முழுக்க முழுக்க பனி கட்டியால் கட்டப்பட்ட ஹோட்டல் எங்குள்ளது தெரியுமா?

Ice Hotel
Ice Hotel

நாம் இப்படி இங்கு வெயிலில் வாடி வதங்கும் நேரத்தில் திடீரென்று பனியால் ஆன ஹோட்டலைக் கண்டால், என்ன செய்வோம்? நினைக்கும்போதே சுகமாக உள்ளதுதானே? ஆனால், ஒரு நாட்டில் முழுக்க முழுக்க பனியால் கட்டப்பட்ட ஹோட்டல் ஒன்று பல வருடங்களாக மக்களை மகிழ்வித்து வருகிறது.

எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும், எப்போதும் பனியில் வாழும் எஸ்கிமோ இன மக்கள் பனியில் வாழ்வதையே சுகமாகக் கருதுவார்கள். அதேபோல்தான், ஒவ்வொரு வருடமும் சில மாதங்கள் மக்கள் பனியில் தங்கி சிறப்பான அனுபவத்தைப் பெற கட்டப்பட்டதுதான் இந்த ஹோட்டல். இதுதான் முதல் மற்றும் மிகப் பெரிய பனி ஹோட்டலாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஹோட்டலை மறுகட்டுமானம் செய்வதற்காக, உலகம் முழுவதிலுமிருந்து மிகத் திறமையான கலைஞர்கள் 50 பேரைத் தேர்தெடுத்து கட்டுமானம் செய்வார்கள். ஒவ்வொருமுறையும் இந்த ஹோட்டல் வித்தியாசமான புதுப் பொலிவை பெறும்.

பார், கிளாஸ்கள், தட்டுகள், ஒரு சிறு தேவாலையம் என அனைத்துமே பனியால் வடிவமைக்கப்பட்ட இந்த ஹோட்டல் ஸ்வீடனில் உள்ளது. ஒவ்வொருமுறையும் நவம்பர் மாதம் மூடப்பட்டு, மறுகட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கும். பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஃப்ரெஷாகத் திறக்கப்படும்.

ஸ்வீடனில் Jukkasjarvi என்ற இடத்தில் உள்ள இந்த பனி ஹோட்டலில், உலகம் முழுவதுமுள்ள பல புகழ்பெற்ற கலைஞர்களின் ஓவியங்கள், பனி சுவரில் பல விதமான டிசைன்கள், சிற்பங்கள் போன்றவை அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த ஹோட்டலில் ஒருநாள் தங்குவதற்கு இந்திய மதிப்பில் ரூ 15,000 ஆகும். இங்கு வந்து நேரத்தைக் கழிப்பது, ஒரு கற்பனை உலகத்தில் நேரத்தைக் கழிப்பதற்கு இணையாக இருக்கும். பனியில் மீன்பிடித்தல், நாய்கள் சறுக்கி விளையாடும் இடம், என அனைத்துமே இங்கும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் அனுபவித்தப்பின்னர், நிம்மதியாக சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் தனி அறைகள் உள்ளன. அவை இன்னும் ஒரு புதுமையான அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.

கோடைக்காலங்களிலும் இந்த ஹோட்டல் மைனஸ் 5 டிகிரி செல்சியஸில் தான் இருக்கும். கோடைக்காலங்களிலும் அழகாக நிற்க பல ஏற்பாடுகளை அந்த ஹோட்டல் செய்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
உள்ளூரிலேயே உற்சாகமாக டூர் போவது எப்படி?
Ice Hotel

அதேபோல், இந்த ஹோட்டல் உள்ளே போகும்போதே, எப்படி உடை அணிந்தால் பாதுகாப்பாக இருக்கலாம், ஸ்லீப்பிங் பேக்கை எப்படி பயன்படுத்துவது போன்றவை சொல்லித்தரப்படும். அதேபோல் எப்போதும் சுடுநீர், பானங்கள் ஆகியவை கொடுக்கப்படும்.

1989ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பனி ஹோட்டலுக்கு செல்வது, உலகில் பல மக்களுக்கு இன்னும் கனவாகவே உள்ளது. இயற்கையை வைத்து மனிதன் அழகாகக் கட்டிய ஒரு உலகம் என்றே இதனை கூற வேண்டும். ஆகையால்தான், எப்போதும் இங்கு கூட்டமாகவே இருக்குமாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com