டிஸ்னி வேர்ல்டு சுற்றுலா: மேஜிக் கிங்டம் முதல் எப்காட் வரை - பகுதி 1

வால்ட் டிஸ்னியின் கனவு உலகமான ஆர்லண்டோ டிஸ்னி வேர்ல்டுக்கு ஒரு வர்ணனைப் பயணம்.
Disney World Travel
Disney World TravelImage Credit: Walt Disney World
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

ஒரு தனி மனிதர் திறம்படச் செயல்பட்டால் ஒரு தனி பொழுது போக்கு உலகத்தையே உருவாக்கி, உலக மாந்தரை மகிழ்விக்க முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம், வால்டர் இலியாஸ் டிஸ்னி என்ற அமெரிக்கர். நமது விவேகானந்தரால் உலகப் புகழ் பெற்ற சிகாகோவில் பிறந்த இவர், சிறு வயதிலேயே ஓவியத்தில் அதிக ஈடுபாடு கொண்டு விளங்கிப் பிற்காலத்தில் கார்டூனிஸ்டாகவும், அனிமேஷன் பில்ம் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராகவும், வாய்ஸ் ஆக்டராகவும் மாறிச் சரித்திரம் படைத்தார். அவரும் அவரது குழுவினரும் உருவாக்கிய மிக்கி மவுஸ், மின்னி மௌஸ், ஓஸ்வால்ட் த லக்கி ராபிட், டொனால்ட் டக், கூபி போன்ற பல கற்பனைப் பாத்திரங்கள் இன்றும் நம்மை மகிழ்வித்து வருவதுதான் அவரின் பெருமைக்குப் பேரடையாளம்.

கோல்டன் க்ளோப், எம்மி விருதுகளுடன் அகாடமி விருதுகளையும் பலமுறை தட்டி வந்து வரலாற்றில் இடம் பிடித்தார். தன் சகோதரருடன் இணைந்து பல படங்களைத் தயாரித்தார். ஒரு தனி மனிதரின் நியாயமான விருப்பங்கள் முன்னேற சந்ததியினரும் உழைக்க வேண்டும். மிகச் சிலருக்கே அந்தப் பாக்கியம் கிடைக்கிறது! - நமது நடிகர் சிவகுமாருக்குக் கிடைத்ததைப் போல.

1966ல் 65 வயதிலேயே நுரையீரல் புற்று நோயால் அவர் இறந்து விட்டாலும் அவர் கனவு கொண்ட உலகம் பரந்து விரிந்து உலக மக்கள் தங்கள் உள்ள இறுக்கங்களை இறக்கி வைத்து இளைப்பாறும் இடமாக இன்றும் விளங்கி வருகிறது. அவருக்கு ஒரு நன்றி கூறி விட்டு நாம் டிஸ்னி வேர்ல்டுக்குள் செல்வோம்.

ஆர்லண்டோவின் டிஸ்னி வேர்ல்டில் நான்கு தீம் பார்க்குகள் உள்ளன. குறைந்தது ஒவ்வொன்றுக்கும் ஒரு நாளாவது ஒதுக்கியாக வேண்டும். இப்பொழுது நாம் ‘மேஜிக் கிங்டம்’ செல்கிறோம். நீண்ட நெடிய பார்க்கிங்கில் நாம் காரை நிறுத்தி விட்டு இறங்கியதுமே, நிறுவனத்தின் ட்ராம் நம்மை ஏற்றிக் கொண்டு போய் என்ட்ரசின் டிக்கட் கவுண்டர் அருகில் விட்டு விடுகிறது. உள்ளே சென்றதும் இரண்டு வழிகளில் நம்மை கிங்டத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். ஏரிக்கு அப்பால் இருக்கும் அதற்கு ஏரியில் செல்லும் ஃபெரி மூலமாகவோ அல்லது ஏரியைச் சுற்றிச் செல்லும் மோனோ ரயிலிலோ செல்லலாம். ஆப்ஷன் நம்முடையது.

பலவித ரைடுகள். ஏகப்பட்ட ரெஸ்டாரண்டுகள். நேரம் போவதே தெரியாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள் மக்கள்!

மெயின் ஸ்ட்ரீட்டின் உள்ளே நுழைகிறோம். இரண்டு பக்கமும் பலவிதமான பொருட்களை விற்கும் கடைகள்-வரிசையாக.

