும் பின்னர் ஃபதேஹ்பூர் என்றும் பெயர் மாறி இறுதியாக ஃப்தேபூர் சிக்ரி என்றானது.
சிவப்பு மணல் மற்றும் கற்களால் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரைச் சுற்றிலும் சுமார் ஐந்து மைல் நீளத்துக்கு சுவர், உயர்ந்து நிற்கிறது. இதில் தில்லி வாசல், சிகப்பு வாசல், ஆக்ரா வாசல் முதலான நுழைவாயில்கள் நம்மை நகருக்குள் அனுமதிக்கின்றன. தொன்மை மிகுந்த பல வடிவ கட்டடங்கள் நம் கண்களைக் கவர்கின்றன.
இங்கே புலந்த் தர்வாஸா என்ற நுழைவாயில் ஒன்று இருக்கிறது. அதாவது ‘பெரிய வாசல்’ என்று பொருள். 54 மீட்டர் உயரத்தில் ஓங்கியிருக்கும் பிரமாண்டம். உள்ளே நுழைந்தால் ஜும்மா மஸ்ஜித் என்ற மசூதியைக் காணலாம். இதன் கூரை, விரித்துக் கவிழ்த்த குடை போன்ற அமைப்பில் இருக்கிறது. இதன் சுவர்களில் செதுக்கப்பட்ட மிஹ்ராப் என்ற கலையம்சம் மிக்க சிற்ப வேலைப்பாடுகள் மனதைக் கவரும்.
இந்தக் கோட்டையின் முற்றத்தில் அமைந்துள்ள சூஃபி ஞானி சலீம் சிஸ்தியின் வெண்பளிங்கு சமாதியைச் சுற்றி நேர்த்தியான வேலைப்பாடுகளும் ‘ஜாலீ‘ எனப்படும் பலவடிவ துவாரங்களைக் கொண்ட பளிங்கு ஜன்னல்களும் வியக்க வைப்பவை.
மக்களை மன்னர் நேரடியாக சந்திக்கும் நடைமுறை, அக்பர் காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாட்டுக்கு வசதியாக ‘திவானே ஆம்‘ என்ற பிரமாண்ட அரங்கம் இன்றும் பொலிவுடன் திகழ்கிறது. இது தவிர மன்னர் பிரமுகர்களை சந்திக்கும் ‘திவானே காஸ்‘ அரங்கம், அக்பர் உருவாக்கிய தீன் இலாஹி மதத்தின் அடிப்படைத் தத்துவங்களைப் பாடும் இபாதத் கானா என்ற வழிபாட்டுக் கூடம், சங்கீத மேதை தான்ஸேனுடைய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்ற பெரிய மேடையைச் சுற்றி அமைந்திருக்கும் சிற்ப எழில் கொஞ்சும் அனூப் தலாவ் என்ற தடாகம், அமைச்சர் பீர்பால் வசித்த இல்லம் என்று சரித்திரம் பேசும் பல அம்சங்களை இந்த நகரில் கண்டு மகிழலாம்.
வரலாற்றுப் பாரம்பரியமும் மற்றும் அற்புதமான கட்டடக் கலை நுணுக்கமும் கொண்டு விளங்கும் ஃபதேபூர் சிக்ரி, யுனெஸ்கோ அமைப்பால், உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.