
பயணங்கள் பல வகைகளாக பிரிக்கப்படுகின்றன. பயணத்தின் நோக்கம், இடம் மற்றும் ஈடுபடும் நடவடிக்கைகளைப் பொறுத்து இவை மாறுபடுகின்றன.
உள்நாட்டுப் பயணம்:
ஒரு நாட்டில் வசிப்பவர்கள் அந்த நாட்டின் எல்லைக்குள் பயணம் செய்வதை குறிக்கும். உள்நாட்டில் உள்ள இடங்களை பார்ப்பதற்காக செய்யப்படும் பயணம் இது. இது விமானம், ரயில், பேருந்து அல்லது சொந்த கார் போன்ற எந்த ஒரு போக்குவரத்து முறையிலும் பயணம் செய்யலாம். இது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது. உள்நாட்டுப் பயணம் ஒரு நாட்டின் கலாச்சாரம், இயற்கை அழகு மற்றும் வரலாற்றை அனுபவிக்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
வணிகப் பயணம்:
தொழில் தொடர்பான அல்லது வேலை தொடர்பான நோக்கங்களுக்காக செய்யப்படுவது வணிகப் பயணம். இதில் கூட்டங்கள், மாநாடுகள், தொழில்முறை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வதைக் குறிக்கும். இது புதிய சந்தைகளை ஆராயவும், வாடிக்கையாளர் களுடன் தொடர்பில் இருக்கவும், புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.
புனிதப் பயணம்:
புனிதப் பயணம் என்பது மத காரணங்களுக்காக அல்லது ஆன்மீக காரணங்களுக்காக செய்யப்படுகின்ற பயணம். ஒரு மதத்தின் புனிதத் தலங்களுக்குச் சென்று, அங்குள்ள சடங்குகளைச் செய்து, வழிபட்டு ஆன்மீக அனுபவத்தை பெறுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. புனித பயணங்கள் ஒருவருடைய மத நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், கடவுளுடன் ஒரு ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதற்கும், சிறந்த ஆன்மீக அனுபவத்தை பெறுவதற்கும் மேற்கொள்ளப்படுகிறது.
கல்விப் பயணம்:
அறிவைப் பெறுவதற்கும், புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும் மேற்கொள்ளப்படும் பயணம் இது. கல்விப் பயணங்கள் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும், உலகைப் பற்றிய புரிதலை அதிகரிக்கவும் சிறந்த வழியாகும். பள்ளிக்கு வெளியே மாணவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று, புத்தகங்களில் படிப்பதற்கு பதிலாக, களப்பயணங்கள் மூலம் நேரில் பார்த்து அறிவைப் பெறுகிறார்கள்.
ஆடம்பரப் பயணம்:
சொகுசு மற்றும் வசதிகளுடன் கூடிய ஆடம்பரமான சொகுசுப் பயணம். இதில் உயர் ரக விடுதிகள், தனிப்பட்ட விமானங்கள், சுவையான உணவு, பிரத்யேகமான உல்லாசம் பயணங்கள் போன்றவற்றை அனுபவிக்கும் பயணமாகும். இந்த வகையான பயணம் வழக்கமான பயண அனுபவத்தை விட அதிக வசதிகள், மறக்க முடியாத அனுபவங்களை வழங்குகிறது.
குழுப் பயணம்:
நண்பர்கள், சக ஊழியர்கள் அல்லது குடும்பத்தினர் சேர்ந்து பயணம் செய்வது குழு பயணம். குழுவாக பயணம் செய்யும் பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்படி செயல்பட சுதந்திரம் குறைவாக இருக்கும். இருந்தாலும் பாதுகாப்பு மற்றும் செலவு குறைவு காரணமாக இதை தேர்ந்தெடுப்பதுண்டு. குழுப் பயணங்கள் மக்களிடையே சமூக பிணைப்பை வலுப்படுத்தும். புதிய நபர்களை சந்தித்து பழகும் வாய்ப்பு கிடைக்கும்.
பட்ஜெட் பயணம்:
குறைந்த செலவில் பயணம் செய்வது. அதாவது செலவுகளை கட்டுப்படுத்தி குறைந்த செலவில் பயணம் செய்வதற்கான வழியாகும். இதன் மூலம் அதிக அனுபவங்களைப் பெறவும், புதிய இடங்களை பார்வையிடவும் முடியும். சீசன் அல்லாத நேரங்களில் பயணம் செய்வது, குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல்களுக்கு பதில் விடுதிகளில் தங்குவது, டாக்ஸி அல்லது வாடகை வண்டிகளை பயன்படுத்துவதற்கு பதில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் செலவுகளை குறைக்கலாம்.
வார இறுதி பயணங்கள்:
வார இறுதி பயணம் என்பது ஒரு குறுகிய பயணமாகும். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பயணம் அன்றாட வாழ்க்கையின் பிசியான அட்டவணையில் இருந்து விலகி ஓய்வெடுக்கவும், புதிய இடங்களைப் பார்வையிடவும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
சுற்றுலா பயணம்:
மக்கள் தங்கள் வழக்கமான வசிப்பிடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் சென்று, அங்குள்ள இடங்களை சுற்றிப் பார்ப்பதும், அனுபவங்களை பெறுவதும் என சுற்றுலாப் பயணத்தை ரசிக்கிறார்கள். பொதுவாக இது ஓய்வு அல்லது பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் பயணமாகும். இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு செல்வது, கலாச்சார இடங்கள், வரலாற்று இடங்கள் போன்றவற்றை பார்ப்பது மற்றும் மலையேற்றம், நீர் விளையாட்டு போன்ற சாகச செயல்களில் ஈடுபடுவது.