பல்கி பெருகிவிட்ட பயணங்கள்! வீடியோ போடும் கூட்டங்கள்!

modern travel trends
modern travel trendsImage credit: AI
Published on
Kalki Strip
Kalki Strip

ருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ போகிறாய் ஞானத்தங்கமே! என்ற தத்துவப் பாட்டு பிரயாணத்திற்கு மட்டும் பொருந்தாது.

பிரயாணம் என்பது தற்கால சூழலில் மிகவும் இன்றியமையாத விஷயமாக ஆகிவிட்டது. ஓரிரு நாள் பயணம் முதல் மாதக்கணக்கில் பயணம் என்பது வரை நடக்கிறது. அருகில் உள்ள இடங்கள் முதல் தூர தேசம் வரை பிரயாணம் செய்வது என்பதும் நடைமுறையில் சாத்தியமாகிவிட்டது.

எதற்காக எல்லோரும் மூட்டை முடிச்சுகளுடன் பரபரக்கிறார்கள். வேலை மற்றும் வாழ்வின் அழுத்தம், தினம் தினம் ஒன்றையே செய்யும்போது ஏற்படும் சலிப்பு, வேறு இடங்களை, மக்களைக்காண விழையும் தவிப்பு, பல்வேறு விதமான உணவுகளை சுவைக்க ஏற்படும் ஆர்வம், வசந்தமான நினைவுகளை சுமக்க துடிக்கும் துடிப்பு என்று காரணங்கள் பல இருக்கின்றன.

ஐம்பது வருடங்கள் முன்பெல்லாம் பெரிய குடும்பமாக சேர்ந்து வாழ்ந்த நிலை, வீட்டை விட்டு வெளியில் சென்று தான் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் என்ற அவசியம் ஏற்பட்டதில்லை. பொருளாதார சாத்தியங்களும், புற சூழல் அழுத்தமும், இல்லாமல் வாழ்ந்த காலங்கள் அவை .

ஊருக்கு செல்வது என்பது குடும்ப கல்யாணங்களுக்கோ, குல தெய்வ வழிபாட்டுக்கோ, அல்லது பாட்டி, அத்தை, மாமா வீட்டிற்கு கோடை விடுமுறையில் செல்வது என்பது மட்டுமே நிகழ்ந்தது. மற்றபடி வெந்த சோறை தின்று வீட்டில் வீழ்ந்து கிடந்தார்கள் நம்மவர்கள்.

வாழ்க்கை மிகவும் சலிப்பும், அழுத்தமும் நிறைந்ததாக ஆகிப்போனதால் (கருதப்படுவதால்) இந்த பிரயாணங்கள் அவசியமாகின்றன. சமூக ஊடகங்கள், கவர்ச்சியான விளம்பரங்கள், நண்பர்கள் உறவினர்கள் பிரயாணித்து விட்டு வந்து சொல்லும் செய்திகள் எல்லாம் தூண்டுதலாக அமைகின்றன. கணவனும் மனைவியும் நல்ல படிப்பு, வேலை சம்பளம் என்று நிலைபெறுவதால் கிடைக்கும் பொருளாதார விடுதலையும் இதற்கு வித்திடுகிறது. சட்டென்று ஏற்படும் சலிப்பும், புதியவற்றைக் காண வேண்டும் என்ற துடிப்பும், அந்த நினைவுகளை சுமக்க, பரப்ப ஏற்படும் ஆர்வமும் மேலும் நெருப்பை ஏற்றி விடுகின்றன.

வார இறுதி நாட்கள் அல்லது அதனை ஒட்டி விடுமுறை வரும் நாட்கள் பலராலும் வீட்டில் இருக்க முடிவதில்லை. சனி அல்லது ஞாயிறுகளில் உணவகம் சென்று சாப்பிடும் பழக்கம் வந்து சில காலம் ஆகிவிட்டது. நீங்கள் கூட செல்ல வேண்டாம் அவர்களே ஸ்விக்கி, ஜோமோட்டோ என்று கிளம்பி வந்து வீட்டிற்கே உணவை தந்து விடுகிறார்கள். எனவே வீட்டில் சமைப்பது என்பது தவிர்க்கப்படுகிறது. கிளம்ப வேண்டியது மட்டும்தானே பாக்கி. அதையும் செய்துவிடுவது சுலபமாகிறது.

சிறு குடும்பமாக இருப்பதும் பலரும் வாகனங்கள் வைத்திருப்பதும் இதனை மேலும் சுலபமாக்குகிறது. நீண்ட திட்டமிடுதலும் தேவைப்படுவதில்லை. எல்லாமே வலைத்தளங்களில் கொட்டிக்கிடக்கின்றன.

இதையும் படியுங்கள்:
உங்க தாத்தா பாட்டியை டூர் கூட்டிட்டு போக பிளானா? எந்த டென்ஷனும் இல்லாத இந்த டாப் 5 இடங்கள் இதோ!
modern travel trends

வெளியூர் சென்றால் தங்கும் வசதிகளும் உணவு சாத்தியங்களும் ஒரு பொருட்டாகவில்லை. கைநிறைய சம்பளம் வாங்குவதும் அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலையும், சேமிப்பை தள்ளிவைக்கும் குணநலனும் இதற்கு மேலும் உரமிடுகின்றன. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரயாணம் செய்வதற்காக பிள்ளை பெறுவதையே சில வருடங்கள் தள்ளிவைத்ததாக சொன்ன தம்பதியை பார்த்து வியந்து போனது அரங்கம். இளம் தலைமுறையின் வாழ்க்கை குறியீடுகளே மாறிப்போய் இருப்பது இதன் மூலம் விளங்குகிறது.

பணத்தை சேர்த்து வைத்து திட்டமிட்டு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பிரயாணம் செய்பவர்களை விட செலவுசெய்துவிட்டு கடனை அடைக்கும் மனநிலைக்கு வந்து விட்டார்கள் மக்கள் என்பது புரிகிறது. அதற்காகவே முளைத்துள்ளனர் பயண திட்டமிடுபவர்கள் .

நண்பர்களும் உறவினர்களும், வலைத்தளங்களும்

யாராவது ஒருவர் ஒரு இடத்திற்கு சென்று வந்து படங்களையும் அனுபவங்களையும் விஸ்தரித்து சொன்னார்கள் என்றால் அடுத்த வாரம் அங்கே கிளம்பி விட துடிக்கிறார்கள் இளம் தலைமுறையினர். வலைத்தளங்களில் அதிகம் காணப்படும் விஷயமாக இடம் மற்றும் உணவு சுற்றுலாக்கள் அமைகின்றன.

எண்ணிலடங்கா பயணங்களும், உணவக மதிப்பீடுகளும் வலைத்தளத்தில் ஏராளமாக இருக்கின்றன. தனி மனிதனாக செல்லும் சோலோ (solo) பயணி முதல், ஒரு பையை முதுகில் மாட்டிக்கொண்டு கிளம்பிவிடும் பேக் பேக்கர் (back packer) என்று கிளைத்து, குடும்பமாக சென்று வீடியோ போடும் கூட்டம் என்று ஏராளம் இருக்கிறது. இவைகளால் தூண்டப்பட்டு பயணிப்போரும் ஏராளம்.

பயண ஏற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில் நோய் தொற்று காலத்தில் அடைந்து கிடந்த மக்களின் மனநிலை நிலையற்ற தன்மையையும், விடுபட்ட மனநிலையும் விதைத்து விட்டது என்கிறார். அதன் பிறகு பயணங்கள் பல்கி பெருகிவிட்டதை கட்டம் போட்டு விளக்குகிறார்.

இதையும் படியுங்கள்:
மேகங்களை தொடும் உயரத்தில் ஒரு தேயிலை தோட்டம்.. கொழுக்குமலையின் பிரம்மாண்ட ரகசியங்கள்!
modern travel trends

புதிய புதிய இடங்களை தேடிச் செல்வதும், பயணித்த இடத்துக்கே வேறு விடுபட்ட அனுபவங்களை பெறவும் பயணிக்கிறார்கள். பெரு நகரங்களிலிருந்து செல்பவர்களை போல சிறிய ஊர்களிலிருந்தும் பலர் பயணங்களை மேற்கொள்கிறார்கள் என்கிறார் அவர்.

தெரிந்த இடங்களை காணாமல் இருக்கக்கூடாது, தெரியாத இடங்களை பார்க்காமல் இருக்கக்கூடாது என்பது வரை இந்த மோக வலை பரவிக்கிடக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com