நகரத்தின் முக்கியமான இடங்கள் என்றாலே அங்கு வாழ்வதற்கு அதிகமான வாடகைத் தர வேண்டியதாக இருக்கும். ஆனால் பிரபல சுற்றுலா கோட்டையான இந்த கோட்டையில் இன்று வரை எந்த வாடகையும் வரிகளும் இல்லாமல் இலவசமாக வாழ்ந்து வருகிறார்கள் என்றால் நம்ப முடியுமா? ஆம்! ராஜஸ்தானில் உள்ள இந்த கோட்டைக்கு ஜெய்சல்மெர் என்று பெயர். இங்கு கிட்டத்தட்ட ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கோட்டை 1156ம் ஆண்டு மன்னர் 'ரவால் ஜெய்சால்' என்பவரால் கட்டப்பட்டது. உலகிலேயே இந்த கோட்டையில் மட்டும்தான் மக்கள் வாழ்கிறார்கள் என்பதால் இது யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இக்கோட்டையில் 4 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அந்த கோட்டை ஒரு சுற்றுலா இடம் என்பதால் அந்த வருவாயின் மூலமே அங்குள்ள சில குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மன்னர் ஒருவர் அங்கு வாழ்ந்த ஒரு இன மக்களின் சேவையை கண்டு ஆச்சர்யமடைந்து அவர்களுக்கு 1500 அடி கோட்டை ஒன்றைப் பரிசாக வழங்கினார். 800 ஆண்டுகளுக்கு பிறகும் தங்கள் மூதாதயர்களுக்கு கொடுத்த அந்த பரிசை இங்கு வாழும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். 12வது நூற்றாண்டில் இருந்த இடம் போலவே இப்போதும் அந்த கோட்டை உள்ளது. அரசர் ரவாலிடமிருந்து முகலாய அரசு அந்த கோட்டையை கைப்பற்றிய போதும் கூட அந்த மக்கள் வசித்த இடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதன்பின்னர் நடைபெற்ற எந்த போரினாலும் இக்கோட்டை சேதமடையவில்லை, அந்த மக்களின் உரிமையையும் யாரும் பறிக்கவில்லை. தினமும் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா வாசிகள் அங்கு செல்கிறார்கள்.
இங்கு மஞ்சள் கற்களால் கட்டப்பட்ட ஏழு ஜெயின் கோவில்கள் உள்ளன. அஸ்கரன் சோப்ரா என்பவர் சம்பவநாதா என்ற ஜெயின் கோவில் கட்டி அதில் கிட்டத்தட்ட 600 சிலைகள் வடிவமைத்து வைத்துள்ளார். அதேபோல் லக்ஷ்மி , விஷ்ணு கடவுள்களுக்காக லக்ஷ்மிநாத் என்ற கோவிலும் கட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த கோட்டையில் உள்ள ஸ்ரீநாத் கோட்டையும் சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். இங்கு முஸ்லிம் மற்றும் இந்தியர்களின் கட்டடக் கலைகளையும் பார்க்கலாம். ஜாலிஸ் மற்றும் ஜார்காஸ் வகையான கட்டடக் கலைகளும் இங்கு அதிகம் காணப்படும்.
இங்கு இத்தாலியன், ஃப்ரென்ச் மற்றும் ராஜஸ்தான் உணவு வகைகள் அதிகம் கிடைக்கும். பிரபல திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே இந்த கோட்டையை பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அதேபோல் இந்த கோட்டை பற்றிய ஒரு படமும் இயக்கியிருக்கிறார்.
இக்கோட்டையின் மிகவும் சிறப்பம்சம் கொண்ட ஒரு அற்புதம் என்றால், காலை வெயிலில் இந்த கோட்டை மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். அதேபோல் மாலை நேரத்தில் தங்க நிறத்தில் ஜொலிக்கும்.
ஜெய்சல்மெர் கோட்டையில் வாழும் மக்கள், வரலாற்றில் குறிப்பாக ராஜஸ்தானில் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் ஒரு சாட்சியாகவே கருதப்படுகின்றனர்.