

நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தி, சாதாரணமாகக் குப்பையில் வீசும் பல பொருட்களுக்கு, புதிய, பயனுள்ள மற்றும் நீடித்த ஒன்றாக மாறும் ஆற்றல் உள்ளது. உலகளாவிய நகராட்சி திடக்கழிவுகளில் 20%க்கும் குறைவாகவே மறுசுழற்சி செய்யப்படுவதால், மறுசுழற்சி என்பது காலத்தின் தேவையாகியுள்ளது. நீங்கள் ஒருவேளை அறிந்திருக்காத வழிகளில் மறுசுழற்சி செய்யப்படும் அன்றாடப் பொருட்களுக்கான ஐந்து எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
காபித்தூளிலிருந்து கார் விளக்குகள்...
காபித்தூள் உலர்த்தப்பட்டு, தாவர அடிப்படையிலான பிசின்களுடன் கலக்கப்பட்டு, சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக் உருவாக்கப்படுகிறது. இதன் அடிப்படை நோக்கம், புதிய பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைக் குறைத்து, அதற்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளைச் சார்ந்திருப்பதை அதிகரிப்பதாகும். உண்மையில், 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய நீடித்த கண்ணாடிகளுக்கான தீர்வுகள் ரூ.1,250 பில்லியனை எட்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், காபிக் கழிவுகள் கார்களின் உட்புறங்களையும், பானட்டின் கீழ் பொருத்தப்படும் விளக்குகளையும் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
வாழைக்கழிவிலிருந்து தோல்:
உலகளவில் கிட்டத்தட்ட 12 கோடி டன் வாழைக் கழிவுகள் உருவாகின்றன. இந்தக் கழிவிலிருந்துதான் வாழைத் தோல் தயாரிக்கப்படுகிறது. வாழைத் தண்டு நார்களிலிருந்து பைகள், பணப்பைகள், காலணிகள் என அனைத்தும் தயாரிக்கப்படுகின்றன. வழக்கமான தோல் உற்பத்தியாளர்கள் ஒரு பையைத் தயாரிக்க கிட்டத்தட்ட 10,000 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் நிலையில், இது நீர் பயன்பாட்டை 85% குறைக்கிறதாம்.
விளையாட்டு ஆடைகள், மெத்தை விரிப்புகள் வரை மாறும் PET பாட்டில்கள்:
PET பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, சிறிய பிளாஸ்டிக் செதில்களாகத் துண்டாக்கப்படுகின்றன. பின்னர் இவை உருக்கப்பட்டு, மெல்லிய பாலியஸ்டர் நூல்களாகப் பதப்படுத்தப்பட்டு, விளையாட்டு உடைகள், முதுகுப்பைகள், பைகள், மற்றும் தரைவிரிப்புகள், மெத்தை விரிப்புகள், கார் உட்புறங்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
முகக்கவசங்களிலிருந்து சாலைகள்:
பெருந்தொற்று காலத்தில் முகக்கவசங்கள் புழக்கத்திற்கு வந்தபோதிலும், பெருநகரங்களில் நிலவும் மாசுபாடு காரணமாக அவை இன்னும் வழக்கொழியவில்லை. அவை குப்பைக் கிடங்குகளில் குவிவதைத் தவிர்ப்பதற்காக, சுத்திகரிக்கப்பட்டு, சிறு துண்டுகளாக்கப்பட்டு, சாலை அமைக்கும் பொருட்களிலும், கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் பிற பொருட்களிலும் சேர்க்கப்படுகின்றன.
சரியான முறையில், சரியான விகிதத்தில் பயன்படுத்தப்படும்போது, முகக்கவசங்களில் உள்ள இழைகள் கான்கிரீட்டின் ஒட்டுமொத்த வலிமையை ஏறக்குறைய 10% முதல் 17% வரை அதிகரிக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மெல்லும் பபுள்கம்களிலிருந்து விளையாட்டு உபகரணங்கள்:
மெல்லும் பபுள்கம்களுக்கு ஒரு மோசமான பெயர் உண்டு. அவற்றைச் சரியான முறையில் அப்புறப்படுத்துவது கடினம் என்பது மட்டுமல்லாமல், அவை மக்கும் தன்மை இல்லாததால் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் பெருமளவில் பங்களிக்கின்றன.
இந்தப் பிரச்னையைத் தீர்க்க, மறுசுழற்சியாளர்கள் இந்தக் கோந்துகளைச் சேகரித்து, அவற்றை ரப்பர் போன்ற பொருட்களாகப் பதப்படுத்தும் வழிகளைக் கண்டறிந்துள்ளனர். இதன் இறுதிப் பொருட்கள் யாவை? ஸ்கேட்போர்டுகள், ஃப்ரிஸ்பீக்கள், கூம்புகள் மற்றும் பிற விளையாட்டு உபகரணங்கள்.
உங்களுக்குத் தெரியுமா?
மொத்தக் கழிவுகளில் 80%-க்கும் மேல் நிலநிரப்புக் கிடங்குகளிலும், குப்பைக்கிடங்குகளிலும் சென்று சேர்கிறது. 2050-ஆம் ஆண்டிற்குள் 4 பில்லியன் டன் நகராட்சி திடக்கழிவுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கழிவுகளைக் குப்பையில் கொட்டுவதற்குப் பதிலாக பயனுள்ள வகையில் பயன்படுத்த விரும்புகிறீர்களா? உலர் கழிவுகளை (பிளாஸ்டிக், காகிதம், உலோகம், கண்ணாடி) ஈரமான கழிவுகளிலிருந்து தனியாகப் பிரித்து, அவை உருவாகும் இடத்திலேயே வகைப்படுத்துங்கள்.
குடியிருப்பு சங்கங்கள், பள்ளிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் உள்ளூர் சேகரிப்பு இயக்கங்களைப் பயன்படுத்துங்கள். மாநகராட்சிகள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வெளியிடும் பட்டியல்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களைக் கண்டறிந்து அவற்றை தானம் செய்யுங்கள். பயன்படுத்தப்பட்ட ஆடைகள், காலணிகள் மற்றும் மின்னணுப் பொருட்களை மறுசுழற்சிக்காக வழங்குங்கள்.
இந்தத் தகவல்களைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வீட்டுக்கழிவுகளைப் பொருளாதார வாய்ப்பாக மாற்றவும், சுற்றுச்சூழலில் உங்கள் கார்பன் தடத்தைக் கணிசமாகக் குறைத்து, பூமிக்கு உகந்த ஒரு நவீன வாழ்க்கை முறையை உங்களால் உருவாக்க முடியும்.