
மொராக்கோ வட ஆப்பிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளது.
நீல நகரம் (Chefchaouen the Blue City of Morocco):
செஃப்சௌன் அல்லது சௌன், வடமேற்கு மொராக்கோவில் டெட்டோவான் மற்றும் ஓவாஸானுக்கு இடையில் ரிஃப் (Rif mountains) மலைகளில் உள்ள ஒரு நகரமாகும். 1471 ஆம் ஆண்டு மௌலே அலி பென் ரச்சிட் என்பவரால் ஒரு சிறிய கோட்டையாக நிறுவப்பட்டது. இந்த நீல நகரம் அதன் பழைய நகரத்தின் அழகிய நீல நிற கட்டடங்களுக்கு பெயர் பெற்றது. 'நீல நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது. நீல நிறம் என்பது 1930 களில் யூத அகதிகளால் தொடங்கப்பட்ட ஒரு பாரம்பரியமாகும். அமைதியான சூழ்நிலை, அழகிய நிலப்பரப்புகள், குறுகிய வளைந்த சந்துகள் மற்றும் கைவினைப் பொருட்கள், உள்ளூர் உணவு வகைகளை அனுபவிக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த நகரம் மொராக்கோ கலாச்சாரத்தை பெரிய நகரங்களின் பரபரப்பில் இருந்து விலகி ஆராய்வதற்கு ஒரு சிறந்த இடமாகும்.
மொராக்கோ கலாச்சாரம், வரலாறு மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றின் அற்புதமான கலவையை வழங்குகிறது. கம்பீரமான மலைகள், அழகான கடலோர நகரங்களுடன் மறக்க முடியாத அனுபவங்களைத் தருகிறது. தோல் மற்றும் நெசவு பட்டறைகள் அதன் செங்குத்தான கற்களால் ஆன பாதைகளை வரிசையாகக் கொண்டுள்ளன. பிளேஸ் எல் ஹம்மாவின் நிழலான பிரதான சதுக்கத்தில் 15 ஆம் நூற்றாண்டின் கோட்டை மற்றும் நிலவறையான சிவப்பு சுவர் கொண்ட கஸ்பா மற்றும் செஃப்சௌன் இனவியல் அருங்காட்சியகம் உள்ளன. பெரிய மசூதியின் எண்கோண மினாரம் அருகிலேயே உயர்ந்து நிற்கிறது.
பேசும் மொழிகள்:
மொராக்கோவில் அரபு மற்றும் டமாசைட் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாகும். மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் அரபு பேசப்படுகிறது. பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழியும் பரவலாக பேசப்படுகிறது.
செஃப்சௌனில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
நீல மெடினா (Medina):
செஃப்சௌனின் மெடினா அல்லது பழைய நகரம், நகரத்தினுடைய இதயப் பகுதியாகும். இதன் நீல வண்ணம் பூசப்பட்ட வீடுகள் மற்றும் குறுகிய கூழாங்கல் பாதைகளால் வகைப்படுத்தப்படுகிறது. அந்த காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் அண்டலூசியன் கட்டடக்கலை பாணியில் உள்ளது. இப்பகுதியில் கைவினைஞர்கள் நெய்த பொருட்கள் மற்றும் உள்ளூர் கலைகளை வழங்கும் பாரம்பரிய சந்தைகள் உள்ளன. புகைப்படம் எடுப்பதற்கும், உள்ளூர் கைவினைப் பொருட்களை வாங்குவதற்கும் மற்றும் அமைதியான சூழ்நிலையை அனுபவிப்பதற்கும் ஏற்ற நீல நிற சந்துகளின் மயக்கும் வழிகளை காண்பதும் மிகவும் சிறப்பாக இருக்கும்.
பிளாசா உட்டா எல்-ஹம்மாம் (Uta Hammam Square):
செஃப்சௌனின் பழைய நகரத்தின் மைய சதுக்கத்தில் பிளாசா உட்டா எல்- ஹம்மாம் உள்ளது. மெரடினாவின் முக்கிய சதுக்கம். இங்கு கஸ்பா கோட்டையும், ஒரு பெரிய மசூதியும் அமைந்துள்ளது. கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் பிரம்மாண்டமான காஸ்பா அருங்காட்சியகம் ஆகியவை மிகவும் ரசிக்கும் வகையில் உள்ளன.
காஸ்பா (Kasbah) அருங்காட்சியகம் & தோட்டங்கள்:
மதீனாவின் மிகப்பழமையான பகுதி கஸ்பாவாகும். இது 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அலி இப்னு ரஷீத் என்பவரால் நிறுவப்பட்ட கோட்டையாகும். செவ்வக வடிவிலான இக் கோட்டை மண்ணில் கட்டப்பட்ட சுவர்களால் பாதுகாக்கப்படுகிறது. கஸ்பாவின் சுவர்கள் 10 கோபுரங்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இவையும் மண்ணால் கட்டப்பட்டவை தான். இவை உள்ளே பல அறைகளைக் கொண்டு, செங்கல் குவிமாடங்களால் மூடப்பட்டிருக்கிறது. கஸ்பா ஒரு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. நகர மையத்தில் அமைந்துள்ள அதன் பசுமையான தோட்டங்களும், பழைய ஆயுதங்களின் தொகுப்பு மற்றும் நகரத்தின் புகைப்படங்கள் கொண்ட அருங்காட்சியகமும் பார்க்க வேண்டிய இடமாகும்.
ராஸ் எல்-மா (Ras el-Ma) நீர்வீழ்ச்சி:
செஃப்சௌன் நகரம் நீல நிறமாக இருப்பதற்கு காரணம் ராஸ் எல்-மா நீர்வீழ்ச்சியின் முக்கியத்துவத்தை குறிப்பதற்காக என்று நம்புகிறார்கள். ராஸ் எல்-மா நீர்வீழ்ச்சி, செஃப்சௌன் மெடினாவின் வடகிழக்கு வாயிலுக்கப்பால் உள்ளது. மலையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வரும் சத்தமும், பசுமையான மலைகளும் இயற்கையை ரசிக்க வைக்கின்றன. ஓய்வெடுக்க ஏற்ற இடமிது.
எப்படி செல்வது?
சர்வதேச விமான நிலையம் டான்ஜியரில் (Tangier) இருந்து சுமார் 2 மணி நேரத்தில் மொராக்காவில் உள்ள செஃப்சௌன் அடையலாம். இயற்கை எழில்மிக்க இந்த இடம் மறக்க முடியாத பயண அனுபவத்தைத் தருகிறது.