
மகாராஷ்டிரா மாநிலத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கியமான இடம் நாசிக் என்கிற பஞ்சவடி ஆகும். நாசிக், பஞ்சவடி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செய்தபோது தங்கி இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.
நாசிக்:
வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாசிக் மகாராஷ்டிராவின் புனித நகரங்களில் ஒன்றாகும். இது கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளது. உலகில் கும்பமேளா நடைபெறும் நான்கு முக்கிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரியம்பகேஷ்வர் கோவில் மற்றும் ராமரின் கருப்பு சிலைக்கு பெயர் பெற்ற காலாராம் கோவில் போன்ற நிறைய முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் சூழ்ந்த நகரம் இது. திராட்சை தோட்டங்களுக்கு பேர் போன நகரமும் கூட.
பெயர் காரணம்:
புராணங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது நாசிக் என்ற பஞ்சவடி. பஞ்ச் என்றால் 'ஐந்து' என்றும் வாடி என்பது 'ஆலமரம்' என்று பொருள். காலாராம் கோவிலுக்கு அருகில் ஐந்து ஆல மரங்களில் இருந்து முளைத்ததாக நம்பப்படும் சில பழமையான மற்றும் உயரமான ஆலமரங்கள் உள்ளன. அவை பஞ்சவடிக்கு அதன் பெயரைக் கொடுத்தன.
இந்த பஞ்சவடி காட்டில்தான் ராமர் சீதையுடனும், லட்சுமணனுடனும் வனவாசம் வந்ததாகவும், ஜடாயு மோக்ஷம் அடைந்த இடமாகவும் (நாசிக்கிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) லக்ஷ்மணன் ராவணனின் சகோதரி சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியதாகவும் புராணம் கூறுகிறது. அகத்திய முனிவர் சில காலம் இங்கு தவம் இயற்றியதாகவும் கூறப்படுகிறது.
தபோவனம்:
பஞ்சவடியில் உள்ள தபோவனம் ராமர் மற்றும் லட்சுமணன் தங்கி இருந்த இடம் என்று நம்பப்படுகிறது. சீதையை கவர்ந்திழுக்க மாரீச்சையை ராவணன் மான் வேடத்தில் அனுப்பி பின்னர் அவளை கடத்திய இடமும் இதுதான் என்று கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்புகள் மிகுந்த நாசிக்கில் திரயம்பகேஷ்வரர் கோவில், பஞ்சமுகி அனுமான் கோவில், கபாலீஸ்வரர் கோவில், ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சீதா குகையும் உள்ளன.
ராம் குண்ட்:
ராமர் இங்கு குளித்ததாக நம்பப்படுவதால் ராம் குண்ட் என்று அழைக்கப்படுகிறது. தேசப்பிதா மகாத்மா காந்தியின் அஸ்தி கூட இங்குதான் மூழ்கடிக்கப்பட்டது.
சப்தஷ்ருங்கி:
ஏழு சிகரங்கள் என்று பொருள்படும் இந்த கம்பீரமான மலைகளில் குண்டங்கள் என்று அழைக்கப்படும் 108 நீர் தேக்கங்கள் உள்ளன. அதன் மேல் காடுகள் நிறைந்த மலைகளில் மருத்துவ மூலிகைகள் இருப்பதாக அறியப்படுகிறது. லட்சுமணன் மயக்கத்தில் இருந்த பொழுது மூலிகையைத்தேடி அனுமான் இந்த மலைகளின் மீது பறந்ததாக கூறப்படுகிறது. இதிகாசங்களின் படி ராமரும் சீதையும் சப்தஷ்ருங்கி தேவியின் ஆசி பெற இந்த மலைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. மலை உச்சியில் உள்ள கோவிலை அடைய 510 படிகள் ஏறவேண்டும்.
திரயம்பகேஷ்வர் கோவில்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் நகரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குஈசனின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரியம்பகேஷ்வர் கோவில் பிரம்மகிரி மலைகளின் அடிவாரத்தில் உள்ளது. இக்கோவில் மராட்டிய பேரரசின் மூன்றாவது பேஷ்வாவான பாலாஜி பாஜிராவ் என்பவரால் கட்டப்பட்டது.
