இமயமலையின் சொர்க்கம்: பூட்டானில் நீங்கள் தரிக்க வேண்டிய ரம்யமான இடங்கள்!

bhutan-tourism
bhutan-tourism
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பூட்டான் இமயமலையில் அமைந்துள்ள ஒரு அமைதியான மற்றும் கலாச்சாரப் பாரம்பரியம் மிக்க நாடாகும். பிரம்மாண்டமான கோட்டைகள், மாபெரும் மலைகள், பௌத்த மடாலயங்கள், வரலாற்று அருங்காட்சியகங்கள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் பழமையான கோவில்கள் என பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. பூட்டானின் மொத்த நிலப்பரப்பில் 71% வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது.

இங்கு பரோவில் உள்ள புலிக்கூடு மடாலயம், தலைநகர் திம்புவின் புத்த டோர்டென்மா, புனகா சோங் மற்றும் ஃபோப்ஜிகா பள்ளத்தாக்கு, கோட்டைகள், மடாலயங்கள், இயற்கையான பள்ளத்தாக்குகள் போன்றவை இங்குள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.

சிறந்த சுற்றுலாத் தலமான பூட்டானில் பார்க்க வேண்டிய இடங்கள்:

பரோ தக்த்சாங் (Tiger's Nest Monastery):

செங்குத்தான பாறையில் அமைந்துள்ள பூட்டானின் மிகவும் பிரபலமான, புனிதமான புத்த மடாலயம். 8ஆம் நூற்றாண்டில் குரு பத்மசம்பவர் ஒரு பெண் புலியின் முதுகில் பறந்து வந்து இந்த மடாலயத்தை அடைந்தார் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் இதற்கு புலியின் கூடு மடாலயம் என்ற பெயர் வந்தது. பள்ளத்தாக்கில் இருந்து சுமார் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மடாலயத்தை அடைய 3-4 மணி நேரம் மலையற்ற பாதையில் பயணிக்க வேண்டும். வண்ணமயமான பௌத்த கொடிகள், பிரகாசமான சிவப்பு மலர்கள் என வழி நெடுகிலும் ரம்யமான இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
மனக் கவலைகளைத் தீர்க்கும் அருவிச் சத்தம்! நீர்வீழ்ச்சிகள் ஏன் நம்மை இவ்வளவு கவருகின்றன?
bhutan-tourism

ரிங்பங் ட்சோங் (Rinpung Dzong):

பாரம்பரிய கட்டடக் கலைக்கு பெயர் பெற்ற மிகவும் அழகான கோட்டை.

தேசிய அருங்காட்சியகம் (Ta Dzong):

பூட்டானின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம் இது.

கியிச்சு லகாங் (Kyichu Lhakhang):

பூட்டானின் பழமையான மற்றும் புனிதமான கோவில்களில் ஒன்று.

பூட்டானின் தலைநகர் திம்புவில் புத்தர் டோர்டென்மா (Buddha Dordenma):

மலை உச்சியில் உள்ள பிரம்மாண்டமான புத்தர் சிலை. 169 அடி உயரமுள்ள இந்த புத்தர் சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள தியான மண்டபத்தில், புத்தரின் மேலும் 1,25,000 சிறிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தியான மண்டபத்தின் சுவர்களில் புத்தரின் பிறப்பு முதல் ஞானம் பெற்றது வரையிலான வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் அழகான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

தாஷிச்சோ ட்சோங் (Tashichho Dzong):

அரசாங்க செயலகம் மற்றும் மதத்தலைவரின் கோடைக்கால இல்லம் அமைந்துள்ள இடம் இது.

மோதிதாங் தகின் பிரசர்வ் வனவிலங்கு காப்பகம் (Motithang Takin Preserve):

பூட்டானின் தேசிய விலங்கான 'டாகின்' (Takin) பசு மற்றும் ஆட்டின் கலப்பினமாகும். இந்த பாலூட்டி பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில், குட்டையான கால்கள், நீளமான மூக்கு மற்றும் பருத்த உடலைக் கொண்டுள்ளது. இந்த இயற்கை காப்பகத்தில் டாக்கின்கள், சாம்பார் மான்கள், குரைக்கும் மான்கள் மற்றும் பலவகையான பறவைகளைக் கொண்ட ஒரு வனவிலங்கு பாதுகாப்பு பூங்காவாகும்.

ஹா பள்ளத்தாக்கு (Haa Valley):

அமைதியான, பாரம்பரிய பூட்டானிய கிராமிய வாழ்க்கையை அனுபவிக்க சிறந்த இடம்.

ஃபோப்ஜிகா பள்ளத்தாக்கு (Phobjikha Valley):

ஃபோப்ஜிகா பள்ளத்தாக்கு மத்திய பூட்டானில் அமைந்துள்ள ஒரு பரந்த கிண்ண வடிவ பனிப்பாறை பள்ளத்தாக்காகும். இது காங்டே பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. அரிய வகை கருப்பு கழுத்து கொக்குகளைக் காணக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்கு இது. இந்த பறவைகள் திபெத் போன்ற தொலைதூர இடங்களில் இருந்து இந்த பள்ளத்தாக்கிற்கு வலசை வருகின்றன.

இதையும் படியுங்கள்:
சூரியன் இல்லையென்றால் என்னாகும்? துருவப் பகுதிகளின் விசித்திர வாழ்க்கை!
bhutan-tourism

கொக்குத் திருவிழா நடைபெறும் காங்டே மடாலயம், ஃபோப்ஜிகா:

காங்டே மடாலயம் (Gangtey Monastery) ஒரு குன்றின் செங்குத்தான சரிவில் அமைந்துள்ளது. இந்த மடாலயத்தில் நெய் விளக்கு கோபுரம் மற்றும் துறவிகளின் குடியிருப்புகளால் சூழப்பட்ட ஒரு மைய பிரார்த்தனைக்கூடம் உள்ளது. குளிர்காலத்தில் இங்கு வலசை வரும் கருங்கழுத்து கொக்குகள் 5 மாதங்கள் தங்கி பிறகு அங்கிருந்து புறப்படுகின்றன.

இந்த கொக்குகள் மடாலயத்தின் முன்னாள் துறவிகளின் மறுபிறவிகள் என்று இந்த கிராம மக்கள் நம்புகிறார்கள். கொக்குகளின் வருகையை வரவேற்கும் விதமாக இந்த மடாலயம் ஆண்டுதோறும் "கொக்குத் திருவிழா" ஒன்றை நடத்துகிறது.

பயணிக்க ஏற்ற நேரம்:

மார்ச் முதல் மே வரை மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை வானிலை மிகவும் ரம்யமாக இருக்கும்.

எப்படி செல்வது?

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. ஆனால் எல்லைப்புறத்தில் நுழைவு அனுமதி (entry permit) பெறவேண்டும்.பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மூலம் மேற்கு வங்காளத்தின் ஜெய்கான் வழியாக சாலை மார்க்கமாகவோ அல்லது முக்கிய நகரங்களில் இருந்து விமானம் மூலமோ செல்லலாம். டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து நேரடியாக பாரோ (Paro) சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லலாம்.

logo
Kalki Online
kalkionline.com