
கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம் எனும் ஊரில் அமைந்துள்ளது. 1994ஆம் ஆண்டு கூந்தன்குளம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, செம்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
கூந்தன்குளம், காடன் குளம் என இயற்கையாக அமைந்துள்ள நீர்ப்பரப்பில் 129.33 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள பறவைகள் புகலிடத்தில் பூநாரைகளின் வரவு அதிகமாக இருக்கும்.
சிறப்புகள்:
நீண்டு மெலிந்த சிவந்த கால்களையும், மெல்லிய குழல் போன்ற வளைந்த கழுத்தையும், ரோசா வண்ணத்தையும் ஒத்த பூநாரைகள் இங்கு வந்து செல்வது மிகவும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் பருவநிலையை விரும்பி ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூநாரைகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன.
சைபீரியா, மங்கோலியா போன்ற நாடுகளில் இருந்து பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, கொக்குகள், கரண்டி வாயன் என பல்வேறு நீர்ப்பறவைகள் கூந்தன்குளத்திற்கு ஆண்டுதோறும் வருகை புரிகின்றன.
இங்கு டிசம்பர் தொடங்கி ஆகஸ்ட் வரையிலான காலங்களில் பறவைகள் வசந்த காலமாக இருந்து வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை பெய்து தண்ணீரினால் குளம் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும்.
அப்போது அங்கு பறவைகள் கருவேல மரங்கள், முள் மரங்களில் கூடுகட்டி குஞ்சு பொறிக்கின்றன. பின்னர் அவை பறக்கும் பருவம் வந்ததும் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்புகின்றன.
இங்குள்ள பறவைகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன.
குறிப்பாக கூழைக்கடா எனப்படும் பெலிகன், செங்கால் நாரை போன்ற அதிக எடையுள்ள பறவைகள் குளத்தை சுற்றிலும் பறக்கும்போது குட்டி விமானங்கள் வானில் பறப்பதுபோல கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பறவைகளுக்கு தேவையான அமைதியான சூழல் இங்கு இருப்பதால் இந்த இடத்தை அவைகள் விரும்புவதாக கூறப்படுகிறது.
எப்படி செல்வது?
திருநெல்வேலியில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் கூந்தன்குளம் அமைந்துள்ளது.
இதர சுற்றுலா தலங்கள்:
குற்றாலம்
களக்காடு வனவிலங்கு சரணாலயம்
மாஞ்சோலை
மணிமுத்தாறு அணை
கும்பருட்டி அருவி