புனிதமான கோதாவரி நதி திரியம்பகேஷ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள பிரம்மகிரி மலைகளில் இருந்து குஷாவர்த்த குண்ட் என்றழைக்கப்படும் ஒரு குண்டிலிருந்து உருவாகிறது. பிரம்மகிரி மலைகளின் உயரே அமைந்துள்ள கௌதம முனிவரின் தியான இடங்களாக குகைகள் இங்கு உள்ளது என்றும், வேறு சிலர் கோரக்நாத் முனிவரின் தியான இடங்களான குகைகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முகங்களுடன் அமைந்திருப்பது விசேஷமாகும்.
மற்ற ஜோதிர் லிங்கங்கள் எல்லாம் சிவனையே முக்கியமாக கொண்டிருக்க இங்கு மட்டும் மூன்று தெய்வங்களின் முகங்களுடன் அமைந்திருப்பது வித்தியாசமான அமைப்பாகும். கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் பிரம்மகிரி, நீலகிரி மற்றும் கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் மக்கள் வந்து ஈசனை தரிசனம் செய்து செல்கின்றனர். சீரடியிலிருந்து 113 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில். நாசிக்கிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மிகவும் பழமையான கோவில் இது.
இக்கோவில் கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயர மலை மீது கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் மேலே வாழைப்பூ வடிவில் கூம்பான விமானம் உள்ளது. அதன் உச்சியில் தங்க கலசமும், சிவனின் சூலமும் உள்ளது. லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே இருக்கிறது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளமாக உள்ளது. இந்த பள்ளத்தில் மும்மூர்த்திகளை குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. இந்த குழிக்கு மேல் ஒரு முகம் அல்லது மூன்று முகம் கொண்ட கவசம் சாத்தப்பட்டு வழிபடப்படுகிறது. இக்கோவிலின் திருக்குளம் அமிர்தவர்ஷினி என்று அழைக்கப்படுகிறது.
ஆஞ்சநேயர் கோவில்:
ராவணனுடன் போரிடும்போது தனது வலிமை மற்றும் தைரியத்திற்காக ராமரின் ஆசிர்வாதங்களை பெறுவதற்கு அனுமான் இங்கு ராமரை வழிபட்டதாக கூறப்படுகிறது. இங்கு ஸ்ரீ ராம நவமி, அனுமத் ஜெயந்தி, மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
சீதா குஃபா (குகை):
பஞ்சவடி நாசிக்கில் உள்ள மற்றொரு முக்கியமான இடம் சீதா குஃபா. அதாவது சீதையின் குகை. ராமர் லக்ஷ்மணருடன் வனவாசம் சென்ற பொழுது சீதை இங்கு ஓய்வெடுத்ததாக கூறப்படுகிறது. ராமாயணத்தின்படி சீதை வனவாசத்தில் இங்கு இருந்த இடம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறுகிய படிக்கட்டுகள் நிறைந்த இந்த புனித குகையில் கிட்டத்தட்ட குனிந்து உட்கார்ந்த நிலையில் தான் செல்ல வேண்டும்.
உள்ளே அழகான ராமன் சீதை மற்றும் லக்ஷ்மணரின் சிலைகளும் சீதை வழிபட்ட சிவலிங்கம் உள்ளே உள்ளன. குறுகிய வழியாக உள்ளே சென்று மற்றொரு குறுகிய வழியாக வெளியே வரவேண்டும். வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த இடம் பழங்கால பாறை அமைப்புகளுடன் கூடிய குகையாக உள்ளது.
காலாராம் மந்திர்:
1782ல் சர்தார் ரங்கராவ் ஒதேகர் என்பவரால் கட்டப்பட்ட கோவில் இது. இங்கு கருப்பு நிறத்தில் ராமர், சீதை மற்றும் லட்சுமணர்களின் சிலைகள் உள்ளது. ராமரின் பிரதான கோவிலில் 14 படிகள் உள்ளன. இது ராமரின் வனவாசத்தின் 14 ஆண்டுகளை குறிப்பதாக உள்ளது. கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளது. மத்திய பேருந்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பிரதான நுழைவாயிலில் கருப்பு நிற அனுமன் சிலையும், தத்தாத்ரேயரின் கால் தடங்கள் ஒரு கல்லில் பதிக்கப்பட்ட ஒரு மிகப்பழமையான மரமும் உள்ளது. கோவிலுக்கு அருகில்தான் கபாலேஷ்வர் மகாதேவ் கோவிலும் அமைந்துள்ளது.