எப்போதுமே இயற்கை அழகினை ரசிக்கும் போது ஒரு அலாதியான இன்பம் மனதில் ஏற்படுவதுண்டு. வண்ணமயமான பூக்கள் நிறைந்த தோட்டத்தைப் பார்ப்பது கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், மனதிற்கு ரம்மியமாகவும் இருக்கும். அத்தகைய அழகிய துலிப் பூக்கள் நிறைந்த தோட்டம் இந்தியாவில் இருக்கிறது என்பது தெரியுமா? சரி வாங்க, இந்த பதிவின் மூலம் அந்த தோட்டத்திற்கு ஒரு விசிட் போகலாம்.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஸ்ரீநகரில் உள்ளது, இந்திரா காந்தி துலிப் தோட்டம். ஆசியாவிலேயே இது மிகபெரிய துலிப் தோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோட்டம் 74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கே 1.7 மில்லியன் துலிப் மலர்கள் ஆம்ஸ்டர்டாமிலிருக்கும் துலிப் மலர் தோட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டன. துலிப்பைத் தவிர 46 விதமான பூக்களும் இத்தோட்டத்தில் இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் துலிப் திருவிழா வசந்தகாலத்தில் நடைப்பெறுகிறது. இவ்விடத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இத்திருவிழாவில் விதவிதமான மலர்களை மக்களுக்கு காட்சிப்படுத்தியிருப்பார்கள். 2023ல் இத்தோட்டத்திற்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஒரே மாதத்தில், மார்ச் முதல் ஏப்ரல் 2023ல் 3,65,000 சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றுள்ளனர். அதில் 3000 பேர் வெளிநாட்டினர். துலிப் மலர் மலர்ந்தப்படி 15 முதல் 20 நாட்கள் இருக்கும். துலிப் மலர்களை மிகவும் மென்மையான மலர்கள் என்று கூறுவார்கள். இது வாழ்வதற்கும், மலர்வதற்கும் சரியான தட்பவெப்பநிலை இருக்க வேண்டும். மார்ச் மாத இறுதியில் இந்த மலர்கள் மலரத்தொடங்கும்.
இந்த துலிப் மலர்த்தோட்டம் வாரம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். இங்கு செல்வதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு 50 ரூபாயும் சிறியவர்களுக்கு 25 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இவ்விடத்தின் அழகில் மயங்கி நிறைய பாலிவுட் படங்களும் இங்கே எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாஜிரங்கி பைஜான், ரா(RAW), மான்மர்ஸியான் போன்ற படங்கள் இங்கே படமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஸ்மீர் அரசாங்கம் ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் துலிப் பூக்களின் திருவிழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் நிறைய சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காகவேயாகும். இந்த திருவிழாவில் பாரம்பரிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, உணவு திருவிழா ஆகியவை நடைப்பெறும். இந்த திருவிழாவைப் பற்றிய முழு விவரம் மார்ச் மாதம் மக்களுக்கு வெளியிடப்படும். ஏப்பல் மாதத்தில் இந்த துலிப் மலர் திருவிழா கொண்டாடப்படும். ஏப்ரல் 1 முதல் 3வது வாரம் இங்கே வருகை தந்தால் துலிப் மலர்கள் முழுவதுமாக மலர்ந்திருப்பதை காணலாம்.
துலிப் மலர் திருவிழாக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் சுற்றிப்பார்க்க வேண்டிய ஜம்மு காஸ்மீரில் உள்ள மற்ற சுற்றுலாத்தளங்கள், பொட்டானிக்கல் கார்டன் (Botanical Garden), சேஸ்மா சாஹி (Cheshma shahi), பரி மஹால் (Pari mahal) போன்ற இடங்களையும் சேர்த்து பார்த்துவிட்டு செல்வது சிறந்ததாகும்.
எனவே, இது வருடத்திற்கு ஒருமுறை நிகழும் நிகழ்வாக இருந்தாலுமே, வாழ்வில் கட்டாயமாக ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டிய இடம் என்பதில் ஐயமில்லை.