ஒவ்வொரு மலைக்கும் பல சிறப்பு உண்டு. சில மலைகள் ஏறுவதற்கு சிரமமாக இருக்கும். அதேபோல் மலை பயணங்கள் என்றால் பல சவால்கள் நிறைந்திருக்கும். ஆனால் மேலே ஏறி கடினமான பாறைகளை கடந்து சென்றாள் நமக்கு பல அதிசயங்கள் அங்கே காத்திருக்கும். அப்படித்தான் இந்த கொண்டரங்கி மலையும் அதன் சிறப்புகளையும் பற்றி பார்ப்போம்.
கொண்டரங்கி மலை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கீரனூரில் கொண்டரங்கி மலை அமைந்துள்ளது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்திலிருந்து அரசு பேருந்துகள் இப்பகுதிக்கு செல்கின்றன. ஆனால் கொண்டரங்கி மலைப் பயணத்துக்கு மலையேறிதான் செல்லவேண்டும்.
திகிலூட்டும் செங்குத்தான பாதைகள் லிங்கம் போல காட்சியளிக்கும் இந்த மலையில் ஏற படிக்கட்டுகள் மலையில் இருந்தே செதுக்கப்பட்டுள்ளது. இது மலையின் விளிம்பில் நடந்து செல்வது போன்ற திகிலூட்டும் உணர்வைத் தரும். அதாவது ஏறும் போது சமதளமாக ஆரம்பித்தாலும், 90 டிகிரி செங்குத்தான கோணத்தில் நீங்கள் மலை ஏறுவீர்கள்.
சவாலான மலைப் பயணம்
திகில் அனுபவத்துடன் சுற்றுலா செல்ல விரும்பினால் கொண்டரங்கி மலை அதற்கு ஏற்ற இடம். மேகங்களை உரசி செல்லும் மலையின் உச்சிக்குச் செல்வது சவாலான அனுபவம் தான். அதிலும் கற்களும், புற்களும் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் செல்வது இன்னும் சவாலானது.
பாண்டவர்கள் தவம் இருந்த மலை குறிப்பாக இங்குள்ள கட்டடங்கள், சிற்பங்கள் அனைத்துமே மலையின் பாறையைக் கொண்டு கட்டப்பட்டவை. மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் இந்த மலை மீது அமர்ந்து தவம் செய்ததாக கூறப்படுகிறது. மலையின் உச்சியில் உள்ள சிவபெருமானை வழிபட இங்கு சுனைகளையும், குகைகளையும் பாண்டவர்கள் உருவாக்கினார்கள் எனவும் கூறப்படுகிறது.
வற்றாத சுனை நீர்
செங்குத்தாக செல்லும் மலை பாறையில் ஏறி செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரிக்கும். குறிப்பாக இங்கு இருந்து பார்த்தால் பழனி மலை தெரியும் என்பது தனி சிறப்பாக உள்ளது. மலை ஏறினால் நிச்சயமாக தண்ணீர் தாகம் எடுக்குமல்லவா..? அதற்கு ஏற்றார் போலவே எப்போதும் வற்றாத இரண்டு சுனைகள் இங்கு உள்ளது. சுனையில் இருந்து எடுக்கப்படும் நீரில்தான் சுயம்பு வடிவ சிவப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகிறது.
எப்போது செல்லலாம்?
மலை உச்சிக்குச் சென்றால், பார்வையை விரித்து ரசிக்கும் அழகை காண முடியும். மலையில் ஏறுவதற்குக் காலை, மாலை நேரம் சிறந்தது. இயற்கை ரசனையோடு, ஆன்மீகப் பயணம் செல்ல விரும்புவோருக்கும், மலையேற்றம் செல்பவர்களுக்கும் கொண்டரங்கி மலை ஏற்றது. குறிப்பாக மலையில் ஏறுகிறபோதும், இறங்கும் போதும் கவனமுடன் இருப்பது மிகவும் அவசியம்.
தென் மாவட்டங்களில் நீங்கள் சுற்றுலா செல்ல நேரிட்டால் அவசியம் கொண்டரங்கி மலைப் பகுதிக்கு சென்று வாருங்கள் ஒரு தனி அனுபவம் கிடைக்கும்.