உள்ளூரிலேயே  பயணம்...
உள்ளூரிலேயே பயணம்...

உள்ளூரிலேயே உற்சாகமாக டூர் போவது எப்படி?

கோடை வெயில் தகித்தாலும் அதைப் பொருட் படுத்தாமல் பிள்ளைகளுடன் வெளியூர்களுக்கு டூர் செல்ல கிளம்புவது நமது வழக்கம். சில காரணங்களால் டூர் செல்ல முடியவில்லையே என்று  நினைப்பவர்கள் கவலையை விடுங்கள். மிகக் குறைந்த செலவில் குடும்பத்தினருடன் உள்ளூரிலேயே  பயணம் போகலாம். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பயணம் என்றாலே எல்லாருக்கும் இன்பமயமான உற்சாகமான ஒரு அனுபவம்தான். அதற்கான திட்டமிடல்கள் ஒரு புறம் இருந்தாலும் பயணத்திற்கான செலவு பற்றிய அச்சமும் பலரை சூழ்ந்து கொள்ளும். பொதுவாக இன்பச் சுற்றுலா என்றாலே நாம் வழக்கமாக போகும் இடத்தை விட்டு, புதியதாக ஒரு இடத்திற்கு  செல்வதைத் தான் குறிப்பிடுவார்கள். ஆனால் சிலருக்கு போதிய பணமோ அல்லது நேரமோ இல்லாத காரணத்தால் வெளியூர் போக முடியவில்லை என்ற சூழ்நிலை நிலவுகிறது. அதே சமயம் பள்ளி விடுமுறை விட்டு வீட்டில் இருக்கும் பிள்ளைகளின் ஆசையையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் குடும்பத் தலைவருக்கு உண்டு.

தன் பிள்ளைகளை அழைத்து இது பற்றி அவர் பேசலாம். நேரமும் வசதியும் வாய்க்கும்போது அவர்கள் ஆசைப்படும் வெளியூருக்கு அல்லது மலைவாசஸ் தலங்களுக்கு டூர் போகலாம் என்பதை எடுத்துச் சொல்லலாம். இந்த விடுமுறையில் தங்கள் ஊருக்கு  அருகில் உள்ள இடங்கள் மற்றும் உள்ளூரிலேயே இருக்கும் இடங்களை பற்றிய ஒரு பட்டியல் போடலாம். 

நீர் வீழ்ச்சி...
நீர் வீழ்ச்சி...

நிச்சயமாக ஒவ்வொரு ஊருக்கென்றும் என்றும் ஒரு தனிச்சிறப்பு இருக்கும். அந்த ஊரில் உள்ள அருங்காட்சியகங்கள் புராதனமான கோயில்கள், நீர்வீழ்ச்சிகள் அருவிகள் முக்கியமான தொழிற்சாலைகள் போன்றவற்றை பற்றி ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொள்ளலாம். ஊரை விட்டு 50 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் சிறப்புமிக்க இடங்களையும் பட்டியலிடலாம். 

ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் உள்ளூரிலேயே அல்லது சுற்று வட்டாரத்தில் நீங்கள் இதுவரை பார்க்காத பகுதிகள் அதில் இடம்பெற்றிருக்கும். நிறையப் பேர் உள்ளூரில் இருக்கும் அருங்காட்சியகத்திற்கு சென்றிருக்கவே மாட்டார்கள். பிள்ளைகளை அழைத்துச் சென்று அருங்காட்சியகத்தை சுற்றி காண்பித்து விளக்கிச் சொல்லலாம். 

புராதனமான கோயில்களுக்கு அழைத்துச் சென்று நின்று நிதானமாக ஒவ்வொரு இடமாக ரசித்து அது பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லலாம். சிலைகள், கட்டிட பாணி, வடிவமைத்திருக்கும் திறன், பழங்கால மன்னர்களின் ஆலய பணிகளுக்கான அர்ப்பணிப்புணர்வு, பக்தி, கலாச்சார ஈடுபாடு பற்றி விரிவாக எடுத்துரைக்கலாம்.

தமிழகப் கோயில்கள்
தமிழகப் கோயில்கள்

பொதுவாக நமது தமிழக கோயில்கள் மிகவும் புராதனம் பெற்றவை. அவற்றின் சிறப்பு பற்றி அங்குள்ள அர்ச்சகர், அல்லது பெரியவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இணையத்தில் தேடினாலும் ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கும். அதை அறிந்து கொண்டு பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லலாம். 

இதையும் படியுங்கள்:
உண்மையான சந்தோஷம் என்பது எது தெரியுமா?
உள்ளூரிலேயே  பயணம்...

கலாச்சார சிறப்பு வாய்ந்த இடங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் உள்ளூரிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் அமைந்திருக்கும். அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து  தகவல்களை அறிந்து கொள்ளவும். குடும்பத்தினருடன் அங்கு சென்று பொறுமையாக ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்து வரலாம். 

இதன்மூலம் வெளியூர்களுக்கு அல்லது வெளி மாநிலத்திற்கு டூர் செல்ல முடியவில்லை என்ற ஏக்கத்தை ஓரளவு தணிக்கலாம். நாம் செய்யும் மிகப்பெரிய தவறு, தூரத்தில் இருக்கும் இடங்களை  பார்க்க ஆர்வம் காட்டுகிறோமே தவிர உள்ளூரில் இருக்கும் அருமையான அரிய இடங்களைப் பார்த்து ரசிக்க தவறிவிடுகிறோம். அதை இந்த கோடை விடுமுறையில் சென்று பார்த்துப்  பயன்பெறலாமே!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com