அதற்கு அப்பால் ரைட்ஸ் ஒவ்வொன்றாக ஆரம்பமாகி விடுகின்றன. அது என்னவோ தெரியவில்லை, குடை ராட்டினமே பிரதானம்.

Disney World Travel
Disney World Travel

அதனை அடிப்படையாகக் கொண்டு பல மாற்றங்கள் வந்து விட்டன. பெற்றோர் என்ற அச்சாணியைச் சுற்றி நமது குழந்தைகள் கிராமங்களிலிருந்து மெதுவாக முதலில் நகருக்கு மாறினார்கள். அதன்பிறகு நாடுகளுக்கும், கண்டம் விட்டுக் கண்டங்களுக்கும் மாறும் நிலை வந்தது. அதைப்போலவே சாதாரணமாகத் தொங்கும் நாற்காலிகளைக் கொண்ட குடை ராட்டினங்கள் குதிரை, யானை மேல் பயணம் செய்யும் நிலைக்கு மாறி, அதுவே சுற்றி வரும்போதே ஏறி இறங்கும் சீட்டுகளாக மாறி, முன்னேறி விட்டன. இது மேஜிக் கிங்டம் அல்லவா? எனவே ‘கப்’களை வடிவமைத்து அதற்குள் நம்மை அமர வைத்துச் சுற்ற விடுகிறார்கள்.

அடுத்து, சிறு படகு குறிப்பிட்ட பாதையில் உள்ளேயே சுற்றி வருகிறது. அமர்ந்திருக்கும் நமக்கு இரண்டு பக்கங்களிலும் பலவிதமான வண்ணக் காட்சிகளை விருந்தாக்குகிறார்கள். டிஸ்னி வேர்ல்ட் என்பதால், வால்ட் டிஸ்னி தோற்றுவித்த மவுஸ், டக் ஆகியவை பல இடங்களிலும் காட்சிப் படுத்தப்பட்டு நம்மை மகிழ்விக்கின்றன.

சிறுவர்களை மகிழ்விப்பதன் மூலம் பெரியவர்களையும் உற்சாகமடையச் செய்யும் விதமாகப் பார்த்துப் பார்த்து பலவற்றை அமைத்துள்ளார்கள். ஓர் அரங்கின் உள்ளே நாம் சென்றதும் இரண்டு இளவரசிகளை நம்மைச் சந்திக்கவைக்கிறார்கள். உலகில் வெள்ளைத் தோலுடனும் கறுப்புத் தோலுடனும் மக்கள் இருப்பதால், வெள்ளைத் தோல் கொண்ட இளவரசியையும், கறுப்புத் தோல் கொண்ட இளவரசியையும் இங்கு பார்க்க முடிகிறது.

சிறுவர்களுடன் அவர்கள் அளவளாவி, மகிழ்ச்சி அளிக்கிறார்கள்.

பெரியவர்களுடனும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள்.

அக்காலத்திலிருந்து, எக்காலத்திலுமே கார் ஒருவரின் பெருமையைப் பறை சாற்றும் சொத்தாகவே மதிக்கப்பட்டு வருகிறது. அதில் பயணம் செய்வது எப்பொழுதுமே மகிழ்ச்சி அளிப்பதுதான். அதனால்தான் நம்மூர்களில் அதனைப் ‘பிளஷர்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள். அதிலும் இக்கால சொகுசுக்கார்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! எத்தனை சொகுசுக் கார்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தாலும் இங்கும் காரோட்டிகளுக்குக் குறைவில்லை. ஏற்கெனவே போடப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளை ஒட்டியே இந்தக் கார்கள் பயணிக்கின்றன.

நாம் ஆக்சிலேட்டரை அழுத்தி வேகத்தைக் கூட்டிக் குறைத்தால் போதும். ஜாலியாக ஒரு ரவுண்ட் சென்று வரலாம்.

இன்னொரு ரைடில் ஓபன் பஸ் போன்ற அமைப்பில் நம்மை உட்கார வைத்து, உள்ளுக்குள்ளேயே சுற்றி வருகிறார்கள். இரண்டு பக்கமும் அழகழகான காட்சிகள் நம் கண்களுக்கு விருந்தாகி நம்மை ஆச்சரியப்படுத்தி, அசர வைக்கின்றன.

அடுத்த ரைடுக்குப் போகும் முன்னால் சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளலாமா?

தொடர்ந்து பயணிப்போம்!