காட்டு விலங்குகளின் இரவுக் கச்சேரி: சஃபாரியில் உயிருடன் தப்பிக்கவும் ரசிக்கவும் வழிகள்!

ஃப்ளாஷ் லைட் முதல் ஆடை வரை: இரவு நேரக் காட்டுப் பயணத்தின் ரகசியங்கள்!
இரவு சஃபாரி - Animal Watching
இரவு சஃபாரி - Animal Watching
Updated on

ரவு சஃபாரி பகல் பயணத்திலிருந்து மாறுபட்ட த்ரில்லான அனுபவம். சிங்கப்பூர் இரவு சஃபாரி, தென்னாப்பிரிக்கா க்ரூகர் தேசியப் பூங்கா, ஆஸ்திரேலிய டரோங்கா மிருகக்காட்சிசாலை போன்ற இடங்கள் விலங்குகளின் இரவுச் செயல்பாடுகளை பாதுகாப்பாகக் காண வாய்ப்பு தருகின்றன. சரியான ஆடை, வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல், பாதுகாப்பு விதிகள், அத்தியாவசியப் பொருட்கள், நிதானம், முன்பதிவு ஆகியவை அனுபவத்தை சிறப்பாக்கும்.

வனவிலங்குகளின் இயற்கையான வாழ்விடத்திற்குள் நுழைகிறோம். எனவே பாதுகாப்பு, வசதி மற்றும் சஃபாரியை முழுமையாக அனுபவிக்க சில விதிகளை பின்பற்ற வேண்டும். இந்த இரவு நேர வனவிலங்கு சாகசத்தை பாதுகாப்பாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் மாற்றத் தேவையான முக்கியமான குறிப்புகள் சிலவற்றை இங்கு காணலாம்.

உலகின் மிகச்சிறந்த இரவு சஃபாரி அனுபவங்களைத் தரும் சில இடங்கள் சாகசத்தையும் பாதுகாப்பையும் நினைக்கும் வகையில் மிக சிறப்பாக செய்கின்றன. இரவில் விலங்குகள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை காணும் வாய்ப்பை பெற சிங்கப்பூர் இரவு சபாரி ஏற்றதாக இருக்கும்.

அதுவே நீங்கள் அடர்ந்த வனப்பகுதியைத் தேடுகிறீர்கள் என்றால் தென்னாப்பிரிக்காவின் க்ரூகர் தேசியப் பூங்காவிற்கு செல்லலாம். இங்கு விலங்குகள் வேட்டையாடுவதை காண்பதும், எளிதில் கண்ணில் படாத அரிய உயிரினங்களைப் பார்க்கவும் சந்தர்ப்பங்கள் அமைகின்றன.

ஆஸ்திரேலியாவின் டரோங்கா மிருகக்காட்சிசாலை போன்ற இடங்களில் இரவு நேரப் பறவைகள் முதல் வோம்பாட்கள் வரை காணக் கிடைக்கும் சஃபாரியை வழங்குகிறது. இந்த இடங்கள் ஒவ்வொன்றுமே ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

இதையும் படியுங்கள்:
வனவிலங்கு பாதுகாப்பு: இளைஞர்களின் அதிரடிப் புரட்சி!
இரவு சஃபாரி - Animal Watching

முழு உடைகளைத் தேர்ந்தெடுங்கள்:

இரவு நேர சஃபாரிக்கு ஆடை தேர்வு மிகவும் முக்கியம், காடுகளில் இரவு நேரங்களில் குளிர் அதிகம் இருக்கும் என்பதால் பல அடுக்குகளாக ஆடைகளை அணிவது நல்லது. லேசான ஜாக்கெட் அல்லது ஸ்வெட்டர் ஒன்றை மறக்காமல் எடுத்துச்செல்லலாம். செல்லும் இடம் ஈரப்பதமாக இருக்குமெனில் எடை குறைந்த காற்றோட்டமான துணிகளே சிறந்த தேர்வாகும்.

கொசு மற்றும் பூச்சிக் கடிகளிலிருந்து தப்பிக்க முழுக்கை சட்டை மற்றும் முழுக்கால் பேண்ட் அணிவது அவசியம். கால்கள் முழுவதையும் மூடக்கூடிய காலணிகள், பூச்சிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள உடல் முழுவதும் குறிப்பாக கைகள், கால்களை மறைக்கும் ஆடைகளை அணிவது முக்கியம்.

வெள்ளை போன்ற பளிச்சிடும் நிறங்களைத் தவிர்த்து அடர் பச்சை, பழுப்பு அல்லது சாம்பல் நிற ஆடைகளை அணிவது விலங்குகளின் கண்களுக்கு நம் உருவம் எளிதில் தெரியாது.

இரவு சஃபாரி - Animal Watching
இரவு சஃபாரி - Animal WatchingAI Image

வழிகாட்டுதல்களை பின்பற்றுவது:

விலங்குகள் மற்றும் பார்வையாளர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு சஃபாரிக்கும் அதற்கே உரிய சில சிறப்பு வழிகாட்டுதல்கள் உள்ளன. அவற்றைக் கண்டிப்பாக அறிந்து கொண்டு பின்பற்ற வேண்டியது அவசியம். வழிகாட்டிகள் சொல்வதை கவனமாகக் கேட்பதும், விலங்குகளை பயமுறுத்தும் வகையில் உரத்து பேசுவதும், சத்தங்களை எழுப்புவதும் தவிர்க்கப்பட வேண்டியவை.

பாதுகாப்பு மற்றும் விதிகள்:

விலங்குகளின் கண்கள் மிகச்சிறந்த உணர்திறன் கொண்டவை என்பதால் கேமராக்களில் ஃப்ளாஷ் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

காட்டு விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நம் சொந்த நலனுக்காக, சஃபாரி வாகனத்தை விட்டு எக்காரணம் கொண்டும் கீழே இறங்கக் கூடாது. விலங்குகளை பயமுறுத்தும் வகையில் கத்துவதோ, சத்தமாக பேசுவதோ கூடாது. காட்டுத் தீ அபாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக வனப்பகுதிக்குள் புகைபிடித்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள்:

அத்தியாவசியமான பொருட்கள் அடங்கிய சிறிய முதுகுப்பை பயணத்தை எளிதாக்கும். டார்ச் லைட், தலைக்கவச விளக்கு (Headlamp), தொலைவில் உள்ள விலங்குகளைக் கண்டு அறிவதற்கு தொலைநோக்கிகள் (binocular), குடிநீர் பாட்டில், சார்ஜ் செய்யப்பட்ட கேமராக்கள் போன்றவற்றை எடுத்துச்செல்ல மறக்கவேண்டாம்.

சாதாரண பிரகாசமான வெள்ளை விளக்குகள் விலங்குகளை மிரளச் செய்யும் அல்லது அவற்றின் கண்களை பாதிக்கும். எனவே சிவப்பு வடிகட்டி கொண்ட மின்விளக்குகளை (Red - filter Torch) எடுத்துச் செல்லலாம்.

நிதானம் மற்றும் பொறுமை:

விலங்குகள் தன்னிச்சையாக செயல்படுபவை. அவற்றின் செயல்பாடுகளை கவனிக்கவும், சிறந்த அனுபவத்தை பெறவும் நிதானமும் பொறுமையும் அவசியம். இரவில் நடமாடக்கூடிய பல விலங்குகள் பதுங்கிச் செல்லும் தன்மை கொண்டவை. அவற்றைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். எனவே சுற்றுப்புறத்தை நிதானமாக ஆராய்ந்து பொறுமையை கடைப்பிடிக்கவும். கூர்ந்து கவனிக்க காட்டு விலங்குகளின் காலடி ஓசை, ஆந்தையுடைய கூவல், விலங்குகளின் நடமாட்டத்தை அறியமுடியும்.

விலங்குகளை தொந்தரவு செய்யாமல் இருப்பது:

விலங்குகளை அவற்றின் இயற்கையான சூழலில் சென்று பார்க்கும் பொழுது மிகவும் அருகில் செல்லாமல் குறிப்பிட்ட தூரத்தை கடைபிடிப்பது ஆபத்தை வரவழைக்காமல் இருக்க உதவும். அத்துடன் அவற்றின் மீது நேரடியாக விளக்குகளை, டார்ச் விளக்குகளை அடிப்பதை தவிர்க்கவும். ஆர்வ மிகுதியில் விலங்குகளுக்கு உணவளிக்க முற்படுவது, அவற்றுக்கு அருகில் செல்வது, உரத்து பேசுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
எதிர்பாராத வகையில் உருமாறும்.. நாம் தூக்கி எறியும் அன்றாடப் பொருட்கள்...!
இரவு சஃபாரி - Animal Watching

ஏமாற்றத்தை தவிர்க்க முன்பதிவு செய்வது:

இரவு சஃபாரிக்கு ஆன்லைன் மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்வது ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். இதற்கு வனத்துறை இணையதளங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆபரேட்டர்கள் மூலம் முன்கூட்டியே அனுமதிகளை பெற்றுக்கொள்வதும், சஃபாரிக்கு முன்பாக வழிகாட்டி வழங்கும் அனைத்து பாதுகாப்பு வழிமுறை களையும் கவனமாகக் கேட்பதும் அவசியமான ஒன்று.

வனப் பகுதியின் சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் மற்றும் விலங்குகளின் நடத்தையைப் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம், தேவையற்ற அச்சத்துக்கோ ஆபத்துக்கோ ஆளாகாமல் சஃபாரி அனுபவத்தை நூறு சதவீதம் நிறைவாகப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com