மலைக்க வைக்கும் மாமல்லபுரம்!

மாமல்லபுரம்
மாமல்லபுரம்

ழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறிமுகமாக விளங்கிய நகரம் மாமல்லபுரம்.  இது மஹாபலிபுரம் எனவும் அழைக்கப்படுகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னர்கள் மாமல்லபுரம் என்ற இந்த பகுதியில் துறைமுகம் ஒன்றை நிறுவினார்கள்.  மாமல்லபுரம் இன்று உலகப்புகழ் பெற்றுத் திகழ முதல் காரணம் பல்லவர்கள் இயற்கையில் இப்பகுதியில் அமைந்த மலைகளைக் குடைந்து குகைக் கோயில்கள்,  புடைப்புச் சிற்பத் தொகுதிகள், கற்றளிக் கோயில்கள் என பல அற்புதங்களைக் செய்ததே.

முதலாம் மகேந்திர வர்ம பல்லவன் (கி.பி.600 முதல் கி.பி.630 வரை) இத்துறைமுக நகரத்தில் குகைக் கோயில்களை அமைத்து சிற்பக்கலையில் புதுமைகள் பல செய்தார்.  இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த  முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் (கி.பி.630 முதல் கி.பி.668 வரை) தன் தந்தையைத் தொடர்ந்து குன்றுகளைக் குடைந்து குகைக் கோவில்களையும் மலையைச் செதுக்கிக் கோயில் களையும், திறந்த வெளியில் அமைந்த பாறைகளில் புடைப்புச் சிற்பத் தொகுதிகளை அமைத்தும் சாதனை படைத்தார்.   இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இரண்டாம் மகேந்திரவர்மன், முதலாம் பரமேஸ்வரவர்மன், இரண்டாம் நரசிம்மன் எனும் இராஜசிம்மன் ஆகியோரும் இந்த அற்புதப் பணியினைத் தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தார்கள்.

மாமல்லபுரத்தில் காண வேண்டிய அற்புதமான இடங்களை இப்போது நாம் அறிந்து கொள்ளலாம்.

1. வெண்ணை உருண்டைக் கல் (Butter Ball)

வெண்ணை உருண்டைக் கல் (Butter Ball)
வெண்ணை உருண்டைக் கல் (Butter Ball)

மாமல்லபுரத்தின் மற்றொரு அதிசயம் இந்த வெண்ணெய்ப் பந்து.  ஆங்கிலத்தில் பட்டர் பால் என்று அழைக்கப்படுகிறது.  மிகப்பெரிய உருண்டை வடிவிலான ஒரு கருங்கல் குன்றின் மீது சிறிய பரப்பளவில் சுமார் 1300 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் அதிசயத்தை இங்கு காணலாம்.  ஓரு குன்றின் சரிவில் இந்த பெரிய கல்லானது தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொண்டு நிற்கிறது. இந்த கல்லானது ஆறு மீட்டர் உயரமும் (19.6 அடி) ஐந்து மீட்டர் அகலமும் (16.4 அடி) சுமார் 250 டன் எடையும் உடையது. 

2. அர்ஜீனன் தபசு சிற்பங்கள்

அர்ஜீனன் தபசு சிற்பங்கள்
அர்ஜீனன் தபசு சிற்பங்கள்

ஸ்தல சயனப் பெருமாள் கோவிலின் பின்பகுதியில் அர்ஜீனன் தபசு சிற்பங்கள் அமைந்துள்ளன.  இந்த சிற்பத் தொகுதி 96 அடி நீளமும் 43 அடி உயரமும் உடைய இருபெரிய பாறைகளில் பலவிதமான உருவங்களுடன் வடிக்கப்பட்டுள்ளன.

சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைச் சிற்பங்கள் அடங்கிய இந்த அர்ஜுனன் தபசு சிற்பத் தொகுப்பானது இந்த பெரிய பாறையின் நடுவில் இயற்கையாகவே ஒரு இடைவெளி அமைந்து இதை இரண்டு பாகங்களாகப் பிரித்துக் காட்டுகிறது.  இதில் தெய்வங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், நாகராஜன், நாககன்னிகை, யானை, சிங்கம்,சிறுத்தை, குரங்கு, பூனை, பறவைகள் என அனைத்து வகையான சிற்பங்களும் காணப் படுகின்றன. இந்த முழு சிற்பத் தொகுதியும் நான்கு நிலைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.  மேலே உள்ளவை விண்ணுலகத்தையும் அடுத்ததாக விண்ணுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் இடைப்பட்ட உலகத்தையும் மூன்றாவதாக மண்ணுலகையும் கீழ்ப்பகுதியில் பாதாள உலகத்தையும் குறிப்பிடுவதாக அமைக்கப் பட்டுள்ளது.  கோட்டைகளில் காணப்படும் அகழி போன்ற அமைப்பும் இந்த சிற்பத் தொகுதியின் கீழ் காணப்படுகிறது.  

3. கணேச இரதம் (Ganesa Ratha)

கணேச இரதம் (Ganesa Ratha)
கணேச இரதம் (Ganesa Ratha)

ணேச இரதம் அர்ஜீனன் சிற்பத் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஒற்றைக் கற்றளியான கணேச இரதம் சேதமடையாத ஒரு இரதமாகும்.  மாமல்லபுரத்தில் உள்ள தொன்மையான கற்கோயில்களில் வழிபாட்டில் இருக்கும் ஒரே கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏழாம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவனுடைய மகன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.  இந்த இரதக்கோயிலில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக இந்த இரதம் கணேச இரதம் என்று அழைக்கப்படுகிறது.

4. ராயர் கோபுரம்

ராயர் கோபுரம்
ராயர் கோபுரம்

ல்லவர்களுக்குப் பிந்தைய விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த கலைக்கோயிலானது ஏதோ சில காரணங்களால் முற்று பெறாமல் போயிற்று.  விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் கட்டப்பட்டதால் இதற்கு ராயர் கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

கணேச இரதத்தை அடுத்து அமைந்துள்ள ஒரு கலைப் பொக்கிஷம் ராயர் கோபுரம். கற்றளி வகையைச் சேர்ந்தது இந்த கோபுரம். இந்த கோபுரத்தினுள் நுழைந்தால் இடது வலமாக இரண்டு கலைத் தூண்களும் சற்று தள்ளி மற்றும் இரண்டு கலைத் தூண்களும் காட்சி தருகின்றன.  ஒரு கலைத்தூணில் யாளியின் மீது நின்று கொண்டிருக்கும் ஒரு மங்கைச் சிற்பமும் மங்கைக்கு மேற்புறத்தில் தசாவதாரச் சிற்பங்களும் அதிஅற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.  

5. கிருஷ்ண மண்டபம்

கிருஷ்ண மண்டபம்
கிருஷ்ண மண்டபம்

ருச்சுனன் தபசு பாறைச் சிற்பத்துக்கு அருகில் அமைந்துள்ள கிருஷ்ண மண்டபத்திற்குள் கோவர்த்தன சிற்பத் தொகுதி காணப்படுகிறது.  பல்லவர் காலத்தில் செதுக்கப்படும்போது இந்தச் சிற்பமும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பமாகத்தான் இருந்ததாகவும் பிற்காலத்தில் விஜயநகர ஆட்சியின்போது இதன்மீது மண்டபம் ஒன்று கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்திரனுக்கு விழா எடுப்பதை கண்ணன் தடுத்து நிறுத்தியதால் கோபம் கொண்ட இந்திரன் மழையை ஏவ, கோகுலமே மழை, புயல், வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள, ஆயர்களையும் மாடு கன்றுகளையும் காப்பாற்ற கோவர்த்தனக் குன்றைக் குடையாக எடுத்தான் கண்ணன் என்பது புராணம். இதனை அப்படியே சிலையாக வடித்துள்ளனர் பல்லவ சிற்பிகள்.

6. மகிஷாசுரமர்த்தினி மண்டபம்

மகிஷாசுரமர்த்தினி மண்டபம்
மகிஷாசுரமர்த்தினி மண்டபம்

லங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்று அனந்தசயன சிற்பத் தொகுதி. மகாவிஷ்ணு பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி இங்கு வடிவமைக்கப் பட்டுள்ளது.

மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் மற்றொரு அழகான சிற்பத்தொகுதி ஆதிசக்தியின் ஒரு வடிவான துர்க்கை, சிங்க வாகனத்தில் ஏறி, மகிசாசூரன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப் பட்டுள்ளது.

7. வராக மண்டபம்

வராக மண்டபம்
வராக மண்டபம்

ராக மண்டபத்தில் நான்கு சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன.  மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமாதேவியைக் காப்பாற்றி மேலே கொண்டு வருவது முக்கியமான சிற்பத்தொகுதியாகும்.  பூமியை ஹிரண்யாட்சண் எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் ஒளித்துவைக்க, மகாவிஷ்ணு பன்றி உருவெடுத்து கடலுக்கு அடியில் சென்று ஹிரண்யாட்சணுடன் போரிட்டுக் கொன்று, பூமாதேவியை மீட்டெடுத்து மேல கொண்டு வரும் காட்சியே இந்த தொகுதியாகும்.  வராகப்பெருமாள்  தன் காலை நாக அரசன் மீது வைத்திருக்கிறார். அவரது தொடையில் பூமாதேவி அமர்ந்திருக்கிறாள்.  அவருக்கு அருகில் முனிவரும், பெண்ணும் கைகூப்பி வணங்குகிறார்கள். ஒரு பக்கத்தில் பிரம்மதேவனும் அவருக்கு அருகில் ஒரு முனிவர் நிற்கிறார். இரு பக்கங்களில் சூரியனும் சந்திரனும் காட்சி தருகிறார்கள்.

8. கோனேரி மண்டபம்

கோனேரி மண்டபம்
கோனேரி மண்டபம்

 

கோனேரி மண்டபம் குடை வரைக்கு ஐந்து கருவறைக்கோயில் என்ற பெயரும் உண்டு. இக்குடைவரையில் ஐந்து கருவறைகள் அமைந்துள்ளன.  சற்று உயர்வான இடத்தில் அமைந்துள்ள இக்குடைவரைக்குச் செல்ல படிகள் அமைக்கப்படுள்ளன.

முதலிலிருந்து ஒன்று மூன்று ஐந்து ஆகிய கருவறை வாயிகள் ஒரே மட்டத்திலும்,   இரண்டு மற்றும் நான்காவது குடைவரையின் கருவறை வாயில்கள் சற்று உள்வாங்கியும் காணப்படுகின்றன.  அனைத்துக் கருவறைகளின் வாயில்களின் இரண்டு பக்கங்களிலும் துவாரபாலகர்களின் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறைகளில் சிற்பங்கள் ஏதும் இல்லை.  இந்த ஐந்து கருவறைகளும், சிவன், திருமால், முருகன், கொற்றவை, இந்திரன் ஆகிய ஐவருக்கு உரியனவாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

9. கோடிக்கல் மண்டபம் 

கோடிக்கல் மண்டபம்
கோடிக்கல் மண்டபம்

கோடிக்கல் மண்டபக் குடைவரையின் முன்னால் ஒரு தூண் வரிசை மட்டுமே உள்ளது.  இதில் இரண்டு முழுத் தூண்களும் பக்கச் சுவர்களை ஒட்டி பக்கத்திற்கொன்றாக இரு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. முழுத்தூண்களின் மேற்பகுதியும் கீழ்ப்பகுதியும் சதுர அமைப்பிலும், நடுப்பகுதி எண்கோணப்பட்டை வடிவிலும் உள்ளன.

கருவறையானது  பின்புறச் சுவரில் இருந்து சற்று முன்னோக்கித் துருத்தியவாறு அமைந்துள்ளது. கருவறையின் இருபுறமும் துவாரபாலகியரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனால் இது கொற்றவைக்கு உரிய கோயிலாக இருக்கலாம் என கருத இடம் உண்டு.  இக்குடைவரையில் உள்ள "சிறீ வாமங்குசன்" என்னும் பெயரானது பல்லவர்களின் சிற்ரரசனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

10. மும்மூர்த்திகள் மண்டபம்

மும்மூர்த்திகள் மண்டபம்
மும்மூர்த்திகள் மண்டபம்

ழக்கமான குடைவரைகளைப் போல அல்லாமல் இக்குடைவரையானது மண்டபம் மற்றும் தூண்கள் இன்றிக் காட்சி தருகிறது.  இக்குடைவரையில் காணப்படும் மூன்று கருவறைகள் நேரடியாகவே பெரிய பாறையில் குடையப்பட்டுள்ளன.  நடுவில் உள்ள கருவறை மற்ற இரண்டைவிட சற்று பெரிய அளவில் அமைந்துள்ளது.  இதன் முகப்பு மற்ற இரண்டு கருவறையைக் காட்டிலும முன்னோக்கி  அமைந்துள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் தனித்தனியாகப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை மும்மூர்த்திகளுக்காக அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

11. இராமனுஜ மண்டபம்

இராமனுஜ மண்டபம்
இராமனுஜ மண்டபம்

கிஷாசுரமர்த்தினி குடைவரைக்கும் கலங்கரைவிளக்கத்திற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு குடைவரை இமானுஜ மண்டபக் குடைவரையாகும்.  செவ்வக வடிவத்தில் அமைந்த இந்த குடைவரையின் முகப்பில் நான்கு தூண்கள் கொண்ட ஒரு அமைப்பு காணப்படுகிறது. நடுவில் இரண்டு முழுத்தூண்களும் பக்கச்சுவர்களில் இரண்டு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. தூண்களின் கீழ்ப்பகுதியில் சிங்கத்தின் வடிவத்தில் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.  இக்குடைவரையினுள் மூன்று கருவறைகள் காணப்படுகின்றன. 

இதையும் படியுங்கள்:
பட்டாசு வெடிக்கையில் விழிகளைப் பாதுகாப்பதில் விழிப்புடன் இருங்கள்!
மாமல்லபுரம்

12. ஐந்து இரதங்கள்

ஐந்து இரதங்கள்
ஐந்து இரதங்கள்

மாமல்லபுரத்தில் பஞ்ச பாண்டவ இரதங்கள் அல்லது ஐந்து இரதங்கள், கணேச இரதம், பிடாரி இரதங்கள் மற்றும் வலையன்குட்டை இரதம் என மொத்தம் ஒன்பது இரதங்கள் காணப்படுகின்றன.

முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனால் தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்ட இந்த ஐந்து சிற்ப இரதங்கள் பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப் படுகின்றன.  ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சிம்மம், யானை, நந்தி போன்ற விலங்கு சிற்பங்கள் அடங்கிய இந்த தொகுதி ஐந்து இரதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.  இந்த இரதங்களுக்கு முன்புறமாக சிம்மமும், பக்கவாட்டில் யானையும் நந்தியும் செதுக்கப்பட்டுள்ளன.

மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்துடன் திராவிட விமானவடிவத்தை உடைய தர்மராச இரதம் மற்றும் அருச்சுன இரதம், கூண்டு வண்டி வடிவிலான சிகரத்தை உடைய பீம இரதம், சதுரமான குடிசை போன்ற வடிவத்தில் அமைந்த திரௌபதி இரதம் மற்றும் கஜபிருஷ்டவடிவத்தில் உருவாக்கப் பட்டுள்ளநகுல சகாதேவ இரதம் ஆகியவை காணப்படுகின்றன.

13. கடற்கரைக் கோயில்

கடற்கரைக் கோயில்
கடற்கரைக் கோயில்

மாமல்லபுரத்தில் வங்காளவிரிகுடா கடற்கரைப் பகுதியில் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் இராஜசிம்மன் என்பவரால் இந்த கடற்கரைக் கோயில் கட்டப்பட்டது.   தமிழகத்தில் முதன் முதலில் எழுப்பப்பட்ட கட்டுமானக் கோயில் இதுவென கூறப்படுகிறது.  இதன் காலம் எட்டாம் நூற்றாண்டு.  இந்த கோயில் கி.பி.700 முதல் கி.பி.728 காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.  இது திராவிட கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இரண்டு அழகிய விமானங்களுடன் காட்சியளிக்கும் இக்கோயில் நாற்பத்து ஐந்து அடிகள் உயரம் கொண்டது. இரண்டு சிவன் கோவில்கள் ஒரு விஷ்ணு கோவிலும் இங்கு உள்ளன. இக்கோயிலில் மூலவராக சிவபெருமான் லிங்கவடிவத்தில் காட்சி தருகிறார்.  மற்றொரு பக்கத்தில் ஸ்தலசயனப் பெருமாள் காட்சியளிக்கிறார்.  உண்மையில் கடற்கரை கோவில்களில் மூன்று கோவில்கள் அடங்கியுள்ளன. தென்னிந்தியாவின் பழமையான கோவில்களில் ஒன்றான இதை 13 கற்காளைகள் காவல் புரிகின்றன.

14. கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கம்

டலில் செல்லும் கப்பல்கள் மற்றும் படகுகளுக்கு துறைமுகப் பகுதிகளை அடையாளம் காட்டுவதற்காக உயர்ந்த கோபுரம் போன்ற அமைப்பில் ஒளியினை ஏற்றி வழிகாட்டப் பயன்பட்ட அமைப்பே கலங்கரை விளக்கம் எனப்பட்டது.  பல்லவர்கள் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்தை அமைத்துள்ளார்கள்.  

மாமல்லபுரத்தில் தற்போது அமைந்துள்ள கலங்கரை விளக்கம் 1887 ல் அமைக்கப்பட்டது.  சுழல் விளக்கினைக் கொண்ட இந்த கலங்கரை விளக்கம் 1904 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்தது.  இருபத்தி ஆறு மீட்டர்கள் உயரம் உடைய இக்கலங்கரை விளக்கம் உருளை வடிவத்தில் கருங்கற்களைப் பயன்படுத்தி நேர்த்தியாக உருவாக்கப் பட்டுள்ளது.  இதற்கு அருகில் கி.பி.640 ஆம் ஆண்டில் மகேந்திர பல்லவரால் கட்டப்பட்ட பழமையான கலங்கரை விளக்கம் உள்ளது. தற்போது இது நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

15. அதிரணசண்ட மண்டபம்

அதிரணசண்ட மண்டபம்
அதிரணசண்ட மண்டபம்

மாமல்லபுரத்தில் அமைந்துள்ள புலிக்குகைக்கு அருகில் அமைந்துள்ள  மண்டபம் ராஜசிம்ம பல்லவனால் அமைக்கப்பட்ட அதிரணசண்ட மண்டபம்.   இது அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹம் என்றும் அழைக்கப்படுகிறது.  இராஜசிம்மனின் விருதுப்பெயரான அதிரணசண்ட என்ற பெயருடன் தொடர்புடையது.  இதற்கு அதிக போர்க்களைத்தைக் கண்ட வல்லவன் என்று பொருள் உண்டு.

அதிரணசண்ட குடைவரை முகப்பு, மண்டபம், கருவறை என்ற அமைப்புகளோடு திகழ்கிறது.  கருவறையின் வாயில் முன்பு இரண்டு துவாரபாலகர்களின் சிற்பங்கள் பக்கத்திற் கொன்றாகக் காணப்படுகின்றன.    இக்குடைவறை முகப்பில், சதுரம், கட்டு, சதுரம் என்று அமைந்த இரண்டு முழுத் தூண்களும் இரண்டு அறைதூண்களும் அமைந்துள்ளன.  கருவறையின் நடுவில் அமைத்த குழியில் 16 பட்டைகளுடன் அமைத்த இலிங்கமொன்று காணப்படுகிறது.  கருவறைப் பின்புறச் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதி புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

16. புலிக்குகை

புலிக்குகை
புலிக்குகை

புலிக்குகை எனும் பல்லவர் கால கலைச்சிற்பத் தொகுதிகள் சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பாதையில் மாமல்லபுரத்திற்கு முன்னால் சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் சாளுவன்குப்பம் என்ற இடத்தில் கடற்கரையினை ஒட்டி அமைந்துள்ளது.

 இதற்கு புலிக்குகை என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை.   ஒரு குன்று போன்ற அமைப்பினைக் குடைந்து இந்த குடைவரை உருவாக்கப்பட்டுள்ளது.   இதன் மையத்தில் ஒரு சிறிய மேடை போன்ற அமைப்பு காணப்படுகிறது.   தரையிலிருந்து சுமார் இரண்டு மீட்டர் உயரத்தில் இந்த மேடை அமைப்பு காணப்படுகிறது.  மேடையை அடைய படிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த குடைவரை முற்றுபெறாத ஒரு குடைவரையாகவே காட்சி தருகிறது.   இந்த குடைவரையின்  முகப்பில் பதினோரு யாளித் தலைகள் அரை வட்ட அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன.   இந்த குடைவரையின் முகப்பில் அமைந்துள்ள திறந்தவெளிப் பகுதியில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது குடைவரை மேடையினுள் அமர்ந்து மன்னர் நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கடற்கரைக் கோயில் தமிழ்நாடு தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் புராதானச் சின்னமாகும்.  இக்கோயில் 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினரால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com