தென்னிந்தியாவின் குட்டி கோவா! அமைதி தேடும் பயணிகளுக்கு மணப்பாடு ஒரு சொர்க்கம்!

manapad-beach
manapad-beach
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள மணப்பாடு அழகான கடற்கரை, பழமையான புனித சிலுவை தேவாலயம் மற்றும் கலங்கரை விளக்கத்துடன் கூடிய ஒரு அமைதியான கடலோர சுற்றுலாத் தலமாகும். இது திருச்செந்தூரில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் மற்றும் வரலாற்றைக் கலந்த ஒரு சிறந்த இடமாகவும், குறிப்பாக படப்பிடிப்பு தளமாகவும், சுற்றுலா பயணிகள் அமைதியை நாடிவரும் இடமாகவும் உள்ளது.

சின்ன ரோமாபுரி, தென் ஆசியாவின் வெனிஸ், குட்டி கோவா என்று அழைக்கப்படும் மணப்பாடு, அகன்று விரிந்த நீலக்கடல், சுகமான காற்று, ஆங்காங்கு அதிசய வைக்கும் குன்றுகள், ஊர் முழுவதும் தேவாலயங்கள், விண்ணைத்தொடும் பனைமரங்கள் என அற்புதமான அனுபவத்திற்காக மணப்பாடுக்கு செல்லலாம். இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயங்களுக்காக "ஏழைகளின் கோவா" என்று அழைக்கப்படும் மணப்பாடு சிறந்த கட்டிடக்கலைகள் நிறைந்த, வளமான வரலாற்று பின்னணியை கொண்ட பகுதியாகும்.

ஒரு காலத்தில் போர்த்துகீசிய வர்த்தகர்களால் ஈர்க்கப்பட்ட ஒரு பரபரப்பான மீன்பிடி கிராமமாக இருந்தது. மேலும் தற்போது சிறந்த சினிமா படப்பிடிப்பு தளமாகவும் உள்ளது. மணப்பாட்டில் ஒருபுறம் கடல் அமைதியாகவும், மறுபுறம் ஆக்ரோஷமாகவும் இருக்கும். தற்போது கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் ஆங்காங்கே மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
பலரும் அறியாத பட்ஜெட் பயணம்: ஒரே இடத்தில் 99 தீவுகள்... லங்காவியின் மறைக்கப்பட்ட ஆச்சரியங்கள்!
manapad-beach

கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்திருப்பதால் கன்னியாகுமரி, திருச்செந்தூர் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீக பயணிகள் மணப்பாடும் வந்து செல்கின்றனர். இது நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து விலகி ஓய்வெடுக்க விரும்புபவர் களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. அமைதியான சூழல் பழங்கால ஐரோப்பிய பாணி கட்டிடக்கலை மற்றும் தூய்மையான கடற்கரை ஆகியவை மணப்பாடின் தனிச்சிறப்பாகும்.

மணப்பாடு கடற்கரை & மணல் குன்றுகள்:

இங்கு கடல் மட்டத்திலிருந்து உயர்ந்து காணப்படும் மணல் குன்றுகளும், நீல நிறக்கடலும் கண்களுக்கு விருந்தாகும். பாறைகள் நிறைந்த கடற்கரை மற்றும் பனை மரங்கள் சூழப்பட்ட இயற்கை அழகுடன் புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடமாக விளங்குகிறது. இங்கு பனை ஓலைகளிலிருந்து தயாரிக்கப்படும் கலைநயம் மிக்க கூடைகள், பைகள் மற்றும் அலங்காரப் பொருட்களை வாங்குவதற்கும், உள்ளூர் கலாச்சாரத்தை அறிவதற்கும் சிறந்த இடமாகும்.

கலங்கரை விளக்கம் (Lighthouse):

கடற்பரப்பு மற்றும் கிராமத்தின் முழு அழகையும் மேலிருந்து ரசிக்கவும், அப்பகுதியின் வரலாற்றை அறியவும் உதவும்.

புனித சிலுவை தேவாலயம் (Holy Cross Church):

1581ல் நிறுவப்பட்ட இந்த தேவாலயம், புனித பிரான்சிஸ் சேவியருடன் தொடர்புடையது மற்றும் இங்கு எருசலேமில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித சிலுவையின் துண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

புனித பிரான்சிஸ் சேவியர் குகை:

புனித பிரான்சிஸ் சேவியர் மணப்பாட்டில் தங்கியிருந்தபோது பயன்படுத்தியதாக கூறப்படும் குகை கடற்கரைக்கு அருகிலேயே உள்ளது. இங்கு சேவியர் குகையும், தூர்ந்து போன பழைய காலத்து வாணிபச் சின்னமான துறைமுகமும் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

இதையும் படியுங்கள்:
குறைந்த பட்ஜெட்... நிறைந்த மகிழ்ச்சி! ஏழைகளின் ஊட்டி ஏலகிரிக்கு ஒரு விசிட் அடிப்போமா?
manapad-beach

சிறந்த நேரம்:

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலங்கள் சுற்றுலா செல்வதற்கு சிறந்த நேரமாகும். செப்டம்பர் மாதம் நடைபெறும் புனித சிலுவை திருவிழா இங்கு மிகவும் பிரபலம்.

எப்படி செல்வது?

தூத்துக்குடியிலிருந்து 60கி.மீ., திருச்செந்தூரிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும் உள்ள இந்த இடத்திற்கு போக்குவரத்து வசதிகள் மிகுந்துள்ளது. அருகில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் குலசேகரபட்டினம் ஆகியவற்றையும் பார்த்து வரலாம்.

logo
Kalki Online
kalkionline.com