உல்லாசப் பயணிகள் மிகவும் விரும்பக்கூடிய ஒரு பொழுதுபோக்குத் தலம் – ஜோக் நீர்வீழ்ச்சி. கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா மாவட்டத்தில் இந்த பிரமாண்ட நீர்வீழ்ச்சியைக் காணலாம். 830 அடி உயரத்திற்கு மேலே பெருகி வரும் ஷராவதி நதி, இந்த இடத்தில் அப்படியே கீழே வீழ்கிறது. இந்தியாவிலேயே மிக உயரமான, செங்குத்தான நீர்வீழ்ச்சி இது.
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் பாயும் ஷராவதி நதி, ஜெரு ஸப்பே என்ற கிராமத்துக்கு அருகே வந்தவுடன் ஜோக் ஃபால்ஸ் என்ற பெயர் கொண்ட நீர்வீழ்ச்சியாக வீழ்ந்து, ஹொன்னாவர் என்ற இடம் வரை ஆறாகப் பாய்ந்து, அரபிக் கடலில் கலக்கிறது.
இதில் அற்புதம் என்னவென்றால் ஷராவதி நதி ஜெரு ஸப்பே கிராமத்தில் நான்கு கிளைகளாகப் பிரிந்து அருவியாக வீழ்கிறது. அதாவது நான்கு மகாப் பெரிய விழுதுகள் போல! இந்த நான்கு அருவிகளுக்கும் தனித்தனி பெயர் உண்டு.
அமைதியாக வீழ்வது ராஜா அருவி என்று பெயர் பெற்றிருக்கிறது. இது 830 அடி உயரத்திலிருந்து பாறை அல்லது காட்டுப் பகுதி என்று எந்தத் தடையும் இல்லாமல் நேராக விழுகிறது.
இரண்டாவது, மலைப் பாறைகளினூடே புகுந்து அந்தத் தடையால் கோபப்பட்டது போல பேரிரைச்சலுடன் விழுகிறது. இந்த இரைச்சல் கர்ஜனை போல இருப்பதால் இதற்கு ரோரர் ஃபால் என்று பெயர்.
மூன்றாவது ஒரு பெரிய துவாரம் வழியாக கடும் வேகத்துடன் விழுகிறது. இந்த வேகத்தை வைத்து இதற்கு ராக்கெட் அருவி என்று அழைக்கப்படுகிறது.
மிக நளினமாக, தேர்ந்த நடனப் பெண்மணியின் எழிலான அசைவுகளை நினைவூட்டும் நான்காவது அருவி, ‘லேடி டேம் பிளான்ச்‘ எனப்படுகிறது.
இந்த அருவிகளைக் காண ஜூன் முதல் செப்டம்பர் மாதம்வரை சரியான பருவம் என்று அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள். இந்த மழைக்காலத்தில் கீழே பாயும் அருவிகளின் நீர்த் திவிலைகள் ஆவியாக, ஒரு மேகம் போலப் படர்ந்து சுற்றிலும் இருள் மயமாக்குகிறது. அந்த இருட்டினூடே நம் கண்ணுக்குத் தெரியாமல் மிகுந்த உயரத்திலிருந்து பெருகி விழும் அருவி இடிபோன்ற ஓசையை ஏற்படுத்தி சுற்றுலாவாசிகளை மகிழ்விக்கிறது.
மழைக் காலமாயிற்றே என்ற தயக்கம் இல்லாமல் போனால்தான் இயற்கையின் புதுப்புது வடிவங்களை நம்மால் ரசிக்க முடியும். தொலைவிலிருந்து கிளை அருவிகளின் எழிலைப் பார்த்து மகிழ பல பகுதிகள் உள்ளன. அவற்றில் வாட்கின்ஸ் மேடை என்ற இடம் மிகவும் பிரசித்தமானது.
பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அஸ்தமன சூரியனின் கைவண்ணத்தால், அழகிய வானவில், அருவி நீரின் மீது விழுந்து பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறது. சில இரவுகளில் நிலவின் ஒளியைப் பொறுத்தும் இவ்வாறு வானவில் தோன்றுகிறது என்பது வியப்பான தகவல்!
பாறை இடுக்குகளில் வாழும் புறாக்கள் அருவிக்கு மேலே அங்கும் இங்கும் பறந்து செல்வது தவிர்க்கவே முடியாத அற்புதக் காட்சி.
இந்த அருவிக்குக் காரணமான ஷராவதி நதியின் குறுக்கே, நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு அருகில் லிங்கன்மக்கி என்ற அணை அமைக்கப்பட்டுள்ளது. இது மின் உற்பத்தி செய்கிறது.
பார்ப்பவரெல்லாம் வியந்து சொல்லும் விமரிசனம்: இயற்கையின் இத்தனை எழில் தோற்றங்களை அள்ளித் தரும் ஜோக் ஃபால்ஸை உலக அதிசயங்களில் ஒன்றாக ஏன் அறிவிக்கக் கூடாது?