மயக்குதே மாஹே… சிறப்புகள் அறிவோம்!

மாஹே...
மாஹே...

"மனசுக்கு ரிலாக்ஸ் தரணும். அத்துடன் அடிக்கிற கோடை  வெயிலுக்கு இயற்கை யின் இதமாகவும் இருக்கணும். அப்படி ஒரு இடம் இருக்கா? "என்பவர்களுக்கு தயங்காமல் சட்டென சொல்லி விடலாம் மாஹே போங்க என்று. ஆம். இயற்கையின் நிழலில் இளைப்பாற விரும்பும் சுற்றுலாப் பிரியர்களுக்கு ஏற்ற இடம்தான் பாண்டிச்சேரியின்  யூனியன் பிரதேசமான மாஹே.

கேரளாவின் தலச்சேரி  பக்கத்துல இருக்கிற மாஹே கோழிக்கோடு, கண்ணூர் இடையில்  அரபிக்கடலோரம் இருக்கிற ஒரு அழகிய குட்டி பிரதேசம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் கடல் மற்றும் ஆறுகளால் சூழப்பட்ட தண்ணீர் தரும் ஜில் குளுமையில் காணும் அற்புதமான இடம்தான் மாஹே.

மய்யாழிப்புழா எனப்படும் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த குட்டி நகரத்தின் மொத்த பரப்பளவே சுமார் 9 சதுர கிமீ தான். அழியூர் என்னும் கிராமத்தின் பகுதியாக இருந்தது மய்யழி. அழி என்றால் கடலும் புழையும் சேரும் இடம் என்று பொருள். மய்யம் என்றால் நடுவில் என்ற பொருள். அழியூருக்கும் மற்றொரு ஊருக்கும் நடுவில் இருப்பதால் "மய்யழி" என்ற பெயரைப் பெற்றது எனவும் கூறுவர்.

பிரெஞ்ச் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதி என்பதால் அழகிய பிரெஞ்சு கட்டிடங்களை இங்கு காணலாம். மாஹேக்குள் நுழைந்ததுமே நம்மை வரவேற்பது பெரும்பாலும் கடைகள்தான். இங்கு மாநில வரிகள் அற்ற சலுகையில் பெட்ரோல், டீசல், மது வகைகள் மலிவாக கிடைக்கிறது.

மாஹேயில் சுற்றிப்பார்க்க அதிக இடங்கள் இல்லை என்றாலும் பொழுதை அமைதியாக கழிக்க ஏதுவான சில இடங்கள் உண்டு. இங்குள்ள தாகூர் பார்க் உல்லாசத்திற்கும், அமைதியான உலாவலுக்கு பிரசித்தி பெற்றது.  இந்த பார்க்கில் சுதந்திர தின போராட்டக்காரர் களின்  நினைவாக இரண்டு கல்தூண்கள் இருக்கின்றன. 

அழகான நடைபாதை...
அழகான நடைபாதை...

இதன் உள்ளே இருக்கும் ஹலோக் எனும் மாஹி நதிக்கரையோரம் உள்ள அழகான நடைபாதையின் சிறப்பம்சம் வியக்க வைக்கும். இங்கு நடக்கும்போது பிரமிக்க வைக்கும் கலையம்சங்களை கண்டு மகிழலாம். மேலும் இங்கிருந்து 1 கிலோமீட்டர் அருகில் உள்ள சிறு குன்று காணவேண்டிய முக்கிய அம்சம்.   இங்கு குறிப்பிட்ட இடத்தில் இருந்து காணும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக் காட்சிகளின் அழகு மனதைக் கொள்ளை அடிக்கும். லைட் ஹவுஸூம் உண்டு.

மலபார் பகுதியில் உள்ள அழகான கட்டிடக்கலையின் அடிப்படையில் அமைந்த சிறப்பான செயின்ட் தெரசா தேவாலயம் காணவேண்டிய ஒன்று. இதன் வரலாறு சுவாரஸ்யம் தருகிறது. அக்டோபர் மாதம் இங்கு நடைபெறும் விழா புகழ் பெற்றது.

இங்கு உள்ள அரசு மையமாக விளங்கும் கவர்ன்மெண்ட் ஹவுஸ் பிரெஞ்சு வாஸ்துக் கட்டிடக்கலை பின்பற்றி கட்டப்பட்டது. அழகிய வடிவமைப்பு கொண்ட இங்கு பிரெஞ்சு காலத்தின் புராதனப் பொருள்கள் இடம் பெற்றுள்ளது.

அழகான கட்டிடக்கலை...
அழகான கட்டிடக்கலை...

மாஹேயில் உள்ள  சிறிய அளவிலான அருங்காட்சி யகமும் பயணிகளைக் கவர்கிறது. மேலும் கவர்ன்மெண்ட் ஹவுசிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில்  மஞ்சக்கல் எனும் இடத்தில் உள்ள போட் ஹவுஸ் சென்று அங்குள்ள படகுகளின் மூலம் நதியில் பயணிப்பது மிகுந்த குஷியை தந்து மனதை மகிழ வைக்கும்.

இங்கு வந்து தங்குவதற்கு அவரவர் வசதிக்கேற்ப அருமையான வசதிகள் கொண்ட ஹோட்டல்களும், ரிசார்ட்களும் உண்டு. அங்கு பிரெஞ்சு, ஆங்கிலம், மலையாளத்துடன் தமிழ் மொழியும் பேசுவது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
சுண்டியிழுக்கும் சுவையில் பால்பூரி எப்படி செய்யலாம்... பார்க்கலாம் வாங்க?
மாஹே...

எப்படி செல்வது? கேரளா தலச்சேரியில் இருந்து ஆட்டோ, பஸ் மூலம் மாஹே வந்தடையலாம். பாண்டிச்சேரி யிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. மாஹி இரயில் நிலையம் 1 கிலோ மீட்டர் தொலைவிலும், கண்ணூர் பன்னாட்டு விமான நிலையம் 35 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

என்ன மாஹே செல்ல டூர் பிளான் ரெடியா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com