
தொலைதூரம் மற்றும் வெளியூர் பயணங்களை பலரும் தவிர்ப்பதற்கான முக்கிய காரணமே டிராவல் பேக்கின் அதிக சுமைதான். அதிக எடையுள்ள பேக்கை தூக்கிக் கொண்டு பயணிப்பது ஒருவிதமான சலிப்பை உங்களுக்கு ஏற்படுத்தி விடும். இதிலிருந்து நீங்கள் தப்பிக்கவும், பயணத்தை சுமுகமாக மேற்கொள்ளவும் சில டிப்ஸ்களை இப்போது வழங்குகிறோம்.
பொதுவாக பயண நாட்களைப் பொறுத்து தான் தேவையான பொருள்களை எடுத்து வைக்க வேண்டும். எந்தத் திட்டமும் இல்லாமல் பல பொருள்களை எடுத்துக் கொண்டால் உங்கள் டிராவல் பேக் சுமையாகத்தான் தெரியும். ஆகையால், எத்தனை நாட்கள் பயணம், பயணிக்கும் இடம் மற்றும் எதற்காக பயணம் மேற்கொள்கிறீர்கள் போன்றவற்றை அறிந்து, அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.
பயணத்திற்கு எந்தெந்தப் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை முதலில் பட்டியலிட வேண்டும். திருமணம் மற்றும் விஷேசங்களுக்குச் சென்றால், எடை குறைந்த ஆடம்பரமான உடைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
இன்றைய காலத்தில் டிராவல் பவுச்சுகள் கடைகளில் கிடைக்கின்றன. நன்றாக மடங்கக் கூடிய பொருள்களை டிராவல் பவுச்சுகளில் சுருட்டி வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் டிராவல் பேக்கில் இடம் தாராளமாக கிடைக்கும். டிராவல் பவுச்சுகளில் துணிகளை வைப்பதற்கு முன்பு, அதில் காற்றை எடுத்து விட்டு பேக்கிங் செய்ய வேண்டும்.
செருப்பு மற்றும் ஷூக்களை நன்றாக கழுவி வெயிலில் உலர்த்திய பிறகு, தனியாக ஒரு பையில் எதிரெதிர் திசையில் வைத்துக் கொள்ளலாம்.
மாத்திரைகளை மொத்தமாக எடுத்துக் கொள்ளாமல், பயண நாட்களுக்கு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் சிறு சிறு அறைகளைக் கொண்ட டப்பாக்களில் மாத்திரைகள் வைத்துக் கொள்ளலாம்.
ஹெட்போன் மற்றும் சார்ஜர்களை டிராவல் பேக்கில் அப்படியே எடுத்து வைக்காமல், இதனையும் தனியாக ஒரு சிறிய பவுச்சில் வைத்துக் கொள்ளலாம். இது பயண நேரத்தில் ஏற்படும் தேவையற்ற பதட்டத்தை தவிர்க்க உதவும்.
அழகு சாதனப் பொருட்களை தனியாக ஒரு டப்பாவில் எடுத்துக் கொள்வது நல்லது. அதே போல் டூத்பிரஷ், டூத் பேஸ்ட் மற்றும் சோப்புகளையும் தனி டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒருவேளை பயணத்தின் போது உணவுகளை கொண்டு செல்ல நேரிட்டால், அதற்கென தனியாக பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். வாழை இலையில் உணவுகளை பார்சல் செய்து கொள்வது சிறப்பு. பயணம் முடிந்து திரும்பி வருகையில் பெருமளவு சுமையை இது குறைக்கும்.
உடுத்திச் சென்ற அழுக்கான உடைகளை எடுத்து வர தனியாக ஒரு பையை முன்பே எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. பயணத்தின் போது டிராவல் பேக்கை அடிக்கடி திறந்து பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
இழுத்துச் செல்லும் பேக்குகள் மற்றும் கைப்பிடி கொண்ட டிராவல் பேக்குகள் நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை பயணத்திற்கு முன்பே சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு போதுமான சுமையைத் தாங்குமா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பயணத்தின் போது பேக்குகள் அறுந்து, நீங்கள் அவதிப்படும் நிலையை இதன்மூலம் தவிர்க்க முடியும்.
உங்களுடைய டிராவல் பேக் அதிகபட்சமாக 3 கிலோ எடைக்குள் இருந்தால், உங்களுடைய பயணம் இனிதே நிறைவு பெறும்.