
கோடை காலம் தொடங்கிவிட்டது. பிள்ளைகளுக்கும் பள்ளி விடுமுறை விட்டாயிற்று. கோடைக்கு குளிர்ச்சியாக எங்கு செல்லலாம் என்று நினைக்கும் பொழுது நம் நினைவில் முதலில் வருவது நவிர மலை அல்லது ஜவ்வாது மலை தான். அனல் காற்றும், அடிக்கிற வெயிலிலிருந்தும் தப்பிக்க செல்லக்கூடிய அற்புதமான இடம் இந்த ஜவ்வாது மலை தான்.
எங்கு திரும்பினாலும், பச்சை பசேல் என காட்சியளிக்கும் இயற்கை பகுதிகளும், வழியெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் ஓடைகளும், அழகான சின்ன சின்ன கிராமங்களும், தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் நடுகற்களும், சாலையோரங்களில் விற்கப்படும் சுத்தமான மலை தேன்களும், சுவை மிகுந்த பலாப்பழங்களும், எங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக வயல் வெளிகளும் நம்மை வெயிலின் கடுமை தெரியாமல் பார்த்துக் கொள்கின்றன.
எப்படி செல்வது?
மலைக்குச் செல்ல திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்தும், வேலூரில் இருந்தும், திருப்பத்தூரில் இருந்தும் பேருந்துகள் உள்ளன. யானைகள் மற்றும் வனவிலங்குகளின் ஆபத்து இருப்பதால், இரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது. கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் முதல் 1350 மீட்டர் வரை உயரத்தில் அமைந்துள்ளது இந்த மலைகள்.
சிறப்புகள்:
ஜவ்வாது மலை சுமார் 260 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட கிராமங்களும் பழங்குடியினரும் அதிக அளவில் வசிக்கின்றனர். பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல்வேறு நடுகற்கள் இம்மலையில் உள்ளன.
இம்மலையில் பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும், கீழ்செப்பிளி, மண்டப்பாறை இடங்களில் பெருங்கற்கால ஈம சின்னங்களும் காணப்படுகின்றன.
இங்கு வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்புகள் தனித்துவமானவை. இவர்கள் தங்கள் பழங்குடி மரபுகளையும், வழக்கங்களையும் பேணி பாதுகாத்து வருகின்றனர்.
இங்குள்ள மக்கள் தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களை பயிரிடுகின்றனர். இம்மலை வாழ் மக்களின் வாழ்வாதாரமாக தேன், மிளகு, பழ வகைகளும் உள்ளன.
கோடை விடுமுறையை கழிக்க சிறந்த இடமாகவும், நம்முடைய பட்ஜெட்டில் செல்வதற்கு ஏற்ற சுற்றுலா தலமாகவும் இந்த ஜவ்வாது மலை உள்ளது.
இங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
நீர்மத்தி மரம்:
ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆசியாவின் பெரிய அடித்தண்டு கொண்ட நீர்மரம் உள்ளது. இதன் அடித் தண்டை கட்டிப்பிடிக்க வேண்டுமானால், குறைந்தது 20 மாணவர்களாவது கைகோர்க்க வேண்டியிருக்கும். இம்மரம் இம்மலையின் மேல்பட்டு கிராமத்தில் உள்ளது. மிகவும் ரம்யமான இயற்கை வளம் சூழ்ந்த அழகான கிராமம் இது.
பீமன் அருவி மற்றும் படகு குழாம்:
ஜவ்வாது மலையின் ஒரு முக்கிய அட்ராக்க்ஷன் இந்த அழகிய பீமன் அருவியாகும். இந்த நீர்வீழ்ச்சி ஜவ்வாது மலையில் ஜமுனாமரத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. வார இறுதி நாட்களில் நிறைய சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பார்கள். படகு சவாரிக்கு ஏற்ற கோமுட்டேரி என்ற படகு குழாமும், பீமன் நீர்வீழ்ச்சியும் இயற்கையின் கொடைகளாக அமைந்துள்ளன.
செண்பகாதோப்பு அணை மற்றும் மிருகண்டா நதி அணை:
மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகாதோப்பு அணை மற்றும் மலையின் மேல் அமைந்துள்ள மிருகண்டா நதி அணையும் பார்க்க வேண்டிய இடங்கள்.
கோவிலூர் சிவன் கோவில்:
வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இது சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவிலூர் சிவன் கோவிலாகும்.
அமிர்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தொலைநோக்கி மையம்:
வனவிலங்குகளைக் காண விரும்புகிறவர்களுக்கு ஏற்ற இடம் இந்த சரணாலயம். வைனுபாப்பு தொலைநோக்கி மையம் பார்வையிட சிறந்த இடமாகும். 'வைனு பாப்பு' என்பவர் பிரபலமான இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர். அவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இங்கு ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி (மெகா சைஸ் டெலஸ்கோப்) உள்ளது.