ஆறு என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடியது வளைந்து ஓடக்கூடிய ஒரு நீர்நிலைதான். ஆறுகளில் என்ன வித்தியாசமாக இருந்துவிட போகிறது என்று நினைப்பவர்கள் கேனோ கிரிஸ்டல்ஸ் (Cano crystales) ஆற்றைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தென்னமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் அமைந்துள்ள ஆறான கேனோ கிரிஸ்டல்ஸ் ஆற்றை வானவில் ஆறு என்று சொன்னால் நம்புவீர்களா?வானவில்லைப்போல பல நிறங்களில் காட்சி தரும் இந்த ஆறு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
கேனோ கிரிஸ்டல்ஸ் ஆற்றை 1969ஆம் ஆண்டு மாடுமேய்க்கும் விவசாயிகளே கண்டுப்பிடித்தனர். இதை ‘ஐந்து நிற ஆறு’ என்றே அழைப்பார்கள். மற்ற மாதங்களில் சாதாரண ஆறு போலவே காட்சி தரும் கேனோ கிரிஸ்டல்ஸ் ஆறு ஜூலை முதல் நவம்பர் மாதத்தில் மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு, சிவப்பு ஆகிய நிறங்களில் காட்சியளிக்கும். அதுவும் சிவப்பு நிறம் உருவாவது ரைன்கொலாசிஸ் கிளேவிஜெரா (Rhyncholacis clavigera) என்னும் ஆற்றுப்படுக்கையில் வாழும் செடியே காரணமாகும். சமீபகாலமாக இந்த ஆறு சுற்றுலாத்தளமாக மாறிவருகிறது 2016 ல் மட்டுமே இந்த ஆற்றை பார்வையிட 16,000 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேகமாக ஓடக்கூடிய இந்த ஆற்றில் நிறைய நீரூற்றும், சிறு நீர்நிலைகளும் அமைந்துள்ளது. கேனோ கிரிஸ்டல்ஸ் ஆறு சொர்க்கத்திலிருந்து தப்பித்து பூமிக்கு வந்ததாக கதை சொல்லப்படுகிறது. இந்த ஆறு இயற்கையின் அதிசயம் என்றே சொல்ல வேண்டும். இந்த ஆற்றில் இருக்கும் பாறைகளெல்லாம் 1.8 பில்லியன் வருடம் பழமையானது என்றும் கூறுகிறார்கள். இந்த ஆற்றில் குளிப்பதற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இந்த ரெயின்போ ஆறு 100 கிலோ மீட்டர் நீளத்தை உடையது. 420 விதமான பறவைகளுக்கும், 43 விதமான ஊறும் பிராணிகளுக்கும் மற்றும் 10 விலங்குகளுக்கும் வாழும் இடமாக அமைந்துள்ளது.
இந்த நதியில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் நிறைய உயிரினம் கஷ்டப்பட்டு வாழ்கிறது. அதனால் தான் இந்த நதி பார்ப்பதற்கு கிரிஸ்டல் கிளியராக உள்ளது. கொலம்பிய அரசாங்கம் இங்கே சுற்றுலாப்பயணிகளை டூரிஸ்ட் ஏஜென்சி மூலமே அனுமதிக்கும். இந்த நதியை அடைய கப்பல் மற்றும் விமானமே பயன்படுத்தப் படுகிறது. இந்த பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலாலும், சுற்றுச்சூழல் மாசுக்காரணமாக பல வருடம் இந்த இடம் மூடப்பட்டிருந்தது. மக்களின் முயற்சியின் காரணமாக 2009 ல் திறக்கப்பட்டது.
இப்படிப்பட்ட அதிசய நதி உலகில் இருக்கிறது என்று கேள்விப்படும் போது உண்மையிலேயே ஆச்சர்யமாக உள்ளது. இதுபோன்ற அற்புதத்தை வாழ்வில் ஒரு முறையாவது சென்று ரசிக்க வேண்டியது அவசியமாகும்.