
ஒர்க்கிங் ஹாலிடே விசா(passenger Working Holiday Visa) என்பது இளம் பயணிகள், குறிப்பிட்ட நாடுகளில் குறிப்பிட்ட காலத்திற்கு தங்குவதற்கும், வேலை செய்வதற்கும், பயணம் செய்வதற்கும் அனுமதிக்கும் ஒரு கலாச்சார பரிமாற்ற விசாவாகும். இந்த விசா, பயணத்திற்குத் தேவையான பணம் சம்பாதிக்கவும், வெளிநாட்டு கலாச்சாரத்தை அனுபவிக்கவும் உதவுகிறது. இது ஒரு சாதாரண சுற்றுலா விசா வழங்குவதைவிட அதிக காலம் தங்குவதற்கும், வேலை செய்வதற்கும் உதவுகிறது.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று சில நாடுகள் "ஒர்க்கிங் ஹாலிடே விசா" என நமக்கான வாய்ப்புக் கதவை திறந்து வைத்துள்ளார்கள். அங்கேயே வேலை செய்து சம்பாதித்து, அங்கேயே ஊர் சுற்றி செலவு செய்து வருவதுதான் ஒர்க்கிங் ஹாலிடே விசா எனப்படும்.
இந்த விசா பொதுவாக 18 முதல் 30 வயதுவரை, சில நாடுகளில் 35 வயது வரை கூட இந்த வாய்ப்பு பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் நாம் வேலை செய்து அதன் மூலம் நம் பயணச்செலவுகளை சமாளிக்க முடியும். பயணம் செய்யவும், அந்த நாட்டில் உள்ள கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும் இது ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் இந்த ஒர்க்கிங் ஹாலிடே விசாவின் காலம் மாறுபடும். ஆனால் பொதுவாக 12 மாதங்களுக்கு இது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இந்த விசாவிற்கு வெவ்வேறு நிபந்தனைகள் மற்றும் தேவைகள் இருக்கும். இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கும் பொழுது, நம் வயது, பாஸ்போர்ட் மற்றும் மற்ற தேவைகள் சரிபார்க்கப்படும்.
இது வெளிநாட்டில் நீண்ட காலம் தங்கி, பயணச் செலவுகளை ஈடுகெட்ட வேலைகளை செய்வதற்கும் மற்றும் பயணங்களை மேற்கொள்வதற்கும் அனுமதிக்கிறது. அந்த நாட்டினுடைய வாழ்க்கை முறையை அனுபவிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இந்த விசா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அத்துடன் பயணம் செய்யும்பொழுது பணம் சம்பாதிக்க விரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. இதற்கு முன்கூட்டியே வேலை ஸ்பான்சர்ஷிப்பைக் கண்டறிய வேண்டிய அவசியமின்றி வெளிநாட்டிற்குச் செல்ல இது ஒரு சிறந்த வழியாகும்.
பயணத்திற்கான நிதியுதவி, செயல்பாட்டு ஆங்கில அறிவு மற்றும் சுகாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதற்கு முதலில் ஒரு பேலட் (ballot) முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதிலிருந்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
இதன் நன்மைகள் என்று பார்த்தால் புதிய மக்களை சந்திக்கவும், பரந்த அளவிலான மாறுபட்ட நிலப்பரப்புகளை ஆராயவும், அவர்களின் கலாச்சாரத்தை தெரிந்துகொள்ளவும், புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும், பரந்த விசாலமான அறிவைப் பெறவும் இது உதவுகிறது.