
இந்தியாவில் எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவின் கடற்கரை ஓரங்களில் உலகின் மிகவும் அழகு வாய்ந்த சில தீவுகள் உள்ளன. இந்த தீவுக்கு மிகச் சிலரே சென்று வந்த நிலையில் இதுவரை இந்த தீவுகள் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க அவ்வளவாக வாய்ப்பில்லை. இந்தியாவில் உள்ள அத்தகைய தீவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
நிக்கோபார் தீவுகளில் உள்ள 'தில்லான்சாங்' தீவு மிகக்குறைவாக ஆராயப்பட்ட தீவுகளில் ஒன்றாக உள்ளது. மேலும் இந்தத் தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் மனித நடமாட்டம் பெரும்பாலும் குறைவாக உள்ளது. இத்தீவில் அடர்ந்த காடுகளும், எரிமலை குன்றுகள் இருப்பதோடு மிகவும் அரிதான வன விலங்குகள் வாழ்வதால் இங்கு செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ளன.
லட்சத்தீவுகளில் இருக்கும் பித்ரா தீவில் மிகக் குறைந்த அளவு மக்களே வசிக்கின்றனர். வெறும் 300 பேர் மட்டுமே வசிக்கும் மிகச் சிறிய பித்ரா தீவு அழகான காயல்கள் (lagoons) மற்றும் பவளப்பாறைகளுக்காகப் பெயர் பெற்றது. தனிமையில் அமர்ந்து அமைதியாக உலகத் தொடர்பிலிருந்து தற்காலிகமாக விடுபட நினைப்பவர் களுக்கு ஏற்ற தீவாக இது உள்ளது. இங்கே சென்றால் காலம் மெதுவாக கடக்கும் உணர்வு தோன்றுகிறது. இந்த தீவு பற்றி பலருக்கும் அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை.
அந்தமான் கடலில் காணப்படும் நார்கொண்டம் தீவு அழிந்து போன எரிமலை தீவு என்பது பலருக்கும் தெரியாத விஷயம். உலகின் வேறு எங்கும் காணமுடியாத 'நார்கொண்டம் ஹார்ன்பில்' பறவைகளுக்குப் புகழ் பெற்ற இந்த தீவு வட அந்தமானில் அமைந்துள்ளது . இந்த தீவிற்கு செல்ல வேண்டுமென்றால் சிறப்பு அனுமதி கட்டாயமாகும்.
முற்றிலும் மாறுபட்ட தனி உலகமாக தோன்றும் மினிகாய் தீவு லட்சத்தீவின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் உயரமான கலங்கரை விளக்கங்களில் ஒன்று இத்தீவில் உள்ளது. மினிகாய் தீவு வண்ணமயமான பவளப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் ஒதுக்கு புறமான அமைவிடத்தில் உள்ளதால் அமைதியாகவும், இயற்கை எழில் மாறாமலும் காட்சி தருகிறது . இங்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் உண்டு.
மேற்கூறிய தீவுகள் அனைத்தும் பலரும் அறியாத மக்கள் நடமாட்டம் இல்லாத தீவுகளாக இருப்பதால் இயற்கை அன்னை எந்த துன்பத்திற்கும் ஆளாகாமல் அப்படியே காட்சி தருகிறாள்.