
கொடைக்கானலில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குக்கல் குகைகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பழங்கால பாறைகளின் தொகுப்பாகும். இந்த குக்கல் குகைகள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளன. 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகைகள் பழமையான செதுக்கப்பட்ட குகைகளில் ஒன்றாகும். இவை கிரானுலைட் மற்றும் சார்கோனைட் எனப்படும் பல்வேறு வகையான உருமாற்ற பாறைகளின் மேல் தொங்கும் அடுக்குகளாகும்.
மலை உச்சியின் காடுகளுக்குள் இந்த குக்கல் குகைகள் மறைந்துள்ளன. உயரமான இடத்தில் இருப்பதால் காடுகளுக்குள் மலையேற்றம் செய்ய விரும்புவர்களுக்கு சிறந்த இடமாக திகழ்கிறது. செங்குத்தான பாறைகள், புல்வெளிகள் வழியாக மலையின் உச்சிக்கு செல்லும் குறுகிய பயணம் மலையேற்றம் செய்ய விரும்புபவர் களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுக்கும்.
கடல் மட்டத்திலிருந்து 6200 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த குகைகள் கொடைக்கானலில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் பனிமூட்டமான குளிர்கால நிலை நிலவுகிறது. 1980 களின் நடுப்பகுதி வரை மலை உச்சியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாகவும், தற்போது மலையற்றம் செய்பவர்களின் முகாம் தளம் ஒரு காலத்தில் பாலியன் பழங்குடியினரின் ஆரம்பகால குடியேற்றமாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.
குகைகளின் பரந்த நிலப்பரப்பும், அதன் தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு பெயர் பெற்றது. வனப்பகுதியில் மலையேற்றம் செய்ய விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு உண்மையான புகலிடமாக திகழ்கிறது. குகைகளுக்கு செல்ல உள்ளூர் வழிகாட்டிகளை நியமித்துக்கொள்வது நல்லது. வழி நடுகிலும் ஆர்க்கிட் மற்றும் சால் மரங்கள், ஜெரனியம் தோட்டங்கள், பைன் மற்றும் வாட்டல் காடுகள் நிறைந்த அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகள் வழியாக சென்றால் குக்கல் காட்டு ஓய்வு இல்லத்தை அடையலாம். 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாறை தங்குமிடம் உண்மையில் குகைகளாக, பாறைகளின் மேல் தொங்கும் அடுக்குகளாக காட்சியளிப்பது கண்ணுக்கு விருந்தாக உள்ளது.
ஏப்ரல் முதல் ஜூலை வரை மற்றும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை இங்கு செல்வதற்கு ஏற்ற காலமாகும்.
இந்தப்பகுதி நான்கு வகையான சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கியது. சதுப்பு நிலம், புல்வெளி, நன்னீர் ஏரி மற்றும் சோலை என நான்கு வகையான அமைப்புகளைக் கொண்டது. இங்கு 800 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்டமான மரம் ஒன்று உள்ளது. இது வேலி அமைக்கப்பட்டு தமிழ்நாடு வனத்துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. மிகவும் அரிதான ஒற்றை ஃபெர்ன் மரங்கள், ஜாமூன், ருத்ராட்ச மரங்கள், பல வகையான இலவங்கப்பட்டை மரங்கள் மற்றும் செண்பகம் மலர் மரங்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
இங்குள்ள கூக்கல் ஏரியில் நீர் நாய்கள் அதிகம் காணப்படுகின்றன. 165 வகையான பட்டாம்பூச்சிகளும், மரப் புறாக்களும், நீலகிரி பிபிட் போன்ற அசாதாரண பறவைகளும் இங்கு காணப்படுகிறன.