ஹரித்வார்: ஆன்மிகமும் இயற்கையும் இணையும் புண்ணிய பூமி!

Haridwar
Spirituality and nature
Published on

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைகையில் கிடைத்த அமுதத்தை, கருட பகலான் எடுத்துச் செல்கையில்,  தற்செயலாக ஹரித்வார்; உஜ்ஜையினி; நாசிக்; பிரயாகை ஆகிய நான்கு இடங்களில் அமுதத்தின் துளிகள் சிந்தின. ஹரித்வாரில் அமுதத்துளி சிந்திய காரணம், விசேஷமான இடமாக ஹரித்வார் கருதப்படுகிறது. இயற்கையழகும்,  ஆன்மீகமும் கலந்த ஹரித்வாருக்கு பயணம் செல்வது மனதுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

உத்தராகண்ட் மாநிலத்தில், கங்கை ஆற்றின் வலது கரையில், சிவாலிக் மலைத் தொடர்களின் அடிவாரத்தில் ஹரித்வார் அமைந்துள்ளது. பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு நுழைவாயிலாக இருக்கும் ஹரித்வாரில், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நிகழ்வு விமரிசையாக நடைபெறும். ஹரித்வாரிலுள்ள முக்கியமான இடங்களுக்கு பயணித்து,  அவைகளை கண்டு ரசிக்கலாம்.

மானசாதேவி கோவில்:

51 சக்தி பீடங்களில் ஒன்றாகிய மானசாதேவி கோவில், இந்தியாவிலிருக்கும் இந்துக்களுக்கு ஒரு ஆன்மீகத் தலமாகும். இங்கிருக்கும் சித்த  பீடம், சக்தி தேவியின் வடிவமென நம்பப் படுகிறது. ஷிவாலிக் மலையிலுள்ள பில்வ பர்வதத்தின் மேல் இருப்பதால், பில்வ தீர்த்தம் என்றும் மானசாதேவி கோவில் அழைக்கப்படுகிறது. ரோப்வே மற்றும் சாலைகள் வழியே கோவிலை அடையலாம். மனதார வேண்டும் பக்தர்களுக்கு வரமளிக்கும் சக்தி மானசாதேவிக்கு உண்டு என நம்பிக்கை நிலவுகிறது.

பில்கேஷ்வர் மகாதேவி கோவில்:

பில்வ பர்வத் பள்ளத்தாக்கில் இருக்கும் பில்கேஷ்வர் மகாதேவி கோவில் ஹரித்வார் ரெயில் நிலையம் அருகே உள்ளது. மலைப்பாங்கான காடுகளினால் சூழப்பட்டுள்ள கோவிலினுள், கல்லினால் உருவாக்கப்பட்ட  சிவபெருமான் மற்றும் நந்தி தேவர் உள்ளனர். புராணக் கதைப்படி, பார்வதி தேவி சிவபெருமானை பூஜித்து வழிபடுகையில்,  பசி எடுக்க அங்கிருந்த வில்வ இலைகளை தேவி சாப்பிட்டார். தாகம் எடுத்தது. தண்ணீரைக் காணவில்லை.

பார்வதி தேவியின் தாகம் தணிக்க எண்ணிய பிரம்மா, கோவிலருகே கங்கை நீரை வரவழைத்து தேவியின் தாகம் தணித்தார். இது கௌரி குண்ட் எனக் கூறப்படுகிறது. வில்வ மரங்கள் இங்கே ஏராளமாக உள்ளன. பேல்பத்ரா எனக் கூறப்படும் வில்வ இலை இறைவனை வழிபட உகந்ததாகும். சிவபெருமானை நினைத்து தேவி தியானம் செய்ததால், தேவிக்கு தனியாக கோவில் இங்கே உள்ளது. கோவிலின் உள்ளே சேஷ் நாகத்தின் கீழே லிங்க வடிவில் சிவனும், எதிரே நந்தி பகவானும் இருக்கின்றனர்.

பக்தர்கள் தாங்களே பேல்பத்ராவை இறைவனுக்கு சமர்ப்பித்து, கங்கை நீரால் அபிஷேகம் செய்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கொழுக்குமலை: இயற்கையின் மடியில் ஒரு சொர்க்கம்!
Haridwar

சப்த ரிஷி ஆசிரமம்:

ஹரித்வாரிலிருந்து சுமார் 5 கி.மீட்டர் தூரத்தில் கங்கை நதி ஏழு பிரிவுகளாக பிரிந்து ஸாத்ஸரோவர் ஆகிறது. கங்கைக் கரையில் அமைந்துள்ள சப்தரிஷி ஆசிரம் பழமையானது. விஸ்வாமித்திரர், கஷ்யபர், ஜமதக்னி, வசிஷ்டர், அத்ரி, பரத்வாஜர், கௌதமர் ஆகிய ஏழு புகழ் பெற்ற ரிஷிகளின் தியானத்தலமென இந்த ஆசிரமம் கூறப்படுகிறது.

ஹர்கி பௌரி மற்றும் கங்கா ஆரத்தி:

ஹர்கி பௌரியில் தினந்தோறும் மாலையில் நடைபெறும் மங்களகரமான கங்கா ஆரத்தியைக் காண சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மொய்க்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பூஜாரிகள், தீபம் ஏற்றப்பட்ட பெரிய விளக்குகளை தங்கள் கைகளில் ஏந்தி, மேலும் - கீழும் மற்றும் பக்கவாட்டுகளிலும் அசைக்கையில் அற்புதமாக இருக்கும். அச்சமயம்,  காட் கோவிலிலுள்ள மணிகள் ஒலிக்க,  மந்திரங்களின் ஒலிகள் காற்றில் பரவி செவிகளைத் தொடும். பூக்களின் நடுவே சிறு தீபங்களை ஏற்றி,  ஆயிரக் -கணக்கான மக்கள் கங்கையில் மிதக்க விடுகையில், தெய்வீகச் சூழல் நிலவும். அமுதத்துளி சிந்திய இடம் ஹர்கி பௌரி ஆகும்.

ஹரித்வார் பயணத்தில் பாரத் மாதா மந்திர் மிகவும் முக்கியம்.

180 அடி உயரம் கொண்ட எட்டு மாடிக்கோவிலாகிய பாரத் மாதா மந்திரில்,  இந்தியாவின் வரைபடம் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களைக் குறிக்கும் வகையில் பளிங்கு கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. 


Haridwar
Bharat Mata Mandir

முதல் மாடி -- பாரமாதா திருவுருவம்;  இரண்டாம் மாடி --தேச விடுதலைக்காக பாடுபட்ட இந்தியத் தலைவர்கள் ; மூன்றாம் மாடி -- வரலாறு போற்றும் மரியாதைக்குரிய பெண்களின் சாதனைகள்; நான்காம் மாடி ---பல்வேறு மதங்களின் பெரிய புனிதர்கள் ; ஐந்தாவது மாடி ---மதச்சார்பின்மையை பிரதி நிதித்துவப்படுத்தும் செய்திகள், ஓவியங்கள் ; ஆறாம் மாடி --தேவி சக்தியின் வெவ்வேறு வடிவங்கள் ; ஏழாம் மாடி ---மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்கள் ; எட்டாம் மாடி ---இமயமலை மற்றும் சிவபெருமான் என காண்பதற்கு அருமையாக இருக்கும். லிப்ட் வசதி உண்டு.

பயணத்தில் ஒரு முக்கிய அங்கமாகிய ஷாப்பிங்கை ஹரித்வாரிலுள்ள  பாரா பஜாரில் செய்யலாம். நினைவுப் பொருட்கள், மூலிகைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், ஆயுர்வேத மருந்துகளென அனைத்தும் கிடைக்கும். சுத்தமான பாலில் இருந்து செய்யப்படும் பேடாக்கள் இங்கே மிகவும் ஃபேமஸ்.

இமயமலைப் பிரதேசத்து சுத்தமான காற்றை ஒரு நான்கு நாட்கள் சுவாசித்து,  ஹரித்வார் பயணத்தை முடித்து  வருகையில்,  ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com