கூர்க் கர்நாடகாவில் உள்ள ஒரு அழகிய மலை வாழ்விடமாகும். தென்மேற்கு கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பசுமையான காடுகள், அற்புதமான இயற்கை காட்சிகளுடன் ஆண்டு முழுவதும் குளிர்ந்த கால நிலை கொண்டுள்ளது. கூர்க் அதன் பசுமையான காடுகள், உயர்ந்த மலைகள், மயக்கும் நீர்வீழ்ச்சிகள், பரந்த காபி தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. இயற்கை ஆர்வலர்கள், சாகச விரும்பிகள் மற்றும் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடமிது.
'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படும் குடகு மலையில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. மடிக்கேரி கோட்டை, அபே நீர்வீழ்ச்சி, காவிரி நதியின் பிறப்பிடமான தலக்காவேரி, பைலுகுப்பே புத்த கோவில் போன்றவை பார்க்க வேண்டிய இடங்கள்.
இயற்கையை அதன் அருகில் இருந்து ரசிக்கக்கூடிய வாய்ப்பை இந்த குடகுமலை வழங்குகிறது. இயற்கை அழகுடன் ஒரு புகழ்பெற்ற கலாச்சார மையமாகவும் திகழ்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய திபெத்திய குடியேற்றமான பைலகுப்பேவின் தாயகமாக விளங்குகிறது.
யானைகள் முகாமில் யானைகள் குளிப்பதையும், அதற்கு உணவளிப்பதையும் கண்டுகளிக்கலாம். யானைகள் பயிற்சி பெறுவதையும் கண்டு வியக்கலாம். யானைகள் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில், அதாவது பசுமையான காடுகளின் நடுவில் இந்த முகாம் அமைந்துள்ளது. சிறுத்தை, சோம்பல் கரடி, மயில் போன்ற பிற வன விலங்குகளையும் இப்பகுதிகளில் காணலாம். சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய அறைகள் மற்றும் உணவுகள் கிடைக்கின்றன.
இரண்டாவது பெரிய திபெத்திய குடியேற்றமான பைலகுப்பே நகரத்தில் அமைந்துள்ள தங்கக்கோயில் மிகவும் பிரபலமானது. நாம்ட்ரோலிங் மடாலயம் என்று அழைக்கப்படும் இது திபெத்திய கட்டிடக்கலை பாணியின் சிறந்த எடுத்துக்காட்டாகும். இங்கு 'லோசர் திருவிழா' என்றழைக்கப்படும் திபெத்திய புத்தாண்டு ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டமாகும். இதில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள்.
அபே நீர்வீழ்ச்சி மடிக்கேரி நகரத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அப்பி நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படும் இது சுமார் 70 அடி உயரத்தில் இருந்து பரந்த பாறைகளின் மீது விழுவது அற்புதமான காட்சியாக உள்ளது. கர்நாடகாவின் மற்ற நீர்வீழ்ச்சிகளுடன் ஒப்பிடும்பொழுது இது உயரம் அதிகம் இல்லை என்றாலும் இதன் பரந்து விரிந்த பகுதியை காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு அனுமதிக்கப்படுகிறது. மடிக்கேரியில் தங்குவதற்கு ஏராளமான ஹோம்ஸ்டேக்கள், பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் உள்ளன.
மடிக்கேரி கோட்டை 17ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் முத்துராஜாவால் கட்டப்பட்டது. கோட்டையின் உள்ளே ஒரு அரண்மனையும் கட்டப்பட்டது. இக் கோட்டை பல போர்களைக் கண்டுள்ளது. அதனால் இது ஒரு வளமான வரலாற்று மற்றும் கலாச்சார பின்னணியை குறிக்கிறது. கோட்டையில் உள்ளேன் வீரபத்திரனுக்கு கோவில் ஒன்று இருந்தது.
அதனை 1855 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அகற்றி அந்த இடத்தில் ஒரு தேவாலயத்தை கட்டினர். இப்பொழுது இது ஒரு அருங்காட்சியமாக மாற்றப்பட்டு தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படுகிறது. கோட்டையின் நுழைவாயிலில் இரண்டு யானைகளின் கல் சிலைகள் உள்ளன. கோட்டைக்குள் மகாத்மா காந்தி பொது நூலகம், மாவட்ட சிறைச்சாலை, கோட் மகா கணபதி கோவில் ஆகியவை உள்ளன.
மடிக்கேரி கோட்டையை பார்வையிட நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது. காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை திறந்திருக்கும் கோட்டை திங்கட்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.
தலக்காவேரி பாகமண்டலாவிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பிரம்மகிரி மலைகளில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் உயரத்தில் உள்ள புனித தலமாகும். இது கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இதுவே காவிரி ஆற்றின் மூலம். இங்கு தோன்றும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழக மாநிலங்களில் பாய்ந்தோடி வங்கக்கடலில் கலக்கிறது. இது கொடவர்களின் வழிபாட்டுத் தலமாகும். சிறப்பு நாட்களில் குளிக்க ஒரு புனித இடமாக கருதப்படுகிறது. இக் கோவில் 2007ஆம் ஆண்டு மாநில அரசால் விரிவாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கூர்க்கை பார்வையிட சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரை. குடகு மலையில் அற்புதமான மலையேற்றப் பாதைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், கோவில்கள், கோட்டைகள், பள்ளத்தாக்குகள் என்று சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நிறைய விஷயங்கள் உள்ளன. முடிந்தால் ஒருமுறை சென்று வாருங்களேன்!