வரலாற்று சிறப்புமிக்க புனலூர் தொங்கு பாலம் -ஓர் அற்புத பயணம்!

Punalur Suspension Bridge (Thookku Palam)
புனலூர் தொங்கு பாலம்
Published on

தினசரி வாழ்க்கையில் தினமும் ஒரே மாதிரி வேலையை செய்து போரடித்ததால் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு எங்காவது வெளியூர் போய் வர எண்ணினோம், கணவரும் நானும்.

இலக்கின்றி ஒரு நாள் ட்ரெயின் பிடித்து மதுரை சென்றோம். இரண்டு நாள் அங்கு தங்கி மீனாட்சி அம்மனை கண் குளிர தரிசித்தோம். ஒரிஜினல் ஜிகர்தண்டாவை ருசித்தோம். உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வந்தோம். 

பின் இதுவரை சென்றிராத வேறொரு மாநிலத்துக்கு செல்ல எண்ணி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பிடித்து புனலூர் சென்றோம். செல்லும் வழியெல்லாம் மேற்கு தொடர்ச்சி மலையும் அதில் வளர்ந்திருக்கும் காடுகளும் கண்களுக்கு பசுமை விருந்தளித்தன. புனலூர்,  கேரளாவில் கொல்லம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் கல்லடா நதிக்கரையில் அமைந்துள்ளது. அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினோம். காலையில் எழுந்து ஆப்பம் கடலைக் கறியை ஒரு பிடி பிடித்துவிட்டு ஊரை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

இதையும் படியுங்கள்:
சுற்றுலா போறீங்களா?அவசியம் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள்!
Punalur Suspension Bridge (Thookku Palam)

முதலில் சென்றது கல்லடா நதியின் குறுக்கே கட்டப் பட்டுள்ள  மிகப்பெரிய தொங்கு பாலம் (suspension bridge). இதன் கட்டுமானப் பணிகள் வால்த்யூ க்ளாரன்ஸ் பார்டன் என்ற இன்ஜினியரால் ஆரம்பிக்கப்பட்டு, பின் இடையில் சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டு,1877 ல் ஆல்பர்ட் ஹென்றி என்பவரால் முடித்து வைக்கப்பட்டது.

இது சுமார் 400 மீட்டர் நீளம் கொண்டது. இதை கட்டுவதற்கான முக்கிய காரணம் காட்டுப்பகுதியில் உள்ள மிருகங்கள் ஊருக்குள் வந்து விடாமலிருக்கவும், காடுகளில் வெட்டப்படும் மரங்களை ஆற்றைத்தாண்டி ஊருக்குள் சுலபமாக எடுத்து வருவதற்காகவும்தான்  என கூறப்படுகிறது. முதலில் பொது வாகனங்கள் செல்ல அனுமதி இருந்தது. பின் பிரிட்ஜின் பாதுகாப்பு கருதி 1990 ல் வாகனப் போக்குவரத்தை நிறுத்தவும், பிரிட்ஜை நினைவுச் சின்னமாக அறிவித்தும் ஆணையிட்டது அரசாங்கம்.

1850 ல் முதன் முதலாக நிறுவப்பட்ட  மிகப்பெரிய பேப்பர் மில் புனலூரில் உள்ளது. புனலூர் "பெப்பர் வில்லேஜ் ஆஃப் கேரளா" என அழைக்கப்படும் அளவுக்கு இங்கு மிளகு, பட்டை, ஏலக்காய் போன்ற ஸ்பைஸஸ் மற்றும் தென்னை, பனை ஆகிய பல வகை மரம் செடி வகைகள் செழித்து வளர்ந்து வருகின்றன.

தொங்கு பாலத்தில் ஜெயகாந்தி - மகாதேவன்
தொங்கு பாலத்தில் ஜெயகாந்தி - மகாதேவன்

தொங்கு பாலத்தின் ஒரு புறம் நுழைந்து, மரத்திலான அந்தப் பாலத்தில் காலாற நடந்துகொண்டே கல்லடா நதியின் அழகையும் சுற்றியுள்ள கண்கவர் இயற்கைக் காட்சிகளையும் கண்டு களித்தோம்.

புனலூர் வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தவறாமல் காணச் செல்வது ஜடாயு எர்த்ஸ் சென்டர்  (Jadayu Earths Centre) என்னும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். இது 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இராமாயண காவியத்தில் ராவணன் சீதையை கடத்திச் செல்லும்போது, வழியில் ஜடாயு என்ற பறவை வழியை மறித்து ராவணனுடன் சண்டையிட்ட இடம். இதை ஒட்டி ஜடாயு நேச்சர் பார்க் ஒன்று உள்ளது. மேலும் புனலூரில் அருவிகள், குழைந்தைகளுக்கான பார்க், மலையேற்றம் செல்பவர்களுக்காக பிரத்யேகமாய் அமைக்கப்பட்ட இடங்கள் என சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ பல இடங்கள் உள்ளன.

அன்று இரவு புனலூரில் தங்கிவிட்டு மறுநாள் காலை தென்மலை வழியாக குற்றாலம் சென்றோம். வழி நெடுக தென்பட்ட எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகள் மீது படரவிட்ட பார்வையை மீட்டெடுக்க சுலபத்தில் மனம் வரவில்லை. குற்றாலத்தில் ஆசை தீர குளியல் போட்டுவிட்டு பின் மனமில்லாமல் மதுரை நோக்கிப் பயணிக்கலானோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com