
கொழுக்குமலை, மேற்குத் தொடர்ச்சி மலைகளில், தமிழ்நாடு, கேரளாவின் எல்லையில், தேனி, இடுக்கி மாவட்டத்திற்கு அருகில் சுமார் 8,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஓர் அற்புதமான சுற்றுலாத்தலமாகும். தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்த இடம் தேனியிலிருந்து சுமார் 65 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது.
"கொழுக்கு" என்றால் உயர்ந்த என்று பொருள். கொழுக்குமலையை உலகின் மிக உயரமான தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகக்கூறலாம். இன்றும் இங்கு பாரம்பரியமான "ஆர்த்தோடாக்ஸ்" (Orthodox) முறையில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. நவீன இயந்திரங்களின் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. கை தேர்ந்த தொழிலாளர்கள் தேயிலை இலைகளைப் பறித்து, உலர்த்தி, நொதிக்க வைத்து, உருட்டி, தரம் பிரித்து தேயிலைத்தூள் தயாரிக்கின்றனர். இந்த தேயிலையின் தனித்துவமான நறுமணம், சுவை மற்றும் தரத்திற்கு புகழ் பெற்றது.
கொழுக்குமலை அடர்ந்த பசுமையான தேயிலை தோட்டங்கள் மலைச்சரிவுகளில் கம்பளம் விரித்தது போல் அழகாகக் காட்சியளிக்கின்றன. மேகங்கள் தாழ்வாக இறங்கி மலைகளோடு உரசிச் செல்லும் அற்புதக் காட்சியை நம்மால் இங்கு அனுபவிக்க முடியும். தொலைவில் கேரளாவின் பசுமையான நிலப்பரப்பு மற்றும் மலைகளின் வரிசைகள் நம் கண்களுக்கு விருந்தாக அமையும். அதிகாலை சூரிய உதயம், மற்றும் மாலை சூரிய அஸ்தமனம் இவற்றின்போது வானம் பல வண்ணங்களில் காணப்படுவது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
கொழுக்குமலை நகர வாழ்க்கையின் இரைச்சல், மாசுபாட்டிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருக்கிறது. எனவே, இங்கு தூய்மையான காற்றினை சுவாசிக்கவும், பறவைகளின் இன்னிசை கேட்கவும், இயற்கையின் அமைதியை அனுபவிக்கவும் நம்மால் முடியும். இது மன அமைதியை விரும்புபவர் களுக்கு ஒரு சிறந்த ஓய்வுத் தலமாகும். இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்துள்ளது.
கேரளாவின் மூணாறிலிருந்து சுமார் 35-40 கிலோமீட்டர் தூரத்தில் கொழுக்குமலை உள்ளது. ஜீப் பயணம் கரடுமுரடான, வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகளில் சுமார் 1.5 முதல் 2 மணி நேரம் வரை ஆகும். வழியெங்கும் நாம் பார்க்கும் அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பள்ளத்தாக்குகள்ள் நம்மை மெய்மறக்கச் செய்யும்.
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் இருந்து கொழுக்குமலைக்கு நேரடி சாலை வசதி குறைவாகவே உள்ளது. தேனி மற்றும் போடிமேட்டில் இருந்து கொழுக்குமலைக்கு செல்ல பஸ் வசதியும் உள்ளது. கொழுக்குமலையில் அடிப்படை வசதிகளுடன் கூடிய சில தங்கும் விடுதிகளும் பாரம்பரிய தேயிலை தோட்ட பங்களாக்களும் உள்ளன. இவை பெரும்பாலும் தனியாருக்கு சொந்தமானவை.
முன்கூட்டியே பதிவு செய்து விட்டு செல்வது நல்லது. இங்கு தங்குவது, விடியற்காலையின் அமைதியையும், இரவின் நட்சத்திர வெளிச்சத்தையும் அனுபவிக்க ஒரு அரிய வாய்ப்பாகும். மின்சாரம் மற்றும் பிற நவீன வசதிகள் மிகக்குறைவாகவே உள்ளன. கொழுக்குமலையில் உள்ள தங்குமிடங்களில் எளிய, உள்ளூர் உணவு வகைகள் கிடைக்கும்.
பரந்து விரிந்த தேயிலை தோட்டங்களில் நடந்து செல்வது மட்டுமல்லாமல், உள்ளூர் தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை இலைகளை பறிக்கும் அனுபவத்தையும் இங்கு பெறலாம்.புதிதாக தயாரிக்கப்பட்ட தேயிலையின் சுவையை அங்கேயே ருசிப்பது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.
சூரிய உதயம், அஸ்தமன காட்சிகளைப் பார்ப்பது ஓர் அற்புதமான அனுபவமாக இருக்கும். மேகங்கள் சூழ்ந்திருக்கும்போது, சூரிய கதிர்கள் மேகக்கூட்டங்களுக்கு இடையே ஊடுருவி வரும் காட்சி சொர்க்கத்தினை பார்ப்பதுபோல இருக்கும். புகைப்பட ஆர்வலர்களுக்கு இது ஒரு விருந்தளிக்கும் இடமாகும். கொழுக்குமலை மற்றும் அதை சுற்றியுள்ள காடுகள் பல்வேறு வகையான பறவைகளுக்கு புகலிடமாக உள்ளது. நடந்து செல்லும் போது காட்டு யானைகள், காட்டெருமைகள் மற்றும் பல்வேறு சிறிய வனவிலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பும் உள்ளது.
கொழுக்குமலையைச் சுற்றி உள்ள அடர்ந்த சோலை மரங்கள், உயர்ந்த புல்வெளிகள் மற்றும் சிறு அருவிகள் நமது பயணத்தை முழுமையாக அனுபவிக்க உதவும். உள்ளூர் வழிகாட்டிகளின் உதவியுடன் பாதுகாப்பான மலையேற்றத்தை மேற்கொள்ளலாம். கொழுக்குமலை வெறும் ஒரு சுற்றுலாத் தலம் மட்டுமல்ல, அது இயற்கையின் மடியில் அமைந்திருக்கும் ஒரு சுற்றுலாத் தலமும் உலகம் ஆகும்.
பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, இயற்கையோடு ஒன்றிணைந்து அமைதியைத் தேடுபவர்களுக்கு கொழுக்குமலை ஒரு சிறந்த புகலிடமாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.