இந்தியாவில் உள்ள அருவிகளில் மிகவும் அழகிய மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் அருவிகளில் கும்பே அருவியும் ஒன்றாகும். மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள இந்த அருவி பார்ப்பவர்கள் மனதை கொள்ளைக் கொள்வதாக இருக்கும். அத்தகைய அழகிய அருவியை பற்றித்தான் இந்த பதிவில் விரிவாக காண உள்ளோம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கும்பே கிராமத்தில் அமைந்துள்ளது கும்பே அருவி. மழைக்காலத்தில் இந்த அருவியை காண்பது என்பது ஒரு வரப்பிரசாதமாகும். இந்த அருவி பூனேவில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கும்பே அருவியை ஜூலை முதல் செப்டம்பர் மாதத்தில் சென்று பார்ப்பது சிறப்பாகும். மழைக்காலங்களில் இந்த அருவி புது உயிரோட்டம் பெற்று காணப்படும் என்றே சொல்ல வேண்டும்.
இந்த அருவியை அடைய 1 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்க்கொள்ள வேண்டும். கும்பே அருவிக்கு செல்லும் வழியில் இயற்கை எழில்கொஞ்சும் அழகையும், பச்சைபசேல் என்ற பசுமை நிறைந்த காடுகளின் அழகையும், அங்கிருக்கும் மலைகளின் பிரம்மாண்டத்தையும் ரசித்தவாறே செல்லலாம். தற்போது இந்த அருவி பிரபலம் அடைந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம், மிகவும் சிக்கலான பாதைகள் இல்லாமல் இந்த அருவியை அடைவதற்கான பாதை சுலபமாக இருப்பதேயாகும். எனவே, குடும்பத்துடன் சென்று ரசித்து வருவதற்கு ஏற்ற சுற்றுலாத்தலமாகவும் இருக்கிறது.
நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தில் வரும் ‘வா தலைவா’ பாடலை இந்த இடத்தில்தான் படமாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற இயற்கையான அருவிகளை பார்க்க செல்லும்போது பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமாகும். தற்போது நிறைய பேர் பயணம் மேற்கொள்ளவும், புகைப்படம் எடுப்பதற்கும் அதிகம் விரும்புகிறார்கள். செல்பி மோகத்தில் பாதுகாப்பை மறந்து விடுகிறார்கள். இதுபோன்ற அருவி இருக்குமிடத்தில் உள்ள பாறைகளில் பாசிகள் அதிகம் படிந்திருக்கும். அதுவும் மழைக்காலத்தில் ஈரப்பதத்துடன் இருக்கும்.
அப்போது அங்கே செல்லும் மக்கள் பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியம். மலையின் உச்சியில் நின்று புகைப்படம் எடுப்பது போன்ற ஆபத்தான விஷயங்களை செய்யாமல் எச்சரிக்கையுடன், கவனமாக சென்றுவிட்டு வருவது சிறப்பு. ஏனெனில், இயற்கை என்பது அழகானது மட்டுமில்லை, ஆபத்தானதும் கூட. இதுபோன்ற இடத்தில் கவனக் குறைவாக இருப்பது என்பது நொடிப் பொழுதில் ஆபத்தில் முடிந்துவிடும். அதை உணர்ந்துக்கொண்டு பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது சிறப்பாகும்.