குகைக்குள் பாயும் நீல நிற நீர்வீழ்ச்சி: வியக்க வைக்கும் சுவிஸ் பயணம்!

Trummelbach falls Switzerland tourism
Trummelbach falls Switzerland tourism
Updated on

“குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா?” என்று கேள்வியில் தொடங்கும் பாடல், முடிவில்

“குத்தாலம் அருவியிலே

குளிச்சதுபோல் இருக்குது!

மனச மயக்குது!

சுகமும் கிடைக்குது!” என்று பாசிடிவ்வாக முடியும்!

நமது ஊர் நீர்வீழ்ச்சிகளின் தன்மையே மாறுபட்டது. அதிலும் குற்றாலம் அருவி பற்றிச் சொல்லவே வேண்டாம்!

அக்னி வெயில் அனலாய்த் தகிக்கையில் நீர் வீழ்ச்சிகளைத்தேடி மக்கள் படையெடுப்பது இயல்பே! இன்று இரண்டு வியத்தகு நீர் வீழ்ச்சிகளைப் பார்த்து வருவோம்!

ட்ரம்மல்பாக் ஃபால் (TRUMMELBACH FALLE) மற்றும் ஸ்டவ்பாக் ஃபால் (STAUBBACH FALL) ஆகியவைதான் அவை! நடுநடுவே வேறு சில ஃபால்ஸ்களும் கொசுறாக உண்டு. என்ன? நம் இருப்பிடத்திலிருந்து சுமார் 130 கி.மீ., தூரம் என்றாலும், நேர்த்தியான சாலைகளும், கட்டுப்பாடான ஓட்டுனர்களும், நாம் கடக்கும் சாலையோரங்களில் உள்ள ஏரிகளின் எழிலும், பசுமையைப் போர்த்தியபடி பரந்து உயர்ந்து நிற்கும் மலைக்காட்சிகளும் பயணத்தை இனிமையாக்கி விடுகின்றன.

அவ்வளவு தூரத்தை சுமார் 2 மணி நேரத்திற்குள்ளாகவே அடைந்து விட முடிகிறது. இவ்வளவுக்கும் நடுவில் ஒரு மலையைக் கடக்க, ஏறி இறங்க வேண்டியுள்ளது. மற்றைய இடங்களில் பெரும்பாலும் நம் பயணம் டன்னல்களுக்குள்ளேதான்! அவற்றுக்குள்ளும் 80,100 கி.மீ., வேகத்தில் பயணிக்க முடிகிறது. எல்லா ஊர்ச்சாலைகளும் தரமுடன் இருப்பதும், நெடுஞ்சாலை களுடனான இணைப்புகள் இருப்பதும் இங்கு காணப்படும் தனிச்சிறப்பு. பராமரிப்பில் அவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள்.

முதலில் ட்ரம்மலுக்குப் போகிறோம். அடர்ந்த மர நிழல்களின் கீழே உள்ள பார்க்கிங் லாட்டில் காரை நிறுத்தி விட்டு, அருகிலுள்ள ரெஸ்டாரண்டைக் கடந்து, இருபுறமும் பல வண்ணங்களில் அனாமத்தாகப் பூத்துக் கிடக்கும் மலர்களை ரசித்தபடி சுமார் 100 மீட்டர் நடந்தால் நீர் வீழ்ச்சியின் என்ட்ரன்ஸ் வந்து விடுகிறது.

நீர் வீழ்ச்சியின் ஓசை மட்டும் பெரிதாகக் கேட்க, எங்கே கொட்டுகிறது நீர்? என்ற எதிர் பார்ப்புடனே என்ட்ரி டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறோம். சப்தம்தான் அதிகமானதே தவிர, நீரைக் காண முடியவில்லை. மேலே ஏறப் படிகளும் உள்ளன, லிப்ட்டும் உண்டு. போகையில் லிப்டிலும் வரும்போது படிகளை உபயோகிக்கலாம் என்ற எண்ணத்துடன் லிப்டில் ஏறுகிறோம். பத்து பிரிவான படிக்கட்டுகள் உள்ள அமைப்பில் பாதி வரை லிப்டில் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். 6-10 பிரிவில் ஏறிச் செல்லச் செல்ல ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர் நம் கண்களை அகல விரித்து நோக்கச் செய்கிறது!

ஆச்சரிய ஆனந்தத்தில் மனது அல்லோலம் போட்டு மகிழ்கிறது! உள்ளே உள்ள குகைப் பாதையில், ஒவ்வொரு நிலையிலும் நீர் முட்டி மோதி முத்தாய்ப்புடன் வெளிப்படுகிறது. குளிர் நம்மை வேறு உலகத்திற்கு இழுத்துச் செல்கிறது. க்ளேசியர் (Glacier) என்று அழைக்கப்படும் பனிக்கட்டியாறு 10 சேர்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. மேலிருந்து உட்புகும் 

சூரிய ஒளி வெள்ளைத் தண்ணீரை நீல நிறமாக மாற்றிக்காட்டுவதும், தெறிக்கும் நீர்த்துளிகளில் ரைன்போ ஏற்படுத்துவதுமாகக் கதிரவனும் தன் பங்குக்கு விளையாடி, நம்மை மகிழ்விக்கிறார். வினாடிக்கு 20,000 லிட்டர் நீர் கொட்டுவதாக விபரப் பலகை தெரிவிக்க, எல்லோரும் நின்று நிதானமாகப் பேரழகை ரசித்தபடி, புகைப்படம் எடுத்தபடி, வீடியோவில் பதிவிட்டபடி, மெல்ல நகர்கிறார்கள்.

‘ஹோ’என்ற சப்தம் உயரக் குகையின் உள்ளேயே சுற்றி வர, படிகளின் வழியே இறங்குகையில் வெள்ளை நீர் கால்வாய் வழியாகப் பாய்ந்தோடுகிறது. மேலிருந்து பார்க்கையில் எல்லாமே அழகுதானோ? கீழிறங்கி வருகிறோம்.

இதையும் படியுங்கள்:
வால்பாறை – அமைதி தேடுபவர்களுக்கான சொர்க்க பூமி!
Trummelbach falls Switzerland tourism

நகரின் கடைத்தெருவுக்கு வந்து சாப்பிட்டு விட்டுச் சற்றே நடந்தால், ஸ்டவ்பாக் ஃபால் அழகாக, அமைதியாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது. அதிக உயரத்திலிருந்து கொட்டும் அது காற்றோடு கலந்து விடுவதால் எனது 5 வயதுப் பேரன் அதைப்பார்த்து விட்டு, ”இதை யார் ஸ்லோமோஷனில் வைத்துள்ளார்கள்?” என்று கேட்டது மனதில் பதிந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை அருகில் சென்று பார்க்கப் படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள்.

அடிவாரத்தில் அமர்வதற்கும், சிறுவர்கள் அமர்ந்து விளையாடவும் சிறு திடல் உண்டு. முடிந்தவர்கள் மேலேறிச் சென்று பார்ப்பதும், மற்றவர்கள் மைதானத்தில் அமர்ந்து ரசிப்பதுமாகப் பொழுதைப் போக்குகிறார்கள்! இவை மட்டுமல்லாமல், ஆங்காங்கே பெரிய மலைப் பாம்புகள் தொங்குவது போல் பல அருவிகள் அனாயாசமாகக் கொட்டிக் கொண்டு இருக்கின்றன!

 ‘திருநெல்வேலிக்கே அல்வா’ என்பதுபோல் ‘சுவிட்சர்லாந்து குளிருக்கே மேலும் குளிர் சேர்க்கின்றன இந்த நீர் வீழ்ச்சிகள்!’ ஆனால் நம்மூர் நீர் வீழ்ச்சிகளுக்கும் இவற்றுக்கும் ஒரு பெரும் வேறுபாடு உண்டு. நயாகரா வரையிலும் பார்த்தாயிற்று!

குற்றால அருவியிலோ, திற்பரப்பு அருவி போன்ற மற்றவற்றிலோ நாம் குளித்து மகிழ்வதைப்போல வேறு எங்கும் நீராடி திருப்தி பெற முடியாது.

இதையும் படியுங்கள்:
அமைதி தேடும் பயணிகளுக்காகவே உருவான 'முன்ரோ தீவு'! - முழுமையான தகவல்கள்!
Trummelbach falls Switzerland tourism

அதுதான் நம்மூரின் சிறப்பு! தமிழ் நாட்டில் மட்டுமே 50 க்கும் மேற்பட்ட நீர் வீழ்ச்சிகள் இருப்பதும், தலையாறு அவற்றிலேயே மிக உயரமானது என்பதும், குற்றாலம், திற்பரப்பு, ஒகேனக்கல், பைகாரா என்று லிஸ்ட் நீளும் என்பதும் நாம் அறிந்ததே!

அருவிகளுக்குச் சென்று வர நல்ல சாலைகளும், தங்குவதற்கான ஏற்பாடுகளும், தடையற்ற போக்குவரத்தும், தரமான உணவகங்களும், பாதுகாப்பான குளியல் வசதிகளும் வேண்டும். கோடை காலங்களில் மக்கள் குவிய ஆரம்பித்து விடுவார்கள்!

அருவிச் சுற்றுலா என்றே கூட ஆரம்பிக்கலாம். உரியவர்கள் கவனித்தால் சுற்றலாவும் தழைக்கும்; பொருளாதாரமும் மேம்படும்!

logo
Kalki Online
kalkionline.com