சர்வதேச அங்கீகாரம் பெற்ற கேரளாவின் ரகசிய கடற்கரை: இதில் இவ்வளவு சிறப்புகளா?

Payanam Articles
kappad beach calicut
Updated on

கேரளாவின் கோழிக்கோடு (Calicut) நகரத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கப்பாட் கடற்கரை (Kappad Beach) உலகப் புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். மே 20,1498ல் போர்த்துக்கீசிய மாலுமி வாஸ்கோட காமா முதன்முதலில் இந்தியாவில் காலடி பதித்த இடம் இதுவே.

கப்பாட் கடற்கரை:

வாஸ்கோட காமா வந்திறங்கியதை நினைவுகூரும் வகையில் கேரள அரசால் நிறுவப்பட்ட பிரத்யேக கல்வெட்டுடன் கூடிய நினைவுச் சின்னம் இங்குள்ளது. நகரத்தின் சலசலப்பில் இருந்து விலகி, அமைதியான சூழல், தங்க நிற மணல், தென்னந்தோப்புகள் மற்றும் கடலுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் பாறைகள் இதன் முக்கிய அழகுகளாகும்.

கப்பாட் கடற்கரை, கடற்கரை விரும்பிகளுக்கும், சாகச பிரியர்களுக்கும், தேனிலவு தம்பதிகளுக்கும் ஏற்ற இடமாகும். அமைதியான மற்றும் ரம்யமான சூழலைக்கொண்ட, நன்கு பராமரிக்கப்படும் ஒரு கடற்கரையாகும். கடலோரத்தில் உள்ள அழகான பாறைகளும், சூரிய அஸ்தமன காட்சிகளும் கடற்கரையில் பார்க்க வேண்டிய சிறப்பம்சங்களாகும்.

கேரளாவில் உள்ள மற்ற கடற்கரைகளுடன் ஒப்பிடும்பொழுது இந்த கடற்கரையில் சிறந்த வசதிகள் உள்ளன. கடற்கரையில் ஒரு நடைபாதை, வாகன நிறுத்துமிடம், ஓய்வறைகள், அருமையான உணவகங்கள் மற்றும் பல சிறு கடைகள் உள்ளன. இங்கு கடலில் படகு சவாரி, ஹவுஸ்போட் பயணம் மற்றும் நீச்சல் போன்றவற்றை அனுபவிக்கலாம்.

சர்வதேச அளவில் வழங்கப்படும் தூய்மையான கடற்கரைகளுக்கான 'நீலக் கொடி' சான்றிதழைப் பெற்ற பெருமைக்குரியது இந்த கடற்கரை. கோழிக்கோடு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கப்பாட் கடற்கரையுடன் சேர்த்து தளி கோயில், பழசிராஜா அருங்காட்சியகம் மற்றும் கப்பாட் நதி சங்கமம் ஆகியவற்றையும் கண்டு ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
குகைக்குள் பாயும் நீல நிற நீர்வீழ்ச்சி: வியக்க வைக்கும் சுவிஸ் பயணம்!
Payanam Articles

பேக் வாட்டர்ஸ்:

கப்பாட் கடற்கரைக்கு அருகிலுள்ள காயல்களில் படகு சவாரி அல்லது மிதவைப் படகுப் பயணம் மேற்கொள்ளலாம். இந்த காயல்கள், கடற்கரையோரம் உள்ள பல்வேறு கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் அமைதியான மற்றும் ரம்யமான நீர்வழிகளாகும். வழியெங்கும் காணப்படும் பசுமையான தாவரங்கள், தென்னை மரங்கள், நெல் வயல்கள் மற்றும் மீன்பிடி வலைகளின் அழகிய காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

கடலுண்டி பறவைகள் சரணாலயம்:

அமைதியான சதுப்பு நிலக்காடுகள் மற்றும் காயல்களுக்கு மத்தியில் அமைந்துள்ள கடலுண்டி பறவைகள் சரணாலயம் இயற்கை ஆர்வலர்களுக்கும், உள்ளூர் மற்றும் வலசைப் பறவைகளைக் காண விருப்பமுள்ளவர்களுக்கும் ஒரு சொர்க்கமாகும். சதுப்பு நிலக்காடுகளின் வழியே படகு சவாரி செய்யலாம். கடற்கரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு கடற்பறவைகள், மணல் கொக்குகள், ஆலாக்கள் மற்றும் நெட்டை காலிகள் போன்ற பல ஏராளமான பறவைகள் காணப்படுகின்றன.

துஷாரகிரி நீர்வீழ்ச்சி:

பசுமையான செடி கொடிகளுக்கும், சரிந்து விழும் மலைகளுக்கும் நடுவே அமைந்துள்ள துஷாரகிரி நீர்வீழ்ச்சி, கொட்டும் நீரோடைகளையும், கண்ணைக் கவரும் நிலப்பரப்புகளையும் கொண்டு பிரமிக்க வைக்கும் ஒரு இயற்கை அதிசயமாகும். மலையேற்றம் செய்வதும், சுற்றியுள்ள மசாலாத் தோட்டங்களை பார்வையிடுவதும் சிறப்பாகும். கோழிக்கோட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள அமைதியான பசுமையும், மலைகளில் இருந்து கொட்டும் நீரும் என அற்புதமான இடமாக காட்சியளிக்கிறது.

தாளி கோவில்:

கடற்கரைக்கு அருகில் 800 ஆண்டுகள் பழமையான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாளி கோவில், அதன் நேர்த்தியான கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளுக்கு புகழ்பெற்றது.கோயிலும், கொரப்புழா ஆற்றின் அழகிய உப்பங்கழி காட்சிகளும் உள்ளன.

பழசிராஜா அருங்காட்சியகம்:

அமைவிடம்:

பாரம்பரிய கட்டிடத்தில் அமைந்துள்ள பழசிராஜா அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம், கேரளாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் கலைப்பொருட்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் பொக்கிஷமாகும்.

Payanam Articles

பார்வையிட சிறந்த நேரம்:

கடற்கரைக்கு செல்ல சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களாகும்.

எப்படி அடைவது?

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 35 - 45 கிலோமீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்தும் சாலை வழியாக எளிதில் கப்பாட் கடற்கரையை அடையலாம். உப்பங்கழி வழியேயும் படகு சவாரி மூலம் செல்லலாம்.

logo
Kalki Online
kalkionline.com