
இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிராவில் உள்ள முக்கிய கோயில்களை தரிசிக்க சென்றோம். இரண்டே மணி நேர பயணத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சென்றடைந்தோம். காலை டிபனை முடித்துக்கொண்டு சித்தி விநாயகர் கோவில், மகாலட்சுமி கோவில், சீரடி பாபா கோவில், நாசிக்கில் பஞ்சவடி, திரயம்பகேஸ்வரர் கோவில், காலா ராம் கோவில் என அருமையாக தரிசனம் கிடைத்தது.
சகல செல்வங்களையும் தரும் மும்பை மகாலட்சுமி கோவில் தரிசனம் அதுவும் வெள்ளிக்கிழமையன்று கிடைத்தது பெரும் பாக்கியம்தான். மும்பை மகாலட்சுமி கோவிலில் மகா காளி, மஹா சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி ஆகிய மூன்று தேவியரும் ஒரே இடத்தில் எழுந்தருளி உள்ள விசேஷமான தலம் இது. மகாலட்சுமி இங்கு நடுநாயகமாக வீற்றிருக்கிறாள்.
மூன்று தேவியரின் கைகளிலும் தங்க வளையலும், மூக்குத்தியும், கழுத்தில் முத்து மணி மாலைகளும் அணிந்து அற்புதமாக காட்சித் தருகிறார்கள். நாங்கள் சென்றது வெள்ளிக்கிழமை வேறு. அம்பாளை தரிசிக்க ஏகப்பட்ட கூட்டம். ஒரு மணிநேரம் வரிசையில் நின்று மிக அருகில் சென்று தரிசித்தோம். வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் இங்கு கூட்டம் அதிகம் இருக்குமாம்.
போகும் வழி எங்கும் அழகாக சிறு வாளிகளில் தண்ணீர் வைத்து அதில் மிதக்கும் தாமரை பூக்களை பார்க்கவே கொள்ளை அழகாக இருந்தது. மலர் மாலைகள், புடவைகள், பிரசாதக்கடைகள் என வரிசை கட்டி நிற்கின்றன. ஒரு சிறிய குன்றின் உச்சியில் அழகாக வீற்றிருக்கும் அன்னை மகாலட்சுமியை வெள்ளிக்கிழமை அன்று தரிசனம் செய்யும் பேறுபெற்றோம்.
மகாலக்ஷ்மி கோவில் தெற்கு மும்பையில் உள்ள பூலாபாய் தேசாய் மார்க், மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி தீபாவளி போன்றவை மிகவும் விசேஷமாக கொண்டாடப் படுகின்றன. அஷ்டலட்சுமி வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான உயர்ந்த வெள்ளி த்வஜஸ்தம்பம் (கொடி மரம்) நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது. கர்ப்பகிரகம் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முப்பெரும் தேவியரும் அழகாக காட்சி அளிக்கின்றனர். கருவறைக்கு எதிரே சிங்க வாகனம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. செழிப்பான மும்பையின் காவல் தெய்வமான மகாலட்சுமியை கண்குளிர தரிசித்தோம்.
மார்ச் ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படும் மகாராஷ்டிரா புத்தாண்டு காலமான 'குடி பத்வா திருவிழா', தீபாவளிக்கு பிறகு சில நாட்கள் கொண்டாடப்படும் 'அன்னகூட்' திருவிழா போன்றவை மிகவும் விசேஷம் என்று என்கிறார்கள். த்வஜஸ்தம்ப நாளில் தேவியின் பால்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என்றும் இதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். இங்கு ஆரத்தி மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. காலை 7 மணிக்கு ஒரு ஆரத்தியும், மாலை 6:30 மணிக்கு மற்றும் இரவு 10 மணிக்கு மூடும் சமயத்தில் ஆரத்தியும் நடைபெறுகிறது.
ஜூஹு கடற்கரை:
நாங்கள் ஜூஹு கடற்கரைக்கு செல்லும்போது நன்கு இருட்டி விட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அமர்ந்து இரவு வெளிச்சத்தில் பீச்சையும், சுற்றி உள்ள கடைகளையும் பார்த்தோம். பார்த்ததுடன் நில்லாமல் அங்கு மிகவும் பிரபலமான தெரு உணவுகளையும் ருசித்தோம். அங்கு ஒரு கடையில் தோசை ஆர்டர் செய்யும் பொழுது உரிமையாளர் திருநெல்வேலி தமிழில் பேசுவதைக் கண்டதும் நீங்கள் எந்த ஊர் என்று விசாரிக்க எங்கள் ஊர் திருநெல்வேலி.
இங்கு வந்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது என்று பேச எங்களுக்கு ஒரே சந்தோஷம் காரணம் நாங்களும் திருநெல்வேலிக்காரர்கள் என்பதால் கொஞ்ச நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு வந்தோம். ஜுஹு கடற்கரை மும்பையின் மிக நீளமான கடற்கரையாகும்.
இது பல்வேறு வகையான தெரு உணவுகளுக்கு பெயர் பெற்றது. கடற்கரை மணலில் நடப்பது சுகமான அனுபவமாக இருந்தாலும் சுத்தமாக பராமரிக்கப்படாமல் சிறிது அசுத்தமாகவே காணப்பட்டது.