பூமிக்கு மேலே 5 மாடி கட்டிடங்களைப் பார்த்து வியந்திருக்கிறோம். ஆனால் பூமிக்குள் ஐந்து தளங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ஜெர்மெனியின் மியூனிக் நகருக்கு விஜயம் செய்தால் நீங்கள் அதை கண்டு களிக்கலாம்.
அண்டர் கிரவுண்டு என்று சொல்லக்கூடிய பாதாள இரயில், ஜெர்மெனியின் அனைத்து பெரிய நகரங்களிலும் உண்டு. நிலப்பரப்பின் கீழே பூமியை குடைந்து பிளாட்ஃபார்ம் அமைத்திருக்கிறார்கள்.
பெர்லினில் முதன் முதலாக பாதாள இரயில் சேவை மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது எப்போது தெரியுமா? 1902 ம் ஆண்டு . அதன் பின் ஒவ்வொன்றாக ஒவ்வொரு நகரங்களிலும் இந்த அண்டர் கிரவுண்டு ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
நான் மியூனிக் நகரில் இருந்த போது 'கார்ல்ஸ் பிளாட்ஸ்' -ல் பூமிக்கு கீழே ஐந்து தளங்கள் இருப்பதை பார்த்து வியந்து போயிருக்கிறேன். என் அம்மா இங்கே வந்திருந்தபோது "பூமிக்குள்ளே ஒரு பன மர ஆழம் இருக்கு பாரு" என்று சொன்னது இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
முதல் தளத்தில் பெரிய ஷாப்பிங் மால். இரண்டாவது லெவலில் ஸ்பார்கஸ்ஸ வங்கி, டிக்கெட் கவுண்டர் மற்றும் ஸ்னாக்ஸ் விற்கும் கடைகள்.
மூன்றாவது ஃப்ளோரில் S-பான் என்று சொல்லக்கூடிய டிரெயின் பிளாட்பார்ம். நான்காவது ஃப்ளோரில் S-பான் டிரெயின் மற்றும் U-பான் டிரெயினுக்கு மாறி செல்ல இடவசதி. கடைசியாக ஐந்தாவது தளத்தில் U-பான் என்று சொல்லக்கூடிய டிரெயின் பிளாட்ஃபார்ம்.
பூமிக்கு மேலே கட்டப்படும் பில்டிங்குகளில் பல ஃப்ளோர்களைப் பார்த்து பழகிய நமக்கு, தலைகீழாக பூமிக்குள்ளே 5 தளங்களைப் பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன்னமே அதாவது 1972 லேயே இந்த பாதாள இரயில் நிலையம் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஏறத்தாழ 87,000 பேர் தினமும் இந்த இரயில் நிலையத்தை உபயோகிக்கிறார்கள். அப்படியானால் எவ்வளவு ரயில்கள் தினமும் இந்த அண்டர் கிரவுண்டு ரயில்நிலையத்தை கடந்து செல்லும் என்று யோசித்துப் பாருங்கள்!
ஜெர்மெனியில் 'ஃபுட் ஷேரிங்' என்றொரு மொபைல் 'ஆப்' உள்ளது. வெப்சைட்டிலும் காணக் கிடைக்கிறது.
இது என்னவென்றால், நம்மிடம் ஏதாவது உணவு பொருட்கள் அதிகப்படியாக இருக்கிறதெனில், அந்த பொருளின் விபரம், போன் நம்பர், வீட்டு முகவரி & எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்ற விபரங்களை அந்த வெப்சைட்டில் போட்டு விட்டால் போதும். தேவைப்படுவோர் நம் வீட்டுக்கு வந்து வாங்கி செல்வர்.
வீட்டுக்குள் மற்றவர்களை விட விருப்பம் இல்லையெனில் வாசலில் வைத்து கதவை லாக் செய்துவிடலாம். அவர்கள் வந்து எடுத்து சென்று விடுவார்கள்.
அது மட்டுமல்லாமல் வாரம் ஒரு முறை கஷ்டப்படும் ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் அமைப்புகளும் ஜெர்மெனியில் நிறைய இருக்கின்றன. பிரட் போன்ற கடைகளும் மீந்து போனவற்றை கொடுக்கின்றன.
இப்படி இருந்தும் ஒரு வருடத்திற்கு ஏறத்தாழ 11 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் வீணாகி கொண்டிருக்கின்றன.
பட்டினியாளர்களுக்கு என்று விடியுமோ?
ஜெர்மெனி இப்பொழுது 'ஆப்பர்சுனிட்டி கார்டு' (point-based system) ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதனால் வேலை இல்லாமலும் கூட நீங்கள் ஜெர்மனிக்கு வந்து அதன் பின் வேலை தேடிக் கொள்ளலாம்.
பட்டப் படிப்புக்கு 4 புள்ளிகள், முன் அனுபவத்திற்கு 2 புள்ளிகள் என நிறைய விஷயங்களை வரையறுத்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் 6 பாயிண்ட் இருந்தாலே போதுமானது. விரும்புபவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.