தென் துவாரகை என அழைக்கப்படும் குருவாயூர்!

குருவாயூர்...
குருவாயூர்...
Published on

தென்னகத்தின் துவாரகை என்று அழைக்கப்படும் குருவாயூரப்பன் கோவிலில் ஆஷாட ஏகாதசி (17.7.24) அன்று தரிசனம் கிடைக்கப்பெற்றது பெரும் பாக்கியம். கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் இது.

ஒரு வேலையாக திருநெல்வேலிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து இரவு 8.40 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸில் பயணித்து காலை 7.30 மணிக்கு குருவாயூர் ஸ்டேஷனை அடைந்தோம். நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அடுத்த கட்டடம் பார்த்தசாரதி கோவில். கோவிலின் கர்ப்பகிரகம் கருங்கலில் தேர் வடிவத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. முன் பகுதியில் இரண்டு பக்கமும் வெள்ளை நிற குதிரைகள் தேரை இழுத்துச் செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கையில் பாஞ்சஜன்யம் மற்றும் சாட்டையுடன் காட்சி தருகிறார். ஆஷாட ஏகாதசி அன்று சிறப்பாக பார்த்தசாரதி பெருமாளையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

விஸ்வரூப தரிசனம்:

பிறகு குருவாயூர் தலத்திற்குச் சென்று நல்ல தரிசனம். கேரளா எங்கும் மழை பெய்து கொண்டிருந்ததால் அன்று கூட்டம் அதிகம் இல்லை. எனவே மூன்று முறை திரும்பத் திரும்ப சென்று தரிசித்தோம். முதலில் விஸ்வரூப தரிசனம். அதை அடுத்து துளசி மாலை சாற்றி சந்தன காப்பில் அந்த குட்டி பாலகனை கண்ணனை தரிசித்து மகிழ்ந்தோம்.

பார்த்தசாரதி பெருமாள்...
பார்த்தசாரதி பெருமாள்...

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் உள்ள 108 அபிமான க்ஷேத்திரங்களில் ஒன்று இந்த குருவாயூர். பாதாள அஞ்சனம் எனப்படும் அபூர்வ கலவையால் செய்யப் பட்டது இந்த குருவாயூரப்பன் சிலை. இங்கு அபிஷேகிக்கப்படும் நீர் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது இது பலவிதமான நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

இங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணர் நான்கு கரங்களை கொண்டு ஒரு கையில் சங்கு பாஞ்சஜன்யமும், மற்றொரு கையில் சுதர்சன சக்கரமும், மூன்றாவது கையில் கௌமோதகி எனப்படும் கதையையும், நான்காவது கையில் துளசி மாலையுடன் கூடிய தாமரையும் கொண்டு காணப்படுகிறார்.

பலவிதமான பிரார்த்தனைகள்:

இங்கு இறைவனுக்கு பலவிதமான காணிக்கைகள் செலுத்துவதை பார்க்க முடிகிறது. தோட்டத்தில் விளைந்த சேனைக்கிழங்கு, வாழைப்பழக்குலை, காய்கறிகள் பரங்கிக்காய் என எக்கச்சக்கமாக காணிக்கை குவிந்த வண்ணம் இருந்தது.

சிறு குழந்தைகளுக்கு முதல் திட உணவு ஊட்டுவதற்காக "அன்னப்ராசனம்" உணவு ஊட்டும் விழா புனிதச் சடங்காக இங்கு நடத்தப்படுகிறது. 

மற்றொரு சிறப்பான பிரார்த்தனை "துலாபாரம்". இதில் வாழைப்பழம், தேங்காய், சர்க்கரை, வெல்லம், தாம்புக் கயிறு என எடைக்கு எடை போடப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை வேண்டி நேந்திரம் பழமும், ஆஸ்துமா போன்ற  சுவாசப் பிரச்சினைகள் நீங்க தாம்பு கயிறும், சரும பிரச்சனைகளுக்கு சேனைக்கிழங்கும்  துலாபாரத்தில்  போடப்படுகிறது. சுவர்களின் மூன்று பக்கங்களிலும் ஓவியங்களாக கிருஷ்ணரின் குழந்தை பருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நிர்மால்ய தரிசனம்:

நிர்மால்ய தரிசனத்திற்கு அதிகாலை 3 மணிக்கு கோவில் திறக்கப்படுகிறது. இரண்டரை மணிக்கு மக்கள் அனைவரும் மழை வெயிலை பொருட்படுத்தாமல் கோவில் வாசலில் நிர்மால்ய தரிசனத்திற்காக காத்துக் கிடக்கின்றார்கள்.

இதையும் படியுங்கள்:
ரயில் பயணங்கள்- உணர்த்துவது என்ன?
குருவாயூர்...

சீவேலி:

ஒரு நாளைக்கு மூன்று முறை குருவாயூரப்பனை நன்கு அலங்கரித்து கம்பீரமான யானையின் மீது ஏற்றி கூடவே இரண்டு யானைகளும் வர மேளம், நாதஸ்வரம் முழங்க மூன்று பிரதட்சணம் நடைபெறுகிறது. இரவு ஒன்பது மணிக்கு நடைபெறும் ஸ்ரீவேலியில் கோவிலைச் சுற்றிலும் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

கோவில் பிரசாதங்கள்:

கோவில் பிரசாத கவுண்டரில் கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான "பால் பாயாசம்", உண்ணியப்பம் மற்றும் "கதலிப் பழம்" கிடைக்கிறது. குருவாயூர் ஏகாதசி, உற்சவங்கள், விஷூ போன்ற கொண்டாட்டங்கள் இங்கு வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

அருகில் உள்ள மம்மியூர் சிவன் கோவில், யானைகள் முகாம் புன்னத்தூர் கோட்டா ஆகிய இடங்களையும் சென்று பார்த்தோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com