கோடைக் காலம் வந்துவிட்டதால் அனைவர் மனதில் இருக்கும் ஒரே எண்ணம் ஒரு குளிர்வான இடத்தில் சிறிது காலம் தஞ்சம் அடைய வேண்டும் என்பதே. சிலர் கூட்டம் அதிகம் கூடும் இடங்களைக் காட்டிலும் குறைவான மக்கள் கூடும் இடங்களையே அதிகம் விரும்புவர். அப்படிப்பட்டவர்களுக்கு என்னென்ன இடங்கள் இருக்கின்றன? என்பதைத் தெரிந்துகொள்வோம்.
மூணாறு:
கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூணாறு கோடைக் காலத்திலும் குளிர்ச்சியாக இருக்கும் அழகிய மலைகள் சூழ்ந்த இடம். சுமார் 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள மூணாரில் 15°C முதல் 25°C வரை வெப்பநிலை நிலவுகிறது. பரந்த தேயிலை தோட்டங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் அடிக்கடி மூடுபனி ஏற்படக்கூடிய காட்சிகள் ஆகியவை நமக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தைத் தருகின்றன. என்னதான் சூரியனின் கதிர்கள் தெரிந்தாலும் அங்குள்ள மூடுபனி சூழ்நிலை அதைத் தடுக்கிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கோடை வெப்பத்திலிருந்து தப்பித்து மகிழ முடிகிறது.
லடாக்(Ladakh):
இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லடாக், ஒரு தனித்துவ காலநிலை கொண்ட உயரமான பாலைவனமாகும்(desert). நாள் முழுவதும் நேரடியாக சூரிய ஒளியைப் பெற்றாலும் அதன் உயரம் 3,000 மீட்டருக்கு மேல் இருப்பதால் வெப்பநிலை குளிர்ச்சியாகவே இருக்கும். மெல்லிய காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் அப்பகுதியை அதிக வெப்பமடைவதைத் தடுக்கிறது. கோடையில் வெப்பநிலை 5°C முதல் 25°C வரை இருக்கும் இதனால் கடுமையான சூரிய ஒளி வரும் வேளையிலும் நமக்கு ஒரு குளிர்வான சூழ்நிலையை உணர வைக்கும்.
ஷில்லாங்:
கோடை வெயில் கொளுத்தினாலும் குளிர்ச்சியாக உணரப்படும் மற்றொரு அபூர்வ இடம் மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங். சுமார் 1,496 மீட்டர் உயரத்தில் உள்ள ஷில்லாங்கில் கோடைக்காலத்தில் 15°C முதல் 24°C வரை வெப்பநிலை இருக்கும். இந்த நகரம் முற்றிலும் பசுமையான மலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இதுவே அங்கு ஒரு குளிர்ச்சியான சூழலைத் தொடர்ந்து பராமரிக்க உதவுகிறது. அதுபோல அடிக்கடி பெய்யும் மழை மற்றும் மேகமூட்டமான வானம் ஆகியவை நாம் விரும்பும் காலநிலைக்குப் பங்களிக்கின்றன.
பச்மாரி (Pachmarhi):
'சத்புரா ராணி' (Queen of Satpura) என்று அழைக்கப்படும் பச்மாரி மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு மலைப் பிரதேசமாகும். 1,067 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பச்மாரி 20°C முதல் 30°C வரை வெப்பநிலையை உணரவைக்கும். நீர்வீழ்ச்சிகள், குகைகள் மற்றும் அடர்ந்த காடுகள் நேரடியாக வரும் சூரிய ஒளியைத் தடுத்து நமக்கு ஒரு தனித்துவமான குளிர்வான சூழ்நிலையைத் தருகிறது.
குல்மார்க்:
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமைந்துள்ள குல்மார்க் குளிர்ந்த காலநிலைக்குப் பெயர் பெற்ற பிரபலமான இடமாகும். 2,650 மீட்டர் உயரத்தில் உள்ள குல்மார்க் கோடையில் 10°C முதல் 25°C வரை வெப்பநிலையை நமக்கு உணரவைக்கிறது. பரந்து விரிந்த புல்வெளிகள், பனிகள் சூழ்ந்த மலைகள் மற்றும் அல்பைன் காடுகள் (alpine forests) என்று அங்கு வருபவர்களுக்கு நேரடி சூரிய ஒளி தடுத்து ஒரு புத்துணர்ச்சியூட்டும் சூழலை நமக்கு உணர வைக்கின்றன.
கோடை காலத்தில் வெப்பத்திலிருந்து தப்பிக்க விரும்புவர்கள் மேலே குறிப்பிட்ட இந்த இடங்களுக்குச் சென்று உங்கள் கோடைக்காலத்தை ஒரு பொன்னான நினைவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள்.