
விடுமுறைக்காக சுற்றுலா பிளான் போட ஆரம்பித்து விட்டீர்களா? ஊட்டி கொடைக்கானல் போய் அலுத்துவிட்டதா? வெண்பஞ்சு மேகப்பொதிகளை அருகிருந்து ரசிக்க வேண்டும் என்ற ஆசையா? இயற்கையான டீயை விரும்பும் டீப் பிரியரா?
உங்களுக்கு ஏற்ற மலை வாசஸ்தலம்தான் 'தென்தமிழகத்தின் சொர்க்கம்' என அறியப்படும் கொழுக்குமலை. இது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய குக்கிராமமாகும்.
பரபரப்பு மிகுந்த மக்கள் கூட்டம் இன்றி இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் இடமாக செல்பவர்கள் கவர்கிறது கொழுக்குமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 7130 அடி உயரத்தில் இயற்கையின் மிக அழகிய காட்சிகளுடன் அமைந்துள்ள கொழுக்குமலை நம் இதயத்திலும் நிச்சயம் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இது தமிழ்நாட்டில் உள்ள பகுதி என்றாலும் கேரளாவின் சூரியநெல்லி வழியாக மட்டுமே இங்கு செல்ல முடியும். இதற்காக போடி மெட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியநெல்லி சென்று அங்கிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம்.
கொழுக்குமலைக்கு ஜீப்பில் மட்டுமே செல்ல முடியும் என்பதால் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜீப்பில் ஆறு பேர் வரை பயணம் செய்ய அனுமதி தருகிறார்கள். சூர்யநெல்லி பகுதியில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொழுக்குமலை சாலைகள் சீரற்று இருப்பதால் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
உலகின் மிக உயரமான தேயிலைத் தோட்டம் இங்கு உள்ளது சிறப்பு. கொழுக்குமலை தேயிலை உலகின் மிக தரமான தேயிலையாக கருதப்படுகிறது. அதிக உயரம் காரணமாக இங்கு விளையும் தேயிலை தனித்துவமான புத்துணர்ச்சி தரும் சுவையைக் கொண்டுள்ளது எனலாம். மலைகளின் உச்சியில் பழமையான ஆர்கானிக் தேயிலை தொழிற்சாலை உள்ளது. காலனித்துவ காலத்தில் 1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தொழிற்சாலையானது பாரம்பரிய தேநீர் தயாரிக்கும் நுட்பங்களை இன்றும் பின்பற்றி வருகிறது.
இந்த தேயிலை தோட்டங்களின் பசுமையான அழகும் காற்றில் கலந்து நாசியில் ஏறும் தேயிலையின் நறுமணமும் நமது மனதில் அமைதியான உணர்வுகளை நிச்சயம் வழங்கும். அத்துடன் சுவைக்க இதமான சூடான லெமன் டீ இல்லாமல் பயணம் முழுமையடையாது,
இங்குள்ள மிகச்சிறப்பு என்னவென்றால் சிங்கப்பாறை எனப்படும் சிங்க முகம் ஒத்த பாறை முகடு மீது ஏறி சூரிய உதயத்தை காண்பதே ஆகும். அதிகாலை வேளையில் பனிவிலகாத சூழலில் பசுமையான தோட்டப் பின்னணியில் அதி அற்புதமான இளஞ்சிவப்பு நிறத்தை சூரியன் பரப்பும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.
மலையேற்றம் எனப்படும் டிரக்கிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஏற்ற நல்ல இடமாகும் கொழுக்குமலை. இங்கிருந்து மீசைப் புலிமலை வரை டிரெக்கிங்கில் ஈடுபடலாம். மலையை சுற்றியிருக்கும் ஊசியிலைக்காடுகள், பசுமையான மேய்ச்சல் நிலங்கள் போன்றவைகளால் மலையேற்றம் இனிய அனுபவமாகும்.
சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக் காட்சிகளை கண்டு களிக்க இங்கு தங்கவேண்டுமானால் முன்னரே திட்டமிட்டு முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது என்கின்றனர். மேலும் இங்கு இரவில் 'கேம்ப்' அமைத்து தங்கும் வசதிகளும், இதற்கென்றே குறிப்பிட்ட இடங்களும் இங்கே உண்டு.
ஏறத்தாழ 7000 அடி உயரத்திற்கு மேல் இருக்கும் கொழுக்குமலையில் மேகங்கள் அதிகம் சூழ்ந்திருப்பதால் நமது அருகாமையில் பனிக் குவியல் போன்ற அழகுடன் வரும் மேகங்களைக் கண்டு ரசிப்பது சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வு தரும்.
இங்கு ஆண்டு முழுவதும் இதமான வானிலை இருக்கும் என்றாலும் மார்ச் மற்றும் மே மாதங்களில் இங்கு செல்வதற்கு சிறந்த நேரம் ஆகும். இதன் குளிரான தட்பவெப்பநிலை காரணமாக சுவாசப்பிரச்னை இருப்பவர்கள், குழந்தைகள் இப்பயணத்தை தவிர்ப்பது நல்லது என்ற எச்சரிக்கையும் நிலவுகிறது.
இன்னும் அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலமாகவே இருந்து வரும் கொழுக்கு மலைக்கு இந்த வருட சுற்றுலாவில் இடம் உண்டுதானே?