
1. ஆம்பர் கோட்டை; (Amber fort)
இது மலை மீதமைந்துள்ள ஒரு பெரிய வரலாற்று கோட்டையாகும். கி.பி 967ல் ராஜா ஆலன் சிங்கால் நிறுவப்பட்ட்டு, பின்னர் ராஜா மான் சிங் மற்றும் முதலாம் ஜெய் சிங் போன்ற ராஜபுத்திர ஆட்சியாளர்களால் மீண்டும் கட்டப்பட்டு விரிவாக்கப்பட்டது. இது சிவப்பு மணல், மற்றும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்குள் அழகிய மாவோட்டா ஏரி இருக்கிறது.
பிரமாண்டமான முற்றங்கள், அரண்மனைகள் மற்றும் திவான்-இ-ஆம் (பொது பார்வையாளர்களின் மண்டபம்), திவான்-இ-காஸ் (தனிப் பார்வையாளர்களின் மண்டபம்), ஷீஷ் மஹால், (கண்ணாடி அரண்மனை) மற்றும் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில் போன்ற அரங்குகள் உள்ளன. பார்வையாளர்கள் மலையின் மீது ஒரு அற்புதமான யானை சவாரி மூலம் கோட்டையை அடையும் வசதியும் உண்டு.
2. ஹவா மஹால்; (Hawa Mahal)
"காற்றின் அரண்மனை" என்று அழைக்கப்படும் ஹவா மஹால்,1799 ல் மகாராஜா சவாய் பிரதாப் சிங்கால் கட்டப்பட்ட ஒரு தனித்துவமான ஐந்து மாடி அரண்மனையாகும். இது கட்டிடக் கலைஞர் லால் சந்த் உஸ்தாத் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது 953 சிறிய ஜன்னல்கள் கொண்ட அதன் தேன்கூடு போன்ற முகப்பிற்கு பிரபலமானது.சிக்கலான பின்னல் வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இது வெப்பமான கோடைகாலத்தில் குளிர்ச்சியான காற்றை வழங்குகிறது. சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மணற்கற்களால் ஆன ஹவா மஹால், ராஜபுத்திர மற்றும் முகலாய கட்டிடக்கலை பாணிகளின் நேர்த்தியான கலவையாகும். குவிமாடம் கொண்ட விதானங்கள், மலர் வடிவங்கள் மற்றும் வளைவுகள் உள்ளன. இந்த அரண்மனை ஜெய்ப்பூரின் பாரம்பரியத்தின் ஒரு சின்னமாகும்.
3. நகர அரண்மனை (City Palace);
ஜெய்ப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிட்டி பேலஸ், ஜெய்ப்பூரை நிறுவிய மகாராஜா இரண்டாம் சவாய் ஜெய் சிங்கால் கட்டப்பட்டது. இது ஜெய்ப்பூரின் ஆட்சியாளர்களின் அரச இல்லமாகவும் நிர்வாக தலைமையகமாகவும் செயல்பட்டது. இந்த அரண்மனை வளாகம் ராஜபுத்திர, முகலாய மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை பாணிகளின் கலவையாகும். மேலும் பல கட்டிடங்கள், முற்றங்கள், தோட்டங்கள் மற்றும் கோயில்களை உள்ளடக்கியது.
இதில் சந்திர மஹால், முபாரக் மஹால், ஸ்ரீ கோவிந்த் தேவ் கோயில் (கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது) மற்றும் மகாராஜா சவாய் மான் சிங் II அருங்காட்சியகம் ஆகியவை முக்கியமானவை. இந்த அருங்காட்சியகத்தில் அரச உடைகள், ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்களின் விரிவான தொகுப்புகள் உள்ளன. அரண்மனையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உதய்போல் மற்றும் வீரேந்திரபோல் போன்ற பிரமாண்டமான நுழைவு வாயில்களும் உள்ளன.
4. ஜல் மஹால்; (Jal Mahal);
"நீர் அரண்மனை" என்ற ஜல் மஹால்,ஜெய்ப்பூரில் உள்ள மன் சாகர் ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு அற்புதம். இந்த அரண்மனை ஏரியின் மேற்பரப்பில் மிதப்பதுபோல தோற்றமளிக்கிறது. ராஜபுத்திர மற்றும் முகலாய கட்டிடக்கலையின் தனித்துவமான கலவைக்கு பெயர் பெற்றது. அரண்மனையில் பொதுமக்கள் நுழைய அனுமதியில்லை என்றாலும், ஏரிக்கரையிலிருந்து ஜல் மஹாலின் காட்சி பார்வையாளர்களுக்கு ஒரு பிரபலமான ஈர்ப்பாகும்.
5. ஜந்தர் மந்தர்; (Jantar Mantar)
இது 18ம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரை நிறுவிய மகாராஜா இரண்டாம் ஜெய் சிங் அவர்களால் கட்டப்பட்ட ஒரு வானியல் ஆய்வகமாகும். இது நேரத்தை அளவிட, கிரகணங்களை கணிக்க, நட்சத்திரங்களின் இருப்பிடங்களைக் கண்காணிக்க மற்றும் வான நிகழ்வுகளை துல்லியத்துடன் கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட பெரிய அளவிலான வானியல் கருவிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்த ஆய்வகம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். அதன் கட்டிடக்கலை புதுமை மற்றும் அறிவியல் முக்கியத்துவத்திற்கும், இந்தியாவின் வானியல் வரலாற்று முன்னேற்றங்களைப் புரிந்துகொள்வதற்கும் ஏற்ற முக்கிய இடமாகும்.
6. ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம்;
இது ராஜஸ்தானின் மிகப்பழமையான அருங்காட்சியகமாகும். இது இந்தோ-சாராசெனிக் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான கட்டிடத்தில் அமைந்துள்ளது மற்றும் ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து ஓவியங்கள், கம்பளங்கள், தந்தம், கல், உலோக சிற்பங்கள் மற்றும் கலைப் படைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கலைப்பொருட்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.
இங்கு எகிப்தின் டோலமிக் காலத்தைச் சேர்ந்த (கிமு 322 முதல் கிமு 30 வரை) 2,300 ஆண்டுகள் பழமையான பெண்ணின் மம்மி பாடம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு வரும் ஆறு எகிப்திய மம்மிகளில் இதுவும் ஒன்றாகும்.