இதயத்தை கனக்கச் செய்யும் அந்தமான் செல்லுலர் சிறைச்சாலை!

செல்லுலர் சிறைச்சாலை
செல்லுலர் சிறைச்சாலை
Published on

ந்தமான் தீவுகளுக்கு சுற்றுலா செல்லுபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு இடம் செல்லுலர் சிறைச்சாலை. இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை கடுமையாக தண்டிக்க அந்தமானில் உருவாக்கப்பட்ட இடமே இந்த செல்லுலர் சிறைச்சாலை ஆகும்.

இந்திய சுதந்திரத்திற்காக போராடும் வீரர்களை தனிமைச் சிறையில் அடைத்து வைத்து மிகக்கடுமையாக வேலை வாங்கி அவ்வாறு வேலை செய்ய இயலாதவர்களை தூக்கில் போட்டு தண்டித்த இடம். இந்த சிறைச்சாலை சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டு சுமார் பத்து ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது.

செல்லுலர் சிறைச்சாலையானது ஏழு நீளமான செல்களை அமைத்து கட்டப்பட்டது. இதன் மையப்பகுதியில் ஒரு கோபுரம் காணப்படுகிறது. இந்த ஏழு நீளமான செல்களும் இந்த மைய கோபுரத்துடன் இணைக்கப் பட்டிருக்கும். மேலிருந்து பார்ப்பதற்கு வட்டவடிவத்தில் ஒரு சக்கரம் போல காட்சியளிக்கும். ஒவ்வொரு நீளமான செல்லும் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என மொத்தம் மூன்று தளங்களைக் கொண்டது. இந்த செல்லுலர் ஜெயில் 1896 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கி 1906 ஆம் ஆண்டில் அதாவது சுமார் பத்து ஆண்டுகளில் முற்று பெற்றது. மொத்தம் 690 அறைகள் அமைக்கப்பட்டன. இரண்டாவது உலகப் போரின் போது இதன் மீது போடப்பட்ட குண்டுகளால் இரண்டு பிரிவு கட்டடங்கள் நொறுங்கி விட்டன. இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் இரு பிரிவு இடிக்கப்பட்டு தற்போது மூன்று பிரிவுகள் மட்டுமே பாதுகாக்கப்படுகின்றன.

ஜெயிலின் ஒவ்வொரு பிரிவின் முன்பக்கமும் மற்றொரு பிரிவின் பின்பக்கத்தைப் பார்த்தவாறு கட்டப்பட்டுள்ளன. எதிர் கட்டத்தில் நடப்பது மற்ற கட்டிடத்தில் இருப்பவர் களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம்.

ஜெயிலில் உள்ள ஒவ்வொரு அறையும் 13.5 அடி நீளமும் 7 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னல் ஏதும் இல்லை. மேற்புறத்தில் 3 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட இரும்புக் கம்பிகளால் ஆன வெண்டிலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடிமனான இரும்புக் கம்பிகளால் ஆன கதவு காணப்படுகிறது. வெளிப்புறத்தில் இருந்து பூட்டும் படியாக தாழ்ப்பாள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளின் வராந்தாக்களும் மைய கோபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
அற்புத பலன்கள் தருமே 3 கீரைப் பொடி வகைகள்!
செல்லுலர் சிறைச்சாலை

செல்லுலர் சிறைச்சாலையில் தான் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய வீர சாவர்க்கர் பல வருடங்கள் தனிமைச் சிறையில் வாடினார். நுழைவு வாயில் ஒட்டி அமைந்த வடகிழக்கு மூலைப் பகுதியில் மூன்றாவது மாடியின் கடைசி அறையில் அவர் இத்துன்பத்தை அனுபவித்துள்ளார்.

செல்லுலர் சிறைச்சாலையில் சுதந்திர ஜோதி ஒரு மண்டபத்தில் அமைக்கப்பட்டு தொடர்ந்து சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை தனிமைப்படுத்தி அவர்களின் சுதந்திர தாகத்தைத் தணிக்கும் விதத்தில் செல்லுலர் சிறைச்சாலை உருவாக்கப்பட்டது. இச்சிறைச்சாலையில் உள்ள செல்களில் கைதிகளை மாலை ஆறு மணிக்கு அடைத்து விடுவார்கள். மீண்டும் காலை ஆறு மணிக்குத் திறந்து விடுவார்கள். பனிரெண்டு மணிநேரம் பேச்சுத் துணையின்றி தனிமையில் சிறையின் செல்லுக்குள் இருக்க வேண்டும்.

செல்லுலர் சிறைச்சாலை
செல்லுலர் சிறைச்சாலை

மாலையில் செல்லுலர் சிறைச்சாலை வளாகத்தில் சவுண்ட் அண்டு லைட் ஷோ ஒன்றை நடத்துகிறார்கள். செல்லுலர் சிறை வளாகத்தில் திறந்த வெளி அரங்கத்தில் சுமார் இருநூறு பேர்கள் அமரும் அளவிற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய நம் தியாகிகளின் தியாக வாழ்க்கைகையும் அவர்களை துன்பப்படுத்திய பிரிட்டிஷார்களைப் பற்றியும் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்துகிறார்கள். தவறாமல் பார்க்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. செல்லுலர் சிறைச்சாலை பற்றிய ஒளி ஒலிக் காட்சியானது தினமும் மாலை 6.00 மணி மற்றும் 7.15 க்கு இந்தியில் நடத்தப்படுகிறது. திங்கள், புதன் மற்றும் வெள்ளியன்று மட்டும் 7.15 மணிக்கு ஆங்கிலத்தில் இந்த ஒளி ஒலிக் காட்சி நடத்தப்படுகிறது. ஒளி ஒலிக் காட்சியைக் காண கட்டணம் உண்டு.

செல்லுலர் சிறைச்சாலை காலை 09.00 மணி முதல் மதியம் 12.30 வரையிலும் மதியம் 1.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். தேசிய விடுமுறை தினங்களைத் தவிர மற்ற நாட்கள் அனைத்திலும் இது இயங்குகிறது. பார்வைக் கட்டணம் உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com