
ஜாகேஷ்வர் தாம் என்பது அல்மோரா மாவட்டத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கோவிலாகும். அல்மோராவில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. இது 125 கோயில்கள் மற்றும் 174 சிற்பங்களைக்கொண்ட பெரிய கோவில் வளாகமாகும். புராணங்களின்படி இங்கு சிவபெருமான் தியானம் செய்து ஞானம் பெற்ற இடமாக நம்பப்படுகிறது. ஆதிசங்கரர் கேதார்நாத் தாம் செல்வதற்கு முன்பு இங்கு வந்து தியானம் செய்ததாக இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
9ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கல் கோயில்களின் தொகுப்பு இது. கடல் மட்டத்திலிருந்து 1,870 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு உயர்ந்த தேவதாரு மரங்களால் சூழப்பட்டு கம்பீரமான இமயமலையின் பின்னணியில் அமைந்துள்ளது இக்கோவில்.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கல்கோவில்கள் உள்ளன. அவற்றில் சில ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவை. நேர்த்தியான கட்டிடக்கலை மற்றும் சிக்கலான சிற்பங்களை கொண்டுள்ளது. மிகவும் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது இக்கோவில் தொகுப்பு.
கோவில்கள் குப்தர்களுக்கு பிந்தைய மற்றும் இடைக்காலத்திற்கு முந்திய காலங்களை சேர்ந்தவை என்றும், சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள கோவில்களின் சுவர்கள் மற்றும் தூண்களில் வெவ்வேறு காலகட்டங்களில் 25 கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த புனிதமான தலத்தில் பல சிவன் கோவில்கள் அமைந்துள்ளன.
ஜாகேஷ்வர் கோவில் வளாகத்தில் ஜக்நாத் கோவில், ஹனுமான், சூரியன், நீல் காந்த் கோவில், நவகிரக கோவில், புஷ்டி மாதா, லகுலிசா கோயில், கேதார்நாத், நவதுர்கா, படுக் பைரவ் மற்றும் பல கோயில்கள் உள்ளன. கோயில் வளாகத்தில் ஒரு பிரம்ம குண்டமும் உள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கோவில் அருகில் ஒரு அருங்காட்சியகத்தையும் அமைத்துள்ளது.
மகா மிருத்யுஞ்சய சிவன் கோவில்:
உலகிலேயே மகா மிருத்யுஞ்சய வடிவத்தில் சிவனுக்கு இருக்கும் ஒரே கோவில் இது என்று நம்பப்படுகிறது. இந்த கோவில்கள் கத்யூரி வம்சத்தின் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோயில் சுவர்களில் தான் 25 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை சுமார் 7 - 10ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை.
இந்த கல்வெட்டு பிராமி எழுத்துக்கள் மற்றும் சம்ஸ்கிருத மொழியில் உள்ளது. ஜாகேஷ்வரின் முக்கிய தலங்களில் இந்த மகா மிருத்யுஞ்சய கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மரணத்தை வென்ற ஈசன் என்பதன் காரணமாகவே இவர் மிருத்யுஞ்சயா என்று அழைக்கப்படுகிறார்.
மரணத்தின் கடவுளான எமராஜன் இந்த கோவில் வளாகத்திற்கு வர பயப்படுவதாக நம்பப்படுகிறது. இங்கு சிவராத்திரி மற்றும் ச்ரவண மாதங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். ஜாகேஷ்வர் தாம் கோவில் குழுவில் மிகவும் பெரியது மற்றும் அழகான கோவில் இந்த மகா மிருத்யுஞ்சயா மகாதேவ் மந்திர்.
கோவிலுக்கு செல்ல சிறந்த நேரம் ஏப்ரல் முதல் ஜூன் வரை மற்றும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை. ஜாகேஸ்வர் கோவிலுக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் கத்கோடம் 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் பந்த்நகர்.