
மிகப்பெரிய போக்குவரத்தான ரயில்களில் பயணம் செய்யும்போது பொதுவாக மக்கள் வீடுகளில் இருந்து உணவு எடுத்துச்செல்வார்கள் அல்லது கேண்டினில் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு ரயிலில் பயணிப்பவர்களுக்கு மூன்று வேளையும் ரயிலிலேயே உணவு கொடுக்கப்படுகிறது. அதற்கு பணம் செலுத்த வேண்டியது இல்லை. இலவசமாகவே கொடுக்கிறார்கள். அந்த தனித்துவமான ரயில் பற்றி இப்பதிவில் காண்போம்.
மூன்று வேளையும் இலவசமாக உணவு கொடுக்கப்படும், இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் அந்த ரயிலின் பெயர் சச்கண்ட் எக்ஸ்பிரஸ். (sachkhand express) மகாராஷ்டிராவின் நாந்தேட் - பஞ்சாபின் அமிர்தசரஸ் இடையே 12715 என்ற எண்ணில் பயணித்து வருகிறது சச்கண்ட் எக்ஸ்பிரஸ். இந்திய வரலாற்றில் ஆன்மீக ரீதியாக மிக முக்கிய இடங்களாக மகாராஷ்டிராவின் நாந்தேட் மற்றும் அமிர்தசரஸ் ஆகியவை இருக்கின்றன.
நாந்தேட் 10வது சீக்கிய குருவான ஸ்ரீ குரு கோபிந்த் சிங்கின் இறுதி ஓய்விடமாக அனைவராலும் போற்றப்படுகிறது. மேலும் சீக்கிய மதத்தின் புனிதமான ஆலயமான பொற்கோவில் அமிர்தசரத்தில் அமைந்துள்ளது. இதனால் சச்கண்ட் எக்ஸ்பிரஸில் பயணிப்பது ஆன்மீக யாத்திரையாக பயணிப்பவர் களுக்கு இருக்கிறது.
சச்கண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 1990களில் தொடங்கி இன்றுவரை செயல்பாட்டில் உள்ளது. சுமார் 2000 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் இந்த ரயிலானது 33 மணி நேர பயணத்தில் 39 நிறுத்தங்களில் நின்று செல்கிறது . காலை மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் இந்த 33 மணிநேர பயணத்தில் ரயிலில் பயணிப்பவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
சீக்கிய மதத்தில் வழங்கப்படும் ஒரு பொது சமய விருந்து, சீக்கிய கோவிலான குருத்வாராவின் சமூக சமையலறை லங்கர் (Langar) என்று அழைக்கப்படுகிறது. சமூக, மத மற்றும் பொருளாதார பின்னணியை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இலவசமாக இந்த சச்கண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பவர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் நடைமுறையின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது.
இந்த உணவுகள் 6 முக்கிய நிலையங்களான புது தில்லி, போபால், பர்பானி, ஜல்னா, ஔரங்காபாத் மற்றும் மராத்வாடா ஆகிய நிறுத்தங்களில் பயணிகள் நீண்ட நேரம் நின்று வசதியாக சாப்பிடும் வகையில் நின்று உணவுகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு குருத்துவாராக்களால் பெறப்படும் நன்கொடைகளை வைத்து இந்த ரயிலில் பயணிப்பவர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ரயிலில் பயணிக்கும் பொது வகுப்பு பிரிவினரிலிருந்து ஏசி பெட்டி வரை பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒரே மாதிரியான உணவுகள் பரிமாறப்படுகின்றன. எளிதில் ஜீரணமாகும் வகையில் பருப்பு, சோளம், கிச்சடி மற்றும் உருளைக் கிழங்கு அல்லது காலிபிளவர் போன்ற காய்கறி உணவுகளில் சமைத்து சுவையாகவும் சத்தானதாகவும் பரிமாறுகின்றனர். உணவு வீணாவதை தடுப்பதற்காகவும் சுகாதாரத்தை பராமரிக்கவும் இந்த சேவையை பெற பயணிகள் தங்கள் சொந்த பாத்திரங்களை கொண்டு வரவேண்டும்.
1990 இல் தொடங்கப்பட்ட சச்கண்ட் ரயில் புனித யாத்திரை சேவைகளுக்கு பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயணம் செய்யமுடியும். ரயில் தொடங்கப்பட்ட காலங்களில் இருந்ததை விட தற்போது காலப்போக்கில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து இருந்தாலும் உணவு வழங்கும் இந்த பாரம்பரியம் மட்டும் தொடர்ந்து தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்டு வருவது போற்றுவதற்குரியதாக இருக்கிறது.