
ஜெர்மெனியின் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் பலவிதமான வாகனங்கள் புழக்கத்தில் உள்ளன. பக்கத்து இடங்களுக்கு செல்ல பேருந்து, மற்றும் சாலையின் நடுவே செல்லும் டிராம் வண்டி- இவற்றை தினமும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். நானும் இந்திய கடைகளுக்கு செல்ல, டிராம் வண்டியைத் தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறேன்.
இது போக, சற்று தூரமான இடங்களுக்கு பூமிக்கு அடியில் செல்லும் U-bahn டிரெயின், பக்கத்து ஊருக்கு செல்ல 'S-bahn' என்ற ட்ரெயின் போன்ற வசதிகள் உள்ளன.
தூரமான இடங்களுக்கு செல்ல 'RE/RB' என்ற ட்ரெயின் உள்ளது. இது அதிக பட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
இதனினும் வேகமாக பக்கத்து நாடுகளுக்கு செல்லும் IC/ICE/CE டிரெயின் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அதாவது திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம்.
நாம் ஒரு இடத்துக்கு செல்லும்போது, அந்த ட்ரெயின் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றடைந்தால், 25 சதவீத பணத்தை 'Deutsche Bahn' என்ற போக்குவரத்து நிறுவனம் நமக்கு திருப்பித் தருகிறார்கள். இரண்டு மணி நேர தாமதமானால் 50% திரும்ப கிடைக்கும்.
ஆனால் இவ்வளவு நேர தாமதம் எல்லாம் அரிதினும் அரிது. அடுத்த 'கனெக்டிங் டிரெயின் சில நிமிடங்களுக்குள் தருவார்கள். எப்படியும் அந்த டிரெயினை பிடித்து விடலாம்.
கனெக்ஷன் டிரெயினையும் ஏழு, எட்டு நிமிட இடைவெளிகளில் புக் செய்து தருகிறார்கள். உதாரணமாக பிராங்க்ஃபர்பட் நகரில் இருந்து மூனிச் நகருக்கு கொலோன் வழியாக செல்வதாக வைத்துக் கொள்வோம். மாலை 5:11-க்கு கொலோன் நகரை அடைகிறோம் என்றால், 5:19-க்கு அங்கிருந்து மூனிச் நகருக்கு கனெக்டிங் டிரெயின் புக் செய்து தருவார்கள். எட்டு நிமிட இடைவெளி தான்! அதற்கேற்ற மாதிரி பிளாட்ஃபார்ம் வசதி, லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் இருக்கும். நம் உடமைகளை சுமந்து செல்ல போர்ட்டரை தேடிக் கொண்டிருக்க வேண்டாம்.
மேலே குறிப்பிட்டவை மட்டும் இல்லாமல் சாதாரண சைக்கிள் மற்றும் மடக்கு சைக்கிள்கள் பெருவாரியாக அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. சைக்கிளுக்கு ரோட்டில் தனி ட்ராக் உண்டு. அதனால் பெரிய வண்டிகள் வந்து மோதி விடும் என்று பயப்பட தேவையில்லை. மடக்கு சைக்கிளைப் பொறுத்தவரையில் அதை இரண்டாக மடித்து 'பேக்' தூக்குவது போல கையில் எளிதாக தூக்கி செல்லலாம்.
சைக்கிள்களை 'லாக்' செய்து நிறுத்துவதற்கு அனைத்து ரயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் ஸ்டாண்ட் வசதியும் உண்டு. சைக்கிள்களை எல்லா பேருந்து மற்றும் டிரெயின் உள்ளேயும் கொண்டு செல்லலாம். சைக்கிள்களை நிறுத்தி வைப்பதற்கு ஏற்றபடி பேருந்து மற்றும் டிரெயினில் இட வசதி செய்யப்பட்டிருக்கும்.
இவை மட்டுமல்லாமல் இளைஞர்கள் இடையே ஈ-ஸ்கூட்டர் மிகவும் பிரபலம். QR கோட் ஸ்கேன் செய்து பணம் கட்டி எடுத்துக் கொள்ளலாம். அது போல ரோட்டு ஓரத்தில் எந்த இடத்திலும் அதை நிறுத்திவிட்டு செல்லலாம். அதனால் மற்றவர்கள் அதை பயன்படுத்த வசதியாக இருக்கும்.
மேலும் ரைன்-ஏர் போன்ற விமான சேவைகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. ஆனால் விமானத்தில் கொண்டு போகும் பொருட்களின் எடை 15 கிலோ மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் நிறைய பேர் பக்கத்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு ட்ரெயினைத் தான் உபயோகிக்கிறார்கள்.
உதாரணமாக ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு ICE ட்ரெயினில் நான்கு மணி நேரத்தில் சென்று விடலாம். நாம் விரும்புகிற படி இரண்டு அல்லது மூன்று பெட்டிகளையும் உடன் எடுத்து செல்லலாம். தங்களது மகன் அல்லது மகள் பக்கத்து நாட்டில் இருந்தால் இது மாதிரியான ட்ரையின் தான் நிறைய பொருட்களைக் கொண்டு செல்வதற்கு வசதியாக இருக்கிறது.
மொத்தத்தில் போக்குவரத்து வசதிகள், ஜெர்மெனியில்... பலே! பேஷ்!