

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஔரங்காபாத்திலுள்ள எல்லோரா குகைகளை பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். அதே சமயம், நம் தென்னிந்தியாவின் எல்லோராவை பற்றி உங்களுக்குத் தெரியுமா?? அதை பற்றி இப் பதவில் பார்க்கலாம்.
கழுகுமலை வெட்டுவான் கோவில்தான் “தென்னிந்தியாவின் எல்லோரா” என்றழைக்கப்படுகிறது. பெரும் பாறைகளைக் குடைந்து இந்த கோவிலானது கட்டப்பட்ட இந்தக்கோவில் கட்டபட்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் இந்தக்கோவில், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் என்பவரால் கட்டத் தொடங்கி முற்று பெறாமல் விடப்பட்டது.
இந்த கலை சின்னங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கழுகுமலையின் பண்டைய காலத்து பெயர் 'அரைமலை' என்பதாகும். கழுகுமலையின் கிழக்குப் பக்கத்தில்தான் இந்த வெட்டுவான் கோவில் அமைந்திருக்கிறது.
கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டு மன்னர்கள் மதுரையை தலைநகராகக்கொண்டு, புதுக்கோட்டையில் இருந்து கன்னியாகுமாரி வரை ஆட்சி செய்துள்ளார்கள். எனவே வெட்டுவான் கோவிலை 8ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பண்டைய மன்னர்களால் கட்டி இருக்கலாமென தொல்லியல் ஆய்வாளர் கருதுகிறார்கள்.
இந்த மலையில் குடைவரைக் கோவில் மட்டுமல்லாமல் அதிக அளவிலான சமணர்களின் சிற்பங்களையும் பார்க்க முடியும். தமிழகத்தில் வேறு எந்த இடங்களிலும் இந்தளவு சமணர்களின் சிற்பங்களைப் பார்க்க முடியாது என்பது மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும்.
பராந்தக நெடுஞ்சடையான் அல்லது முதல் வரகுண பாண்டியன் காலத்தில்தான் இங்கு சமணர் பள்ளி உருவாக்கப்பட்டதாக அங்கிருக்கும் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரில் அமைந்திருக்கும் கைலாசநாதர் கோவில் மற்றும் எல்லோரா குகைகளின் மாதிரியைப் போலவே இந்த கழுகுமலை வெட்டுவான் கோவிலும் அமைந்துள்ளது.
ஆகவேதான், இதை தென்னிந்தியாவின் எல்லோரா என்று மக்கள் அழைக்கிறார்கள். மேலும், வெட்டுவான் கோவில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட குடைவரைக் கோவிலாகும்.. தென்னிந்தியாவில் வேறு எந்தக் கோவிலிலும் இதைப் போன்று ஒரே கல்லில் குடைவரைக் கோவில் அமைக்கப்படவில்லை.
மற்ற குடைவரைக் கோவில்களில் இல்லாத தனி சிறப்பு:
பொதுவாக கட்டடங்களைக் கட்டும்போது முதலில் அஸ்திவாரம் அமைத்து கீழ் இருந்து மேலாக கட்ட தொடங்குவார்கள். ஆனால், கழுகுமலை வெட்டுவான் கோவிலோ மேல் இருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது.
அஸ்திவாரம் எதுவும் இல்லாமல் பாறையை 'பா' வடிவத்தில் 7.50 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதியை கலசமாகக்கொண்டு, சிகரம், தளம், கூரை, பின்பு சுவர்கள் என மேல் இருந்து கீழ் நோக்கி குடையப்பட்டு உள்ளது.
மேலும் இந்த கோபுரத்தில் அமைந்திருக்கும் சிலைகள் அனைத்தும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை. வேறு எந்தவிதமான செதுக்கப்பட்ட சிற்பங்களும் இதில் பொருத்தப்படவில்லை.
வெட்டுவான் கோவில் மேல் இருந்து கீழ் செதுக்கப்பட்ட கோவில் என்பதால் அதிக நுட்பமான வேலைப்பாடுகள் இதில் செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக குடைவரைக் கோவில்கள் என்றால் மலை அல்லது பாறையின் பக்கவாட்டிலிருந்துதான் குடைய தொடங்குவார்கள்.
ஆனால், வெட்டுவான் கோவிலில் செங்குத்தாக இருக்கும் மலையின் உச்சியில் மேல் இருந்து கீழாக தலைகீழாக கலசம், சிகரம், தளம், கூரை என குடைந்து செதுக்கப்பட்டுள்ளது.
வெட்டுவான் கோவிலில் சிகரம், கருவறை மற்றும் அர்த்த மண்டபமும் இருக்கின்றன. ஆனால் இந்தக் கோவில் முழுமையாக கட்டப்படவில்லை. இது முற்றுப்பெறாத கோவில். சிகரம் மட்டுமே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் அமைத்திருக்கும் கருவரையில் இருக்கும் விநாயகரின் சிலை பிற்காலத்தில் வைக்கப்பட்டது.
வெட்டுவான் கோவிலில் உமாமகேஸ்வரன், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிலைகள் சிற்ப வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
மேலும் விமானத்தின் நான்கு திசைகளின் மூலையிலும் நந்தி சிலைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் அதற்குக் கீழாக யாளி மற்றும் கபோதமும் அமைந்துள்ளன. கபோதம் என்பது கருவறைச் சுவரின் வெளிப்பகுதியில் மழைநீர் படாமலிருப்பதற்காக அமைக்கப்படுவதாகும்.
சிகரத்தில் மேற்குத் திசையில் விஷ்ணு, வடக்குத் திசையில் பிரம்மா, தெற்குப் பக்கத்தில் தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் அமைந்துள்ளன.
பொதுவாக தட்சிணாமூர்த்தி சிவன் கோவில்களின் தெற்கு திசையில் வியாக்யான முத்திரையை காட்டியப்படி அமர்ந்திருப்பார். ஆனால் வெட்டுவான் கோவிலில் மிருதங்க தட்சிணாமூர்த்தி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. வெட்டுவான் கோவிலுக்கு அருகில் அதிக அளவிலான பண்டைய காலத்து சமணர்களின் சிற்பங்களைப் பார்க்கமுடியும்.
தமிழ்நாட்டில் அதிக அளவிலான சமணர்களின் சிற்பங்களை ஒரே இடத்தில் இங்கு காணலாம். மலையின் சரிவில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப் பட்டதென்றும், இந்த சிற்பங்கள் பண்டைய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றிவிக்கப்பட்டவை என்றும் கல்வெட்டுகளின் மூலம் நம்மால் அறியமுடிகிறது.