
முதல் நாள் 'லே'வில் இருந்து அரைமணி நேர பயணத்தில் உள்ள ஏழு இடங்களைச் சுற்றிப்பார்த்தோம். இரண்டாம் நாள் பார்க்கப்போகும் இடங்களின் எண்ணிக்கை குறைவு, ஏனென்றால் பயண நேரம் சற்று அதிகம்.
Spot 1: Hemis Monastery
'லே'வில் இருந்து 45கிமீ தொலைவில் உள்ளது இந்த ஹெமிஸ் புத்த விகாரம். லடாக்கில் இருப்பதிலேயே மிகப் பெரியதும் செல்வ வளம் மிக்கதுமான புத்த விகாரம் இது தான். செம்பு புத்தர் சிலை, தங்கம் வெள்ளி பதிக்கப்பட்ட ஸ்தூபிகள், பழங்கால மஹாயான பௌத்த மதம் சார்ந்த ஓவியங்கள், கலைப் பொருட்கள் என்று உள்ளே ஏராளமானவை இருக்கின்றன. நிறைய படிகள் ஏறவேண்டியதாய் உள்ளது. இங்கும் மந்திர மணிகள் உள்ளன. உள்ளே ஒரு அருங்காட்சியகமும் இரண்டு கோவில்களும் இருநிலை மாடங்களும் உள்ளன. திபெத் – இந்தியா – சீனம் ஆகிய மூன்று நாடுகளின் சாயலும் உள்ளவாறு கட்டப்பட்டுள்ள இந்த புத்த விகாரம், ஆன்மீகம், அமைதி, சமச்சீர் தன்மை ஆகியவற்றின் உறைவிடமாக உள்ளது. மஹாயான பௌத்தத்தின் முக்கியமான கோவிலான இங்கே ஆண்டுதோறும் நடக்கும் ஹெமிஸ் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.