கோவா பயணம் என்றாலே கடற்கரைகள்தான் முதலில் நினைவிற்கு வரும். கடற்கரைகளைத் தவிர, கோவாவில், சிறப்பு வாய்ந்த தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் கோட்டைகள் போன்றவைகள் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும். சுற்றுலாப் பயணிகளைப் போல, நாமும் அவைகளை ஒவ்வொன்றாக சுற்றிப் பார்ப்போமே..!
பாம் ஜீஸஸ் பாசிலிக்கா கோதிக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள அருமையான தேவாலயம். இங்கே, கோவாவின் புனித ரட்சகரென அநேக கத்தோலிக்க மதத்தினரால் மதிக்கப்படும் "பிரான்சிஸ் சேவியரின்" உடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயத்திலிருந்து இவருடைய உடல், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே எடுக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காகவும், வழிபாட்டிற்காகவும் வைக்கப்படுகிறது.
17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போர்த்துக்கீசிய கோட்டையாகிய அருவாடா, லேட்டரைட் கல் அமைப்பாகும். மூன்று பக்கங்களில் கோட்டையும், நான்காவது பக்கத்தில் மாண்டோவி நதியை எதிர்கொள்ளும் வாயிலாகவும் கட்டப்பட்டுள்ள "அருவாடா" சின்குரி கடற்கரையில் அமைந்துள்ளது. முன்பு சிறைச்சாலையாக இருந்தது, தற்சமயம் நீர்த்தேக்கமாக பயன்படுத்தப்படுகிறது.
"மங்கேஷி ", கோவாவின் மிகப் பெரிய கோவிலாகும். சிவனின் அவதாரமான மங்கேஷிக்கு, பிரதான கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புராணக்கதைப்படி, சிவபெருமான், பார்வதி தேவியை பயமுறுத்த புலியாக மாறினார். புலியைப் பார்த்து பயந்த பார்வதி தேவி, சிவபெருமானிடமே சென்று தன்னைக் காப்பாற்றுமாறு கூறவும், சிவன் தனது இயல்பு நிலைக்குத் திரும்பினார் என்பதாகும். கம்பீரமான கோபுரத்தைக் கொண்டது மங்கேஷி கோவில். ஏழு அடுக்கு கொண்ட எண்கோண ஆழமான ஸ்தம்பம் மற்றும் தண்ணீர் தொட்டி உள்ளன. பண்டிகை தினங்களில் இரவில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு சுடர் விடுவது பார்க்க அழகாக இருக்கும். காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை மங்கேஷி கோவில் திறந்திருக்கும்.
கோவாவில் - பன்ஜிம் என்ற இடத்தில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ள பழமையான தேவாலயம். பெரிய மணி ஒன்று அன்னை தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளை முகப்பு கொண்ட இதன் உச்சி, கிரீடம் போன்று காணப்படுவதால், பனாஜியின் கிரீடம் என அழைக்கப்படுகிறது.
சப்போரா ஆற்றின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ள கம்பீரமான சப்போரா கோட்டையில், "தில் சாஹ்தா ஹை "ஹிந்திப்படம் படமாக்கப்பட்டபின், கோட்டை மேலும் பிரபலமடைந்தது எனக் கூறப்படுகிறது. இஸ்லாமிய போர்த்துக்கீசிய கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் கோட்டையின் உச்சியை அடைய செங்குத்தாக 15 நிமிடங்கள் ஏற வேண்டும். சப்போரா நதி மற்றும் சூர்யாஸ்தமனம் இரண்டையும், இங்கிருந்து காண அற்புதமாக இருக்கும்.
சாந்த துர்கா கோவில் 450 ஆண்டுகள் பழமையானது இங்கே விஷ்ணுவிற்கும், சிவனிற்கும் இடையே துர்கா தேவி அமர்ந்திருக்கிறாள். துர்கா தேவியின் கரங்களில் இரு பாம்புகள் உள்ளன. 5 மாடி உயரமான விளக்கு கோபுரம் மற்றும் அருகேயுள்ள பெரிய ஏரி ஆகியவைகள் கூடுதல் ஈர்ப்புக்களாகும். இந்தோ- போர்த்துக்கீசிய கட்டிடக்கலைப் பாணியைக் கொண்டது சாந்த துர்கா கோவில்.
கோவாவின் மேற்கூறிய சிறப்பு மிக்க இடங்களைப் பார்க்கையில், நல்லதொரு மனநிறைவு ஏற்படும் என்பது நிதர்சனம்.