பயணம்; நான் ரசித்த அழகிய தாஜ்மஹால்!

Memorial place
taj mahal
Published on

யணம் செய்வது என்றால் எந்த வயதினருக்கும் அல்வா சாப்பிடுவது போல்தான். அவ்வளவு பிடிக்கும். ஓரிடத்திற்கு ஒருமுறை சென்றுவிட்டு பல ஆண்டுகள் கழித்து அதே இடத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் முன்பு எடுத்த போட்டோவுடன் அங்கு நின்று அடுத்த முறை எடுத்த போட்டோவையும் ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷம் அடைவது மனித இயல்பு.  பயணத்தில் வித்தியாசத்தை உணர்த்தும் போட்டோவை காணும்போது பல வருடங்களுக்கு முன்னால் இருந்த மனநிலை வயது புத்தி கூர்மை பிறகு எடுத்த போட்டோவின் முதிர்ச்சி தன்மை, எல்லாவற்றிலும் ஒரு தெளிவு என்பதை எடுத்துக் காட்டுவது புகைப்படம்தான். ஆதலால் அப்படி இருந்த புகைப்படத்தை ரசிப்பதில் எல்லோருக்கும் தனி பிரியம் உண்டு. 

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்ப்பது என்றால் சிறுவயதில் ஏதோ கனவு காண்பது போல் தோன்றும். பிறகு அதைப்  பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்து அங்கு செல்லும் பொழுது அதன் இயற்கை அழகை ரசிப்பதில் அலாதி ஆனந்தம் அடைவோம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் காதலின் நினைவுச் சின்னமாக  மனைவி மும்தாஜுக்காக முகலாய பேரரசர்  ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சின்னம்தான் தாஜ்மஹால். யமுனை நதிக்கரையில் பௌர்ணமி நிலவில் அந்தப் பளிங்கு கல்லறையை காணும் பொழுது நமக்குள் ஒரு பரவசம் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பொறுமை இருந்தால் எதிலும் வெற்றிதான்!
Memorial place

அந்தக் கல்வெட்டின் மீது அரபு மொழியில் குர்ஆன் பொறிக்கப் பட்டுள்ளது. இது அல்லாஹ்வின் 99 வெவ்வேறு பெயர்கள் அடங்கியதாக கூறுகிறார்கள். 

மேலும் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் என்று சொன்னால் தாஜ்மஹாலின் வெளிப்புறத்தில் உள்ள சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள்  பெரும்பாலும் புனித நூலான குர்ஆன் ஷெரீப்பிலிருந்து எடுக்கப்பட்டதாகும். கீழே நின்றபடியே அதன் மேல் வரையில் உள்ள எழுத்துக்களைப் பார்த்து, அந்த மொழி தெரிந்தவர்கள் படிக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. அதன் தனிச்சிறப்பு  என்று நான் கருதுகிறேன்.

மேலும் தாஜ்மஹாலின் நான்கு புறமும் அமைக்கப் பட்டுள்ள மினார்கள் என்று அழைக்கப்படும் தூண்கள் தாஜ்மஹாலை இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வண்ணமாக சாய்வாக அமைக்கப்பட்டுள்ளது அதன் மற்றொரு தனிச்சிறப்பு.  

அந்தப் பளிங்கு கற்கள் ஒவ்வொன்றிலும் ஷாஜகான் மும்தாஜ் மீது வைத்திருந்த காதலை அறிய முடிகிறது என்றால், அவர் தூரத்திலிருந்து பார்த்த வண்ணமே இருந்தது, பக்கத்தில் இருந்து ரசிக்க முடியவில்லையே என்ற துன்பத்தையும் அது வெளிப்படுத்துவதாகத்தான் தோன்றுகிறது. ஷாஜகானின் இன்பத்தையும் துன்பத்தையும் பிழிந்து தரும் கற்களாகத்தான் அவற்றை காணமுடிகிறது. அங்குள்ள ஒவ்வொரு சதுர கல்லிலும் உள்ள கலைநயத்தை கண்டு வியக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். எவ்வளவு கலை நுட்பம் தெரிந்தவர்களாக இருந்தாலும் அதை கற்றுக் கொள்வதற்கு சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நுட்பங்கள் நிறைந்தவை தாஜ்மஹாலின் கலை நுணுக்கம் என்றால் மிகை ஆகாது. 

முதன் முதலாக தாஜ்மஹாலுக்கு சென்ற போட்டோவும் 25 வருடம் கழித்து சென்ற போட்டோவும்.
முதன் முதலாக தாஜ்மஹாலுக்கு சென்ற போட்டோவும் 25 வருடம் கழித்து சென்ற போட்டோவும்.

எல்லாவற்றுக்கும் மேலாக  ஷாஜகான் டெல்லியில் இருந்து அவர் கட்டிய செங்கோட்டை முதல் ஜும்மா மசூதி என்று அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டு வந்தால் அவர் ஒரு கட்டடக்கலை பிரியர் என்று உணர்ந்து கொள்ளலாம். வருடம் தோறும் 8 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வந்து குவியும் இடம் தாஜ்மஹால்தான். இதற்கு காரணம் இந்திய, பாரசீக, இஸ்லாமிய கட்டடக்கலையின் சிறப்பு அம்சம் நிரம்பியதுதான். 

ஒரு பளிங்குக் கல்லறை நடத்தும் காதல் பாடம்   படிக்காத பாமரனும் பார்த்து புரிந்துகொள்ள முடிகிற பிரசித்தி பெற்ற காட்சி வடிவம் என்று ஷாஜகான் மும்தாஜ் காதலைக் கூறலாம். அதற்கு சாட்சிதான் தாஜ்மஹால்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com