பெங்களூரு சென்றால் அருகில் இருக்கும் ஜனபத லோகாவிற்கு அவசியம் செல்லுங்கள். பிரமிக்க வைக்கும் அற்புதமான விஷயங்களை அங்கு காணலாம். அப்படி என்ன இருக்கிறது அங்கு?
ஜனபத லோகா என்பது கர்நாடகாவின் நாட்டுப்புற கலாச்சாரத்தின் பொக்கிஷமாகும், இது பாரம்பரிய கர்நாடகாவின் நாட்டுப்புற கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகிறது.
பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகருக்கு அருகில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ள இது 1994ல் அமைக்கப்பட்டு சிறந்த கலாச்சார மையமாக திகழ்கிறது.
கிராமப்புற மக்களையும் அவர்கள் பாரம்பரியக் கலைகளையும் நேசித்த மறைந்த ஐஏஎஸ் அதிகாரியான ஸ்ரீ நாகே கவுடாவால் நிறுவப்பட்ட இந்த இடத்தில் நாம் சற்றும் அறிந்திராத அல்லது மறந்து விட்ட பண்டைய கலாச்சாரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
'மஹாத்வாரா' என்றழைக்கப்படும் இதன் நுழைவு வாயிலில் ஜனபத லோகா பற்றிய அத்தனை தகவல்களும் சுருக்கமாக சுமார் 20 அடி உயரத்தில் சித்திரமாக வடிக்கப்பட்டு நமது ஆவலைத் தூண்டுகிறது. இதன் உள்ளே அமைந்துள்ள சில மையங்களின் சிறப்பை சுருக்கமாக இங்கு காண்போம்.
லோகமாதா மந்திரா- கர்நாடகாவின் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையை காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் இது. மந்திரா என்றால் கோவில் என்ற பொருள். கிராமப்புற மக்களின் உழைப்பின் பெருமை பறைசாற்றும் விதமாக அவர்கள் பயன்படுத்திய இயற்கை சார்ந்த அத்தனை பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டு வியப்பில் ஆழ்த்துகிறது.
சித்ர குடீரா: மலைவாழ் மக்களை நேசித்து இப்படி ஒரு லோகத்தை அமைக்க பாடுபட்டு வெற்றிகரமாக தனது கனவுலகத்தை நிறுவிய நிறுவனர் நாகே கவுடாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் தொடர்பான அபூர்வ புகைப்படங்களில் துவங்கி உடைகள் வரை அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சித்ரக் கூட அரங்கம் இது. இதில் மேலும் கர்நாடகாவின் சிறப்பான யஷ கானக் கலை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற வடிவங்களைக் காட்டும் புகைப்படங்களின் கண்காட்சி நம்மை ரசிக்க வைக்கிறது.
லோக மஹால்: நாட்டுப்புற கலாச்சாரம், பழைய பொருட்கள், பொம்மைகள், நாட்டுப்புற கருவிகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தும் இரண்டு மாடி கட்டிடம்தான் லோகமஹால். இங்குள்ள பொம்மைகள் ஒவ்வொன்றும் கதை பேசும். உதாரணமாக 500 வருடங்களுக்கு முன் தோலினால் செய்யப்பட்ட தோல்பாவை எனும் நிழலாட்டத்துக்கு பயன்படுத்திய பொம்மைகளை சொல்லலாம். இதுபோல் நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் ஏராளமான ஆச்சரியப் படுத்தும் பொம்மை வகைகளை இங்கு காணலாம்.
ஷில்பா மஹால்: 10 ஆம் நூற்றாண்டின் கல் உருவங்களைக் காட்டுகிறது. பழங்கால சரித்திரத்தின் சான்றாக சுமார் 1200 வருடங்களுக்கு முன் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நினைவுச்சின்னமாக எழுப்பப்பட்ட வீரக்கற்கள் முதல் தீக்குளித்து மறைந்த வீராங்கனைகள் நடுகற்கள் வரை கண்டு வீரவணக்கம் செலுத்தலாம்.
தொட்டா மன்னே: மட்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களால் உருவாக்கப்பட்ட பழமை மாறாத மண் பாண்டங்கள் காணக்கூடிய ஒரு பட்டறை.
மேலும் இங்குள்ள பைலாட்டா எனப்படும் கிரேக்க பாணி திறந்தவெளி திரையரங்கம் அல்லது நாடக அரங்கத்தில் ஒரே நேரத்தில் சுமார் 1000 பேர் அமர முடியும் என்பது சிறப்பு. கலைஞர்களுக்குத் தங்கும் வசதியுடன் பட்டறைகளும் நடத்தப்படுகிறது. இங்கு கூறியிருப்பது விஞ்ஞான முன்னேற்றத்தில் இழந்த நம் பாரம்பரியத்தை விளக்கும் கடலான ஜனபத லோகா வின் சிறு துளிகள்தாம். கலாச்சாரத்தை அறிய சுற்றுலாவாக பிள்ளைகளை அவசியம் அங்கு அழைத்துச் சென்று மகிழலாம்.