

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி திம்பம் ஆசனூர் மலைப்பகுதிகள் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக விளங்கி வருகிறது. தாளவாடியில் இருந்து கர்நாடகா செல்லும் சாலைகள் இருபுறமும் அருமையான இயற்கை காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த இடங்கள் அடர்ந்த வனப்பகுதி நிறைந்த பகுதியாகும். இந்தப் பகுதி வழியாக ரோடு கர்நாடகாவுக்கு செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1105 மீட்டர் உயரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. மிகவும் குளிர்ச்சியான பகுதியாக காணப்படுகிறது.
ரோட்டில் இரு புறமும் அற்புதமான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளில் இயற்கை காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. இங்கு யானை கூட்டங்கள் காட்டெருமை கூட்டங்களை பார்க்கலாம். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் புலிகள் சிறுத்தைகள் கரடி மான் குரங்கு யானைகள் காட்டெருமைகள் போன்ற எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன
திம்பம் தாளவாடி மலைப்பகுதிகளில் பச்சை பட்டுகளை விரித்தார் போன்று பசுமையாக காணப்படும். சுற்றுலா பயணிகள் இதன் அழகை ரசித்துக்கொண்டே செல்லலாம். இந்த இடங்களில் ரோட்டோரங்களில் மூங்கில் மரங்கள் அடர்த்தியாக காணப்படும்.
இந்த மூங்கில் மரங்களை சுவைத்து உண்பதற்கு யானைக் கூட்டங்கள் வரும். ரோட்டில் இருபுறமும் உள்ள மூங்கில் மரங்களை யானைகள் சுவைத்து சாப்பிடும் அழகே தனி. காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக செல்லும். இதனை நாம் அருகில் இருந்து காணலாம்.
யானைக் கூட்டங்களை கண்டால் வாகனங்களை நிறுத்தி ஒலி எழுப்பக் கூடாது கூச்சல் போடக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை செய்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவுரை கூறுகின்றனர். இந்தப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இதில் வாகனங்கள் செல்லும்போது இருபுறமும் கண்கொள்ளாக் காட்சிகளை காணலாம். உதகைக்கு அடுத்தபடியாக சீதோஷ்ண நிலை உள்ள இடமாகும்.
இங்கு தனியார் விடுதிகள் உள்ளன. இந்த இடங்களில் குதிரை சவாரி நடைப்பயணம் செல்வது மிகவும் உற்சாகமாக இருக்கும்.
இங்குள்ள இயற்கை காட்சிகளைக்காண தமிழ்நாடு கர்நாடகா மாநிலங்களில் இருந்து நிறைய சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இவர்களை குறிவைத்து ஆசனூர் பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் உள்ளன. புலிகள் சரணாலயத்தை இரவில் சுற்றிப் பார்க்க வாகன வசதி உண்டு.
இந்த வாகனத்தில் அமர்ந்துகொண்டு யானை புலி சிறுத்தை காட்டெருமைகள் இவற்றை அருகே காணலாம். உயரத்திலிருந்து தெரியும் ஆசனூர் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இந்த இடத்திற்கு சுற்றுலா செல்வதற்கு உகந்த மாதமாகும்.
அந்த சமயங்களில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படும்
சீசன் சமயத்தில் ஆசனூர் பகுதி களைகட்டி இருக்கும். தாளவாடி பகுதியில் ஆண்கள் மட்டுமே வழிபடக்கூடிய மல்லிகார்ஜுனா கோவில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி பகுதியில் கொங்குகல்லி என்ற இடத்தில் இந்த மல்லிகார்ஜுனா கோவில் உள்ளது. தாளவாடியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.
இங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் ஒரு ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. இந்த இரண்டு கோவில்களிலும் பெண்கள் வழிபட அனுமதி இல்லை. மல்லிகார்ஜுனா பிரம்மசாரியாக விரதம் இருந்து முத்தி அடைந்ததால் இங்கு பெண்கள் வழிபட அனுமதி இல்லை எனக் கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை காளிங்கராயன் அணை கடம்பூர் மலை போன்ற இடங்கள் உள்ளன. ஈரோட்டில் இருந்து 120 கிலோமீட்டர் சத்தியமங்கலத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் தாளவாடி உள்ளது. இந்தப் பகுதிகளில் நிறைய குக்கிராமங்கள் உள்ளன. சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றி பார்த்துவிட்டு வரலாம்.