பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், மன்னர்கள் காலத்தில் இரதங்கள் தான் பயணம் மேற்கொள்ள பேருதவியாக இருந்தன. இரதத்தினை இழுத்துச் செல்ல குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது, குதிரைகளைக் காண்பதே அரிதாகி விட்டது. காலம் செல்ல செல்ல நம் முன்னோர்கள் அதிகளவில் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தினார்கள். மாடுகள் விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், பயணம் செய்யவும் பெரிதும் உதவின. மாட்டு வண்டிகளைப் பார்ப்பதே இப்போது காணக் கிடைக்காத காட்சியாகி விட்டது. அதன் பிறகு, பயன்படுத்திய வாகனம் தான் மிதிவண்டி. மிதிவண்டிப் பயணம் செலவில்லாததும், உடற்பயிற்சிக்கு ஏற்றாதகவும் இருந்ததால் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் மிதிவண்டிகளின் பயன்பாடும் பெருமளவு குறைந்து விட்டது.
கால மாற்றத்திற்கு ஏற்ப தற்போது, உலகம் நவீனமயமாகி வருவதால், விரைவான பயணத்திற்கு மகிழுந்து(கார்), இருசக்கர வாகனங்கள்(பைக்) என பல வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதிலும், நடுத்தர மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வேலைக்கு சென்று வரவும் இருசக்கர வாகனங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. மிதிவண்டி இல்லாத வீடுகளைக் கூட பார்த்து விடலாம் ஆனால், இருசக்கர வாகனம் இல்லாத வீடுகளைக் காணவே முடியாது. அந்த அளவிற்கு நாம் மிதிவண்டியின் பயன்பாட்டை குறைத்து விட்டோம். இப்போதுள்ள இளைஞர்கள் கடைத் தெருவிற்கு செல்வதென்றாலும், இருசக்கர வாகனத்தில் தான் செல்கிறார்கள். அதிவேக வாகனங்களின் பயன்பாட்டால் தற்போது, சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், காற்று மாசுபாடு அதிகரித்து வருவது நாம் அறிந்ததே. நம்மால் முடிந்த அளவுக்கு, சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் உதிக்க வேண்டும். சிறிது தொலைவு செல்வதற்கெல்லாம் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தாமல், நடைப்பயணம் அல்லது மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டால், அது சுற்றுச்சூழலையும் காக்கும், நம் உடலுக்கும் நன்மை பயக்கும்.
சில இடங்களில் நடத்தப்படும் மிதிவண்டிப் போட்டி (சைக்கிள் ரேஸ்) நம்மிடையே மிதிவண்டி ஓட்டும் ஆர்வத்தை தூண்டுகிறது. முன்பெல்லாம் வாடகை சைக்கிள் கொடிகட்டிப் பறந்தது. அக்காலத்தில், வாடகை சைக்கிளில் தான் பல பேர் சைக்கிள் ஓட்டுவே கற்றுக் கொண்டனர். மிதிவண்டி இல்லாதவர்களுக்கு, வாடகை சைக்கிள் ஓர் வரப்பிரசாதமாகத் திகழ்ந்தது.
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே மிதிவண்டியினால் கிடைக்கும், பலன்களை எடுத்துரைத்து ஊக்குவிக்க வேண்டும். குறைந்தபட்சத் தொலைவு செல்லும் போதெல்லாம் மிதிவண்டியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை சிறு வயதிலேயே சொல்லி வளர்க்க வேண்டும். மிதிவண்டியை ஓட்டும் போது, நம் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி தானாகவே கிடைத்து விடும். முக்கியமாக, மிதிவண்டி ஓட்டுவதால் உடல் எடை குறையும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தினந்தோறும் மிதிவண்டி ஓட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு, மிதிவண்டி ஓட்டுவது பயனுள்ளதாக அமையும்.
நோய் வந்த பின்பு குணப்படுத்துவதை விட, வரும் முன்னரே வரவிடாமல் காப்பது தான் சிறந்தது. அவ்வகையில், தினந்தோறும் மிதிவண்டி ஓட்டும் பழக்கத்தை கடைப்பிடித்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுத்துக் கொண்டு வாழ்வை வளமாக்க வேண்டும். நம் நலம் காக்கப்படுவதோடு, இயற்கையின் ஓர் அங்கமான காற்றின் நலமும் பாதுகாக்கப்படும். காற்று மாசுபாட்டினை குறைக்க நம்மால் முடிந்ததை செய்து, நலமோடு வாழ்வோம